Sunday, October 7, 2007

இனப்பிரச்சினையில் மேற்குலகின் இரட்டை வேடம்

-அருஸ் (வேல்ஸ்)-


சர்வதேச சமூகத்தில் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக காண்பிக்க நீண்டகாலமாக இலங்கை அரசும் தென்னிலங்கை பேரினவாதிகளும் முயன்று வருகின்றனர்.

தென்னிலங்கை பேரினவாதிகளும் இலங்கை அரசும் தங்களுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தவென சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கும் விளக்கமும் பயங்கரவாதத்தை மையப்படுத்தியதே.

அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவும் இதனையே முன்னிறுத்தியிருந்தார்.

இனப்பிரச்சினை தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இருட்டடிப்புச் செய்வதற்கும் விடுதலைப் போராட்டத்தை முழுமையான இராணுவக் கண்ணோட்டம் கொண்ட பயங்கரவாதமாகக் காட்டுவதற்கும் மேற்படி வாதம் அவர்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகின்றது.

இதற்கொரு முற்றுப்புள்ளியாகவே அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை என சர்வதேச தமிழ் சட்ட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தையும் இலங்கை அரசிடம் விடுதலைப் புலிகள் கையளித்திருந்தனர்.

ஆனால் அவை எல்லாம் தற்போது மறக்கடிக்கப்பட்டதுடன், இனப்பிரச்சினைத் தீர்வை தேடுவதற்கென சர்வ கட்சி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வ கட்சிக்குழு கூட அனைத்துக்கட்சிகளையும் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையானது. இத்தகைய சர்வகட்சிக்குழு இன்னமும் இனப்பிரச்சினைத் தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறது.

சர்வதேச சமூகமும் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை விட ஏமாந்தது போல நடித்துக்கொண்டு இருக்கின்றது என்பதே பொருத்தமானது.

சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கே பேச்சுக்கள் மூலம் தீர்வு என சிங்கள கட்சிகள் கோஷம் போடுகின்றன என்பது காலம் காலமாக கண்ட உண்மை. தற்போது சமஷ்டி முறைத்தீர்வை தாம் கைவிட்டுள்ளதாக ஐ.தே.கவும் தெரிவித்துள்ளதுடன் அதன் வேஷம் முற்றாகவே கலைந்துள்ளது.

மறைந்து போய்விட்ட அரசியல் தீர்வு, அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்கள், முடுக்கிவிடப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கை என இலங்கையின் நிலைமை தலைகீழாக மாறியுள்ள நிலையிலும் சர்வதேசத்தின் செயற்றிறனற்ற தன்மைக்கான காரணம் என்ன?
பூகோள, பொருளாதார, ஆதிக்க போட்டிகள்தான் சர்வதேசத்தின் முக்கிய வெளிவிவகார அரசியலாகும். அதற்கு இலங்கையைவிட மற்றுமொரு சிறந்த உதாரணம் மியன்மார்.

தற்போதைய உலகின் பார்வை ஆசியக் கண்டத்தில் உள்ள பௌத்த நாடாகிய மியன்மார் மீது குவிந்துள்ளது. உலக வல்லரசுகளும், வளர்ந்து வரும் வல்லரசுகளும் தமது பூகோள நலன் சார்ந்த அரசியல் போட்டிகளை அங்கும் ஆரம்பித்துள்ளன.

மியன்மாரில் ஜனநாயகம் வேண்டும் என்பதே அங்கு நடைபெற்று வரும் போராட்டங்களின் கருப்பொருளாக உள்ளது. இது மேற்குலகை கவரும் வாசகமும் கூட (ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்படாத பல அரசுகளுக்கு மேற்குலகம் ஆதரவளித்து வருவது ஊரறிந்த விடயம்).

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி மியன்மார் அரசின் பொருளாதார சரிவுகளை காரணமாகக் கொண்டு (எரிபொருள் விலையேற்றம்) ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டங்கள் தற்போது அரசிற்கு எதிரானதாக மாறியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவில் பௌத்த துறவிகள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை போலவே பௌத்த துறவிகள் மியன்மாரிலும் அதிகளவில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அங்கு இராணுவ ஆட்சியை எதிர்த்து அரசியல், இங்கு இராணுவ தாக்குதலுக்கு ஆதரவான அரசியல் அது தான் ஒரு வேறுபாடு.

மியன்மார் எங்கு உள்ளது? அதன் அரசியல் பின்புலமும், அனைத்துலகத்தின் முக்கியத்துவமும் என்ன?

மியன்மார் ஆசியக் கண்டத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ளது. அதன் எல்லைகளாக அந்தமான் தீவுகள், வங்காள விரிகுடா போன்ற கடற்பகுதிகள் இருப்பதுடன், தரைவழி எல்லைகளாக மேற்கில் வங்காளதேசமும் இந்தியாவும், வடக்கிலும், வட மேற்கிலும் சீனாவும், கிழக்கில் லாவோஸ், மற்றும் தாய்லாந்து என்பன உள்ளன.

ஏறத்தாழ 262,000 சதுரமைல் பரப்பளவுடைய (இலங்கையைவிட ஏறத்தாழ 10 மடங்கு பெரியது) இந்த தேசத்தில் 5 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

1962 ஆம் ஆண்டில் இருந்து ஒருவர் மாறி ஒருவராக அங்கு இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. இராணுவ ஆட்சியாளர்கள் பர்மா என்ற அதன் பெயரை மியன்மார் என 1989 ஆம் ஆண்டு மாற்றினர். இதனை ஐ.நா, பிரான்ஸ், ஜப்பான் போன்றவை ஏற்றுக்கொண்ட போதும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரித்தானியாவின் பி.பி.சி. சேவையில் தற்போதும் பர்மா என்றே செய்தி அறிக்கையில் கூறப்படுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

1990 களில் இருந்து இராணுவ ஜெனரல்களே மியன்மாரை ஆட்சி செய்கின்றனர். இந்த காலப்பகுதியில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி பெரும் வெற்றியை ஈட்டிய போதும், ஆட்சிப் பொறுப்பில் இருந்த இராணுவ அரசு (ஜுன்தா) அதிகாரத்தை கையளிக்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா மியன்மார் அரசு மீது பொருளாதார, படைத்துறை உதவிக்கான தடைகளை கொண்டு வந்திருந்தது. ஆனால் அவை இன்றுவரை பாரிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை.

மியன்மார் அரசுடன் சீனா கொண்டுள்ள நெருங்கிய நட்புறவே அதற்கான காரணம். மியன்மாரின் எதிர்க்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணிக்கு 62 வயதான ஆங் சான் சூகி தலைமை வகிக்கின்றார். இவருக்கு 1991 ஆம் ஆண்டு மேற்குலகம் நோபல் பரிசையும் வழங்கியிருந்தது.

கடந்த 18 வருடங்களில் 12 வருடங்கள் வீட்டுக்காவலில் இருந்து வந்த இவரின் மீதும், இவரது தொண்டர்கள் மீதும் அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது அங்கு வழமையானது.

எனினும் 90 வீதம் பௌத்த மதத்தவரைக் கொண்ட மியன்மாரில் பௌத்த துறவிகளின் அரசியல் பிரசன்னமும் அதிகம். அண்மைய ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் அதிகம் பங்கெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இராணுவ அரசிற்கு சீனா முழு ஆதரவை அளித்து வருகின்ற போதும் இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளும் அதனை எதிர்க்கவில்லை. அதற்கான காரணம் பூகோள மற்றும் பொருளாதார நலன்கள் தான். இதே பூகோள மற்றும் பொருளாதார நலன்களை கருத்திற் கொண்டே மேற்குலகம் ஆங் சான் சூகிக்கான ஆதரவையும் அரசின் மீதான அழுத்தங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

மியன்மார் அதிகளவான விவசாய உற்பத்தி வளங்களையும், கனிமவளங்கள், இரத்தினக்கற்கள், தேக்கு மரங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு படிமங்களையும் கொண்டுள்ளது. பிரித்தானியாவின் காலனித்துவ காலத்தில் தென்கிழக்காசியாவில் மிகவும் வளம்கொழித்த நாடாக மியன்மார் விளங்கியது. அது உலகில் அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாகவும் விளங்கியது. இயற்கை வளமும் அங்கு அதிகமானது, உலகின் 75 வீதமான தேக்கு மர தேவைகளை மியான்மாரே உற்பத்தி செய்து வருகின்றது.

இந்துமா கடல் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதையின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் மியன்மாரின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது என 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியா உணர்ந்து கொண்டதாலும் தென் ஆசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மேற்படி கடற்பாதைகள் தேவை என்பதாலும் பர்மாவில் பிரித்தானியா கால் பதித்திருந்தது. இந்த பொருளாதார வளங்களிலும், பூகோள அமைவிடத்திலுமே மியன்மார் மீதான உலக அரசியல் பெருமளவில் தங்கியுள்ளது.

உலகில் அதிக சனத்தொகை கொண்ட இரு பெரும் நாடுகளான சீனாவும், இந்தியாவும் மியன்மாருடன் வர்த்தக உறவுகளை பேணிவருகின்றன. தாய்லாந்தின் நிலைமையும் அதே போன்றதே. இந்த மூன்று நாடுகளுக்கும் மியன்மாரின் எண்ணெய், எரிவாயு மற்றும் இயற்கை வளங்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. மேற்குலகத்தின் நிலையும் அதுவே.

எனினும் மியன்மாருடன் அதிகளவான வர்த்தக மற்றும் இராணுவ உறவுகளை சீனாவே பேணி வருகின்றது. இதற்கு பல காரணங்கள் உண்டு. மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் அதிகளவான எல்லைப் பிராந்தியம் (ஏறத்தாழ 2,200 கி.மீ) சீனாவை அண்டியே உள்ளது.

மேலும் அதன் உயர்ந்த மலைத்தொடர்களும் சீனாவின் எல்லைகளை அண்டியே உள்ளன.
அது தவிர மியன்மார் ஊடாக இந்து சமுத்திரத்திற்குள் நுழைவதும் சீனாவுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும். இதனால் தான் மியன்மார் அரசுடன் சீனா மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றது.

மியன்மார் அரசிற்கான பிரதான ஆயுத விநியோகஸ்தராக அது விளங்குவதுடன், நிதி உதவிகள், கடன் போன்றவற்றையும் வழங்கி வருகின்றது. கடந்த 10 வருடங்களில் வர்த்தகர்களும், வர்த்தகத்தை ஆரம்பிப்பவர்களுமாக ஒரு மில்லியன் சீன மக்கள் அங்கு குடியேறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே சீனா மியான்மார் தொடர்பாக தனது நிலையில் இறுக்கமாகவே இருக்கும் என்பது தெரிந்த விடயம். ஐ.நாவில் கொண்டு வரப்படும் எந்த விடயத்தையும் அது புறம்தள்ளவே முயலும். மியான்மாருடன் சீனாவைப் போன்று இறுக்கமான உறவுகளை இந்தியா கொண்டிருக்காத போதும் வர்த்தக உறவுகளை இந்தியா பெருமளவில் பேணிவருகின்றது. எனவே தான் மியன்மாரில் நடைபெறும் அகிம்சைப் போராட்டங்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க முடியாத நிலையில் உலகின் பெரிய அஹிம்சை நாடு என தன்னை கூறிக்கொள்ளும் இந்தியா விழிபிதுங்கி நின்றிருந்தது. இது மேற்குலகத்தினரை ஆச்சரியத்திலும் ஆழ்த்தியிருந்தது.

பொறுமை இழந்த பிரித்தானியாவின் முன்னணி ஊடகம் ஒன்று இந்தியாவின் அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பில் கேள்வியை எழுப்பிய போதும் இந்தியா அதற்கு மழுப்பலான பதிலையே அளித்திருந்தது.

சீனாவின் பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஆசிய கண்டத்தில் குவிந்துள்ள உலகின் பார்வை தற்போது மியன்மாரில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. மியன்மாரின் அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு உலக வல்லரசுகளுக்கும், பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையில் கண்ணுக்கு தெரியாத போட்டிகள் நிகழ்ந்து வருகின்றன.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளுக்கு எதிராகத் தன்னை பாதுகாத்துக் கொள்ள எண்ணியுள்ள மியன்மார் அரசு அதன் எண்ணெய் வளத்தை அபிவிருத்தி செய்யும் உரிமையை சீனாவுக்கு வழங்கியுள்ளது.

ஆனால் எண்ணெய் வளத்தை சீனா முழுமையாகக் கையகப்படுத்திக் கொண்டால், அது தனக்குச் சவால் விடக்கூடிய உலக வல்லரசாக வளர்ந்து வரும் வேகம் மேலும் துரிதப்படும் என்பதை உணர்ந்த அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் மியான்மார் அரசிற்கு எதிரான வேலையில் இறங்கியுள்ளன.

மியன்மார் அரசு மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக மக்களின் ஆர்ப்பாட்டங்களை அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் காலத்துக்குக் காலம் பயன்படுத்தி வந்த போதும் இன்று அது உக்கிரம் அடைந்துள்ளது. தற்போதும் மியன்மாரில் நடைபெற்று வரும் அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு மேற்குலகம் இரகசிய ஆதரவு வழங்கி வருவதுடன், தனது நவீன ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆளுமைகளின் மூலம் அதனை அனைத்துலக மட்டத்தில் விரைவாக பரப்பியும் வருகின்றது.

மேற்படி போராட்டங்களின் ஊடாக மியன்மார் அரசில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து தனது செல்வாக்கைப் பெருக்கி அதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளம், கனிம வளம் மற்றும் இந்துமாகடல் பாதைகள் ஆகியவற்றை தான் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் எனவும் அதன் மூலம் சீனாவுக்கான அழுத்தங்களை அதிகரிக்கலாம் எனவும் அமெரிக்கா கருதுகிறது.

ஆனாலும் இந்த விடயம் ஐ.நாவின் பாதுகாப்புச்சபை வரை ஓங்கி ஒலித்துள்ளது. மேற்குலகத்தின் ஊடகங்கள் கூடியிருந்து ஓலமிடுகின்றன. மியன்மாருக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி இப்ராகிம் கம்பாரி (ஐடிசயாiஅ புயஅடியசi) மிக வேகமாக மியன்மார் வந்ததுடன் அவர் ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை சந்திப்பதற்கும் எல்லா பகுதிகளுக்கும் விஜயம் செய்வதற்குமான ஒழுங்குகளை அழுத்தங்களின் மூலம் மேற்குலகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேலும் பிரசெல்சில் கூடிய ஐரோப்பிய ஒன்றியம் மியான்மார் இராணுவ அரசின் மீது மேலதிக அழுத்தங்களை இடுவதற்கும் தீர்மானித்துள்ளது.

அதாவது இராணுவ அரசின் அதிகாரிகளுக்கான நுழைவு அனுமதிகள் மீதான தடையை அதிகரித்தல் (ஏளைய டியn) வர்த்தகத்தடை (உலோகம், தேக்கு மரம், இரத்தினக்கற்கள் ஏற்றுமதி போன்றவை மீதான தடைகள்) போன்றன கொண்டுவரப்படும் என ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த தடையில் உள்ள ஒரு வேடிக்கையான விடயம் என்னவெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மியன்மாரில் வர்த்தகம் புரிவதற்கு தடை இல்லையாம்.

அதாவது தமது வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்படாத படி வடிவமைக்கப்பட்ட தடை அது.
இப்படியாக அண்மைக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் ஒப்புநோக்கத்தக்கவை.

ஒன்று சூடான். அங்கு உள்நாட்டுப் போருக்கான தீர்வாக ஒரு இடைக்கால நிர்வாக கட்டமைப்பு முக்கியமானது என்பதும் ஒரு சமூகத்தின் சுயநிர்ணய உரிமை ஜனநாயக ரீதியாக தீர்மானிக்கப்படலாம் என்பதும் தவிர்க்க முடியாத விடயம் என்று சர்வதேச சமூகம் அதிலும் குறிப்பாக மேற்குலகம் கருத்தில் கொண்டுள்ளது.

சூடான் அரசின் மீதான அழுத்தங்களை கொண்டு வருவது தான் மேற்குலகின் இந்த கருத்தின் உட்பொருள். இதற்கு சூடானின் பூகோள அமைவிடம், எண்ணெய் வளம், அரேபிய பசை என்பன முக்கிய காரணம்.

இரண்டாவதாக மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு, மனித உரிமைகளை முன்னிறுத்தியுள்ள மேற்குலகம் அதற்கான தீர்வாக ஜனநாயக அரசு வேண்டும் என தனது காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை நீங்கள் மேலே பார்த்திருப்பீர்கள்.

மூன்றாவதாக இலங்கையை எடுத்துக்கொண்டால் உள்நாட்டு போர், மனித உரிமை மீறல்கள் என்பன கட்டுக்கடங்காது வியாபித்து போயுள்ளன. அதற்குரிய தீர்வாக தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும், பேச்சுக்களின் மூலம் தீர்வைக் காணவேண்டும் என கூறிவரும் மேற்குலகம் அதற்காக செயற்பட்ட வேகம் புறக்கணிக்கத்தக்கது. மேலும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதில் தான் அவை குறியாக உள்ளன.

சூடானில் ஒரு கதை, மியான்மாரில் ஒரு கதை, இலங்கையில் ஒரு கதை என சர்வதேசத்தின் இரட்டை வேடங்கள் வெளிப்படையானவை. அதாவது சூடானிலும், மியன்மாரிலும் அவை செயற்பட்ட வேகம் இலங்கையில் இல்லை. உதாரணமாக மேற்குலகம் தனது அழுத்தங்களின் மூலம் மியன்மாருக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி இப்ராகிம் கம்பாரியை மியன்மாரின் எல்லா பகுதிகளுக்கும் செல்ல வைத்ததுடன், எதிர்க்கட்சி தலைவர் உட்பட எல்லோருடனும் பேசவும் வைத்திருந்தது.

ஆனால் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் வன்னிக்கான விஜயத்தை அரசு தடுத்துள்ள போதும் யாரும் அதனை தட்டிக் கேட்கவில்லை.

எனவேதான் தமிழ் மக்களின் உரிமைக்கான ஆதரவுகளில் இருந்து சர்வதேச சமூகத்தின் போக்கை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள அரசும் தென்னிலங்கை பேரினவாதிகளும் பேச்சுவார்த்தையைக் குழப்பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாத வன்முறையாக காட்டும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்கள்

0 Comments: