"இலங்கைத் தமிழர்" என்ற தொடர், இலங்கையின் உத்தியோகபூர்வ ஏடுகளில், இலங்கையைத் தமது பாரம்பரிய பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிப்பிடுவதற்கான ஒரு தொடராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத்தொடர், இலங்கையில் இப்பொழுது வாழ்ந்து வருகின்ற இன்னொரு தமிழ்க்குலத்தினராகிய "இந்திய வம்சாவழித் தமிழரை" உள்ளடக்கும் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இலங்கையின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் அவர்களை "இந்தியத் தமிழர்" (Indian Tamils) என்றே குறிப்பிடும். ஆயினும் 1960இல் வந்த சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தமும் அதன் பின்னர் 1988ல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும், இந்தியத் தமிழர்களில் ஒரு பகுதியினரை இலங்கைப் பிரஜைகளாக ஏற்றுக்கொண்டுள்ளன. "இலங்கைத் தமிழர்" என்ற உத்தியோக பூர்வ வரையறைக்குள், இந்த "இந்திய வம்சாவழித் தமிழர்" கொண்டுவரப்படுவதில்லையெனினும், இவர்கள், இலங்கையைத் தமது நாடாகக் கொள்ளும் ஒரு தமிழ்க் குழுமத்தினர் என்னும் வகையில், இந்நாட்டின் தமிழ்மொழிப் பயன்பாடு, பிரயோகம் ஆகியனவற்றைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர் போன்ற ஒரு நிலையினராகவே உள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஓர் உண்மையாகும்.
இலங்கையின் இனக்குழும வகுப்பு முறைமையை "தமிழர்", "சிங்களவர்", "முஸ்லிம்கள்" என்று பார்க்கும் முறைமை உண்டு. இந்த இனக்குழும வரைவிலக்கணத்தில், இலங்கைச் சோனகர் (Sri Lankan Moors) தனியொரு இனக்குழுமமாகக் கொள்ளப்படுவர். இஸ்லாத்தைத் தமது மதமாகக் கொண்ட மலாய் மக்கள் (Malays) இன்னொரு இனக்குழுமமாகக் கொள்ளப்படுவர். இலங்கைச் சோனகரின் தாய்மொழி தமிழ் எனினும் அவர்களை மொழிவழி இனக்குழுமமாகப் பார்க்கும் வரலாற்றுப் பாரம்பரியம் இல்லை.
சிங்கள மக்கள் சம்பந்தப்பட்ட சனத்தொகையை பார்க்கும்பொழுது, "கண்டியச் சிங்களவர்" (Kandyan Sinhalese), "தாழ்நிலப் பகுதிச் சிங்களவர்" (Low Country Sinhalese) என்ற ஒரு பாகுபாட்டைக் குறிப்பிட்டுவந்துள்ளனர். ஆனால் அண்மையில் வெளியான இலங்கை அரசின்"இலங்கைச் சனநாயக சமதர்மக் குடியரசின் புள்ளிவிபரக் கையடக்க நூலில் ("Statistical Pocket Book of the Democratic Socialist Republic of Srilanka 1998", Department of Census & Statistics) இந்த இருபிரிவுகளும் குறிப்பிடப்பெற்று, ஆனால் அடைப்புக்குறிக்குள் ஒன்றாக்கப்பெற்று, அவற்றின் கூட்டுத்தொகைக் கணக்கே, சிங்கள மக்களுக்கு உரிய புள்ளிவிபரங்களாகத் தரப்பட்டுள்ளன (பக். 25-26).
இனக்குழுக்களாக வகுத்துக் கொள்வதில் வரலாற்றுப் பாரம்பரியம், பண்பாட்டு உணர்வு, பிரக்ஞை ஆகியன முக்கிய இடம் பெறுவது இயல்பே.
ஆயினும் இலங்கைப் பிரஜைகள் எனும் வகையில், ஒவ்வொரு இனக்குழுமத்துக்கும், இலங்கையின் பொது வாழ்வில் எத்தகைய இடம் உள்ளது என்பது அச்சாணியான ஒரு விடயமாகும். இந்த "இடத்தினை" இலங்கையின் ஆட்சியாப்பு (Constitution) எவ்வாறு வரையறை செய்துள்ளது என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். பல இனக்குழுமங்கள் உள்ள நாடுகளில், அவ்வந் நிலங்களில் வாழும் ஒவ்வொரு குழுமத்தினதும், தனித்துவத்தையும் சுய அடையாளத்தையும் பேணுவதற்கு, ஆட்சி யாப்பிலேயே அதற்கான உறுதிப்பாடு இருப்பது அவசியமாகும். இந்தக் கண்ணோட்டத்திலே பார்க்கும்பொழுது, இலங்கையின் தற்போதைய ஆட்சியாப்பில், இலங்கையைத் தமது தாய் நாடாகக் கொண்ட தமிழ் மக்களின் "இடம்" யாது என்பது இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்பது துல்லியமாகத் தெரிகிறது.
இலங்கையில் இன்று நடக்கும் இனக்குழும யுத்தம் (ethnic War) உண்மையில் இந்த "இடம்" எப்படியானதாக அமைய வேண்டும் என்பது பற்றியதே என்று கூறலாம்.
இந்தச்சூழல் ஓர் அடிப்படையான கேள்வியை எழுப்புகின்றது.
அதாவது இலங்கையின் வாழ்வில், இலங்கையின் தமிழர்கள் எத்தகைய இடத்தைப் பெறுகிறார்கள். இலங்கை எனும் "தேச" வட்டத்தினுள் அவர்கள் எத்தகைய பாகத்தை வகிக்கின்றனர். -- அதாவது அவர்களின் "வகிபாகம்" (Role) யாது? எனும் முக்கியமான கேள்வி எழும்புகின்றது. இந்த விடயத்தை இயன்ற அளவு "விடயிநோக்காகப்" (Objective) பார்த்து, ஆராய்வது அவசியமாகும். அந்த நோக்குடனேயே இந்தப் பொது ஆய்வு விடயம், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால், ஒரு தொடர் ஆய்வுக்கான பொதுப் பொருளாகக் கொள்ளப்படுகிறது.
இலங்கையில் தமிழர் பெறும் இடத்தை மிக விரிவான தனித்தனி ஆய்வுகளாக எடுத்துக்கொள்ளும் ஆய்வுக்கட்டுரைகள் இருபத்திரண்டு முதலில் உரையாகவும், பின்னர் பிரசுரங்களாகவும் வெளிவரவுள்ளன.
இந்தத் தொடரின் தொடக்கவுரையாக அமைவது, இலங்கைத் தமிழர் யார் எவர்? எனும் உரையாகும்.
"இலங்கைத் தமிழர்" என்ற பதத்தின் பின்புலம் யாது? அது எவ்வாறு உருவாக்கப்பெற்றது? இலங்கைத் தமிழர் என்ற பிரக்ஞையின் வெளிப்பாடுகள் யாவை? இலங்கைத் தமிழர் என்ற அரசியல் ஒருமைப்பாட்டுக்குள் நிலவும் பிரதேசக் கூறுகள் யாவை? பிரதேசத் தனித்துவங்களையும், அரசியல் நிலை ஒருமைப்பாட்டையும் எவ்வாறு பேணுவது போன்ற விடயங்கள் பற்றிப் பேசுவது அவசியம் என்று கருதுகின்றேன்.
நம்மிடையே காணப்படும் "அக - அமைப்பு தனித்துவங்கள்" பற்றிப் பேசாது, ஒருமைப்பாட்டையே அழுத்திப்பேசவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு பலரிடையே உண்டு. அதனால் நாம் நமது இருப்பின் யதார்த்தங்கள் பலவற்றைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். இந்த யதார்த்தத்தினைப் பற்றிப் பேசாது விடுவதனால், நாம் அவற்றைப் புறக்கணிக்கின்றோம் என்றும், குறிப்பாக இது யாழ்ப்பாணச் சிந்தனை மரபின் மேலாதிக்கப் போக்குகளில் ஒன்று என்றும் குறை கூறப்படுவதற்கு இத்தகைய மனோபாவம் காரணமாக அமைந்துள்ளது என்பதை வற்புறுத்த வேண்டுவது அவசியமாகின்றது. வேற்றுமைகளிடையே ஒற்றுமை காண்பதிலேயே உண்மையான ஒற்றுமை தோன்றும் என்பதையும்,அவ்வவ் வேளைகளுக்கேற்ற முறையில் ஒற்றுமை பற்றிப் பேசக்கூடாது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளல் அவசியம்.
------------------------------------------------------
2
"இலங்கைத் தமிழர்" எனும் பதம், இலங்கையைப் பாரம்பரியத் தாயகமாகக் கொண்ட தமிழர்களைக் குறிப்பதற்கான பதம் என்பதனை தொடக்கத்திலேயே பார்த்தோம்.
இந்தத் தொடரில் வரும் "இலங்கை" என்னும் முன்ஓட்டு(Pre-Fix) இந்தத் தமிழரிடையே (இலங்கைத் தமிழருக்கு) எத்தகைய ஒரு அரசியற் சூழலில், எவ்வௌ; அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது என்பது பற்றிய தெளிவு முதலில் அவசியமாகின்றது.
இலங்கை முழுவதையும், ஒரு தனி அரசியல் அலகாகக் கொள்ளும் மரபு மேனாட்டாட்சியினரின் வருகையுடனேயே வருகின்றது.
மேனாட்டாட்சியருள் முதலில் வந்த போர்த்துக்கேயரின் வருகையின் (1505) முன்னர் இலங்கையில் மூன்று முக்கிய அரசுகள் (States) இருந்தன. அவையாவன:
கோட்டே (Kotte) அரசு : இது இலங்கையின் மேற்குப்புறமாக, கொழும்புக்கு அருகேயுள்ள நிலப்பரப்பைக் கொண்டதாகவிருந்தது.
கண்டி இராச்சியம் (Kandyan Kingdom) : இது இலங்கையின் மத்திய பகுதியிலுள்ள கண்டி நகரை இராசதானியாகக் கொண்டிருந்தது. இலங்கையின் மத்திய மலைப்பகுதி, கிழக்குப் பகுதியின் சில இடங்கள் ஆகியன இவ்வரசின் கீழ் வந்தன. சிங்கள ஆட்சித் தொடர்ச்சியை இவ் இராச்சியமே பேணி வந்தது. புத்தரின் தந்த தாது இவ்வரசின் பாதுகாப்பிலேயே இருந்தது.
யாழ்ப்பாண இராச்சியம் (Kingdom of Jaffna) : யாழ்ப்பாணத்தை ஆட்சிமையமாகக் கொண்டிருந்த இவ்ராச்சியம், வன்னிக்கு மேலேயுள்ள வடபகுதி முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தது.
இவற்றுள் கோட்டே அரசு, போர்த்துக்கேயத் தலையீடுகளினால், 1520ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேய மேலாண்மையின் கீழ் வந்தது. கண்டி அரசு போர்த்துக்கேய ஒல்லாந்த ஆட்சிக் காலங்களில் (1796 வரை) அவ்வாட்சிகளாலே கைப்பற்றப்படாது இருந்தது. பிரித்தானிய ஆட்சியின் பொழுதே (1815) கண்டி அரசு நிலையை இழந்தது.
யாழ்ப்பாண அரசு, போர்த்துக்கேயருடன் தொடர்புகள் வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, இறுதியில் 1619இல் போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பெற்று, அவர்களது ஆட்சிக்கு உட்பட்டது.
இலங்கையில் தமிழருடைய அடையாளம் பேணப்படுவதிலும், சமூக நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படுவதிலும், இவ்விராச்சியம் வகிக்கும் இடம் பற்றிப் பேட்ரம் பஸ்தியாம் பிள்ளை பின்வருமாறு கூறுவர்:
"When the Tamils had constituted a Kingdom of their own, well before the arrival of the Portugese they had gained the opportunity of developing unified social organisation and of building up of some customs of common usage. Before this period however the Tamils had been scattered both in time and space and had hence found no opportunity to develop strong instituons of their own. But with their separate state there had occured then new outgrowths in social life and this development proceeded up to the modern age, even after the end of European rule, and gave to the Tamils of Ceylon a continueing special distinction and identity which is clear even today."
(Prof. B. Bastiampillai in "The Tamils of Ceylon under Western Rule" article written for the 4th International Conference seminar on Tamil Studies, Sri Lanka, Jaffna, 1974. Later published in "North - East Sri Lanka - A Compendium published on the 50th Anniversary of Sri Lanka's Independence 1948-98 by the North - Eastern provincial council, Trincomalee, Edited by A. Nahiya - Colombo 1998, pp. 93-99.)
யாழ்ப்பாண அரசின் தோற்றத்துக்கு முன்னர் தமிழர்கள் இலங்கையில வாழ்ந்தனர்களெனினும் அவர்கள் நிரந்தரமான சமூக நிறுவனங்களை, அமைப்பு முறைமைகளைக் கட்டியெழுப்பமுயடிhதிருந்ததெனக் குறிப்பிடும் பேராசிரியர் பஸ்தியாம் பிள்ளை, யாழ்ப்பாண அரசின் எழுகை, தமிழரின் சமூக நிறுவனங்கள் கட்டியெழுப்பப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியதனாலும் அந்த அபிவிருத்தி ஐரோப்பிய ஆட்சி இலங்கையை விட்டு அகன்ற பின்னர் கூட, தமிழர்களின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்கு அவை உதவியுள்ளன எனவும் எடுத்துக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண அரசைத் தவிர, இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு வேறு சில ஆட்சி அலகுகள் இருந்தனவா என்பது ஆராயப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
"அரசு" (State) என்ற உருவமைப்புடன் யாழ்ப்பாண அரசைத்தவிர வேறு அரசுகள் இருந்தனவென்பது கூறமுடியாதுள்ளது. ஆனால் வன்னிப்பிரதேசத்திலும், மட்டக்களப்புப் பகுதியிலும் பிரதானிகளின் ஆட்சி நிலவிற்று (Rule of Chieftains) என்பதற்கான சான்றுகள் பல உள்ளன.
"ஈழநாட்டிலே பிரித்தானியரின் ஆட்சி ஏற்படுவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்ற குறுநில அரசுகளே வன்னிமைகள் என்ற சிற்றரசுகளாகும். மானிய முறையிலான சமுதாய அமைப்பு நிலை பெற்ற காலத்தில் இலங்கையின் அரசியலிலும் பொருளாதார அமைப்பிலும் வன்னிமைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பொதுவாக அவை இலங்கையின் வரட்சி வலயத்திலேயே அமைந்திருந்தன. அடங்காப்பற்று, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வன்னிக் காடுகள் தமிழ் வன்னியர்களாலேயே ஆளப்பெற்று வந்தன. (சி. பத்மநாதன் எழுதிய "அடங்காப்பற்று வன்னிமைகள்" (1658-1697) 1982 ல் பண்டாரவன்னியன் விழா மலருக்கு (வவுனியா) எழுதப்பெற்றது. மேலே கூறிய ஏ.எம். நஹியா பதிப்பித்த தொகுதியிலுள்ளது.)
மட்டக்களப்புப் பற்றிய கத்தோலிக்கக் குறிப்புக்களில், மட்டக்களப்பில் ஓர் "ஆட்சியாளர்" இருந்தமை குறிப்பிடப்படுகிறது. ஆனால் அதனை "அரசு" (State) எனக் கொள்ளலாமா என்பதில் தயக்கம் இருப்பது இயல்பே.
யாழ்ப்பாணத்தில் அரசும், மற்றைய தமிழ்ப்பிரதேசங்களில் பிரதேசப் பிரதானிகள் ஆட்சியும் நிலவியமை பற்றிய இக்குறிப்பு, இலங்கைத் தமிழ் மக்களிடையே தொடர்ந்து நிலவி வந்துள்ள பிரதேச தனித்துவ உணர்வுக்கான ஊற்றுக்காலாக கொள்ளப்படலாம்.
"இலங்கை" முழுவதும் ஒரு தனி அரசியல் அலகாகக் கொள்ளப்பட்டது, பிரித்தானிய ஆட்சி கண்டி அரசையும் தோற்கடித்த (1815) பின்னரே. கண்டி அரசும் பிரித்தானிய ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டபின்னர், அதுவரை தாம் நடத்திவந்த "இராணுவநிலை ஆட்சிப் பேணுகை"யை (British Occupation) நியமமான குடிநிலைப்பட்ட (Civil) காலணித்துவ (Colonialist) ஆட்சியாகப் பிரித்தானிய அரசு மாற்ற முனைந்தபொழுதே, முழு இலங்கையையும் ஆளுவதற்கான "இராணுவச் சார்பற்ற" ஆட்சிமுறையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. அதன் பயனாகவே கோல்புறூக் ஆணைக்குழு நியமிக்கப்பெற்றது. அதன் பரிந்துரைக்கமைய 1833ல், இலங்கை, ஐந்து மாநிலங்களைக் கொண்டதாக அமையும் என்ற அரசுப் பிரகடனம் 1833 செம்டெம்பர் 30ஆம் திகதி தேசாதிபதி ஹோற்றனால் (Horton) வெளியிடப்பெற்றது. அந்தப் பிரகடனத்தின் முகவாசகம் முக்கியமானது ஆகும்.
Whereas it has been determined by Her Majesty's Government that the several Provinces or Districts in which the Island of Ceylon and its dependants have heretofore been divided shall as regards the collection of the revenue and the extent of authority to be exercised by the respective Government Agents, be incorporated and that as regards those objects, the said Island and its dependencies shall, for the future, be divided into and compromised within five provinces to be denominated respectively the northern, Southern, Eastern Western and central Provinces. (V. Mh;. mUs;gpufhrk;. "The Traditional Homeland of the Tamils" - Vol.I, Colombo, 1996, gf;. 299.)
இலங்கை என்பது ஒரு தனி அரசியல் அலகாகியதன் பின்னர் அந்தக் காலணித்துவ ஆட்சியின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிரான குரல் எழும்பத் தொடங்கியபொழுதும், இந்தப்புதிய அரசியல் அலகினுள் தம்முடைய அரசியல் அந்தஸ்துப் பற்றிய கோரிக்கைகள் எழத்தொடங்கியபொழுதும், இலங்கை நிலைப்பட்ட பிரக்ஞை வளரத் தொடங்கிற்று எனலாம்.
இந்தப் பிரக்ஞை வளர்ச்சியில் இரண்டு படிநிலையைப் பிரித்தறிய வேண்டியுள்ளது. காலணித்துவ ஆட்சிக்கு எதிரான துலங்கல்களில் (Responses) முதலில் தோன்றியது பண்பாட்டு எழுச்சியேயாகும். அரசியற் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னர் பண்பாட்டுத் தனித்துவ நடவடிக்கைகளே முதலில் ஏற்பட்டன. அந்தத் தனித்துவ அழுத்தப்பாடு முதலில் சைவர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள் என மதநிலைப்பட்டதாக, மதநிலையையும் இனக்குழும நிலையையும் இணைப்பனவாக அமைந்தன. (சைவ-தமிழ்; பௌத்த - சிங்களம்).
இதனைச் சற்று விவரமாக நோக்க வேண்டுவது அவசியம்.
பிரித்தானிய ஆட்சி நிறுவப்பட்டு, அது நிலையான காலனித்துவ ஆட்சி முறையை நடத்தத் தொடங்கிய காலம் முதல் (1833) அதன் தாக்கம், இலங்கையின் இனக்குழுமங்களின் பாரம்பரிய அமைப்பு முறைமைகளினை படிப்படியாகத் தாக்கத் தொடங்கிற்று. குறிப்பாக, காலனித்துவ ஆட்சிக்கு வேண்டிய இடைநிலை, அடிநிலை அலுவலர்களைத் தயார் செய்வதற்கும், தனது காலனித்துவ ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும் வேண்டிய ஒரு கல்வி முறைக்கு இவ்வாட்சி உதவிற்று. ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தும் கல்வி, இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய தேவையாயிற்று. இந்தக் கல்விமுறை பிரித்தானிய ஆட்சி தொடக்க காலங்களில், புரட்டஸ்தாந்த மிஷனரிமார்களின் கைகளிலேயே இருந்தது. அந்த மிஷனரிமார்கள் ("தேவ ஊழியப் பணியினர்") இக்கல்வியை (ஆட்சிக் கல்வியை)க் கிறிஸ்தவ மதமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பான கருவியாக மேற்கொண்டிருந்தனர். மெதடிஸ்த சபையினர், ஆங்கிலத் திருச்சபையினர், அமெரிக்கமிஷன் திருச்சபையினர் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இப்பணிகளைச் செய்து வந்தனர். மெதடிஸ்த சபை மட்டக்களப்பிலும் தொழிற்பட்டது. அமெரிக்க மிஷன் மட்டக்களப்பில் பணியாற்றவில்லை.
இந்த மிஷனரிச் சபையினர்களின் மதமாற்ற, கல்விப்பிரயோக நடைமுறை பாரம்பரிய சமூகத்தில் மக்களை, சமூக அமைப்பினைப் பாதிக்கத் தொடங்கியது. ஆங்கில ஆட்சியின் ஒரு எடுகோளான "கூட்டத்தின் முன் சமம்" என்ற கோட்பாடும், கிறிஸ்தவ மிஷனறிமாரின் பரந்துபட்ட செயற்பாடுகளும் முன்னர் அதிக சமூக அசைவியக்கம் பெற்றிருந்தோரிடையே சில புத்தெழுச்சிகளை ஏற்படுத்தியது. இதனால் சமூக அசைவாக்கம் (Mobility)ஏற்படத் தொடங்கிற்று.இந்த அசைவாக்கம் பாரம்பரியப் பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிற்று.
இந்த முறைமையான கல்வி - மிஷனரிமார் வழிவரும் ஆங்கிலக்கல்வி- யாழ்ப்பாணத்திலேயே அதிகம் காணப்பட்டது. இதன் காரணமாக இந்தக் கல்வி முறைக்கான எதிர்ப்பும் யாழ்ப்பாணத்திலேயே தொடங்கிற்று. மேலும் சிங்களப் பகுதிகளில் வரலாற்று அநுபவங் காரணமாக - பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டமை காரணமாக - தாழ்நிலப் பகுதிச் சிங்களவர்களிடையேயும் (இவர்கள் 1520களிலிருந்தே அந்நிய ஆட்சிக்குப் பழக்கப்பட்டவர்கள்), அந்நிய ஆட்சிக்கு 1815 இலிருந்தே முகங் கொடுக்க வேண்டியிருந்த கண்டியப் பகுதிச் சிங்களவர்களிடையேயும் கணிசமான வேறுபாடு காணப்பட்டது. இதில் புவியியற் காரணிகளும் முக்கிய இடம் வகித்தன. இந்த நிலைமைகளால் சிங்கள மக்களிடையே உடனடியாகப் பண்பாட்டுப் பிரக்ஞை மேற்கிளம்பவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் போர்த்துக்கேய ஒல்லாந்த ஆட்சிகளில், அவர்கள் பெருத்த இன்னல்களை அநுபவிக்கவேண்டி ஏற்பட்டது. (முஸ்லிம்களின் வணிக முதன்மையை ஒழிப்பதில் அவர்கள் முக்கிய கவனஞ்செலுத்தினர்).
1822 முதல் 1879 வரை வாழ்ந்த, மெதடிஸ்த திருச்சபையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த, அக்கால யாழ்ப்பாணத்து உயர் சைவத் தமிழ்க் குடும்பங்களுக்கு இருந்த அரச உத்தியோகத் தொடர்புகளைக் கொண்டிருந்த, கந்தப்பர் ஆறுமுகம் ஆகிய அறுமுக நாவலர், யாழ்ப்பாணச் சைவத் தமிழ் மக்களின் 'கிறிஸ்தவ எதிர்ப்பை' முன் நின்று நடத்தினார். இந்த எழுச்சி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாக அமையாது, சைவத் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தனித்துவத்தை வற்புறுத்துவதாகவே அமைந்தது. காலனித்துவத்துக்கான துலங்கல் முதலில் கிறிஸ்தவ எதிர்ப்பாகக் கிளம்பியது.
ஆறுமுகநாவலர் இதற்கான வரன்முறையான எதிர்ப்பை, 1848ல் ஆரம்பித்தார். இவ்வியக்கம் புரட்டஸ்தாந்து மிஷனரிமார்களைப் பெரிதும் பாதித்தது.
ஆறுமுகநாவலர் தமது பண்பாட்டுத் தனித்துவ நிலைநாட்டல் இயக்கத்தை யாழ்ப்பாணத்தில் மாத்திரம் மையப்படுத்தாது, இந்தியத் தமிழகத்திலும் அதற்கான ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்திய (தமிழக)ச்சூழல், இலங்கைச்சூழலிலிருந்து வேறுபட்டு இருந்ததன் காரணமாக, ஆறுமுக நாவலர் இலங்கைத் தமிழ் மக்களின் - குறிப்பாக சைவத் தமிழ் மக்களின் - பண்பாட்டுத் தனித்துவத்தையே முதன்மைப் படுத்தினார். உதாரணமாக ஈழத்துத்தமிழிலக்கியப் பாரம்பரியத்தை அவர் முக்கியமானதாக வற்புறுத்தினார். இந்தச் சைவத்தமிழ்ப் பண்பாட்டுத் தனித்துவத்தை, அரசியலிலும் பேசுவதற்கும், பேணுவதற்குமென ஒரு வாய்ப்பு அப்பொழுது இருந்தது. 1862 முதல் 1879 வரை தமிழருக்கான நியமன அங்கத்தினராக இருந்த சேர். முத்துக்குமாரசுவாமி நாவலரைப் பற்றிச் சட்டவாக்கச் சபையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் குடியேறியுள்ளனர் எனினும், ஆங்கில ஆட்சியின் தாக்கத்தையும் பாதிப்பையும் உணரத்தக்க நிலைமை கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளில் வசித்த முஸ்லிம்களிடையேயே இருந்தது. இதன் காரணமாக எம்.சி. சித்திலெவ்வை என்பவர் 1870களில், இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுத் தனித்துவத்தை முனைப்புறுத்தும் பணியிலே இறங்கினர். இதனால், இலங்கையின் முஸ்லிம்களிடையேயும், தமது பண்பாட்டுத் தனித்துவம் பற்றிய உணர்வினைப் பெறத் தொடங்கினர். இப்பணியில் சித்திலெவ்வை வெளியிட்ட "முஸ்லிம்நேசன்" என்ற இதழுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. (முஸ்லிம்களின் இந்தப் பண்பாட்டுத் தனித்துவ எழுச்சி, அவர்களைத் தமிழர்களிலிருந்து பிரித்துக்காட்டப்படவேண்டிய சமூக, அரசியல் தேவைகள் இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தக் காலத்திலேயே ஏற்பட்டு விட்டன என்பது ஒரு சுவாரசியமான வரலாற்று உண்மையாகும்.)
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள். பெரும்பாலும் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்தோர், பண்பாட்டு நடைமுறைகளில் மேல்நாட்டுப் பாங்குகளை மேற்கொள்பவர்களாகவே இருந்தனர். சிங்கள மக்களிடையேயான தனித்துவ உணர்ச்சி வளர்ச்சியில், பௌத்த பிரம்மஞான சபைக்கு (Buddhist Theosophical Society) ஒரு முக்கியமான இடம் உண்டு. அதன் வழியாகவும், அதனைத் தொடர்ந்தும் வந்த பௌத்த எழுச்சியின் தலைமகனாக விளங்கியவர் அநாகரிக தர்மபால (1864-1933) என்பவர். இவர் தலைமையில், இப் பௌத்தத் தனித்துவம், பிற இனங்கள் பற்றிய பொறுதியின்மையைக் கடைப்பிடிக்கும் ஓர் இயக்கமாயிற்று. (இந்தப் பண்பு, பிற்காலத்துப் பௌத்த எழு;ச்சியின் துல்லியமான பண்பாக அமைந்துவிடுகின்றது.) இவ்வாறாக இலங்கையின் காலனித்துவ வரலாறு, இலங்கையின் பிரதான சனக்குழுக்களை "இனக்குழும" உணர்வு கொண்ட குழுக்களாக ஆக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
இவ்வாறு கிளம்பிய "இலங்கைத் தமிழர்" என்ற இந்த அடையாளம், காலனித்துவ இலங்கையின் ஆட்சிப் பண்பு ஒன்று காரணமாக மேலும் ஆழப்படுத்தப்பட்டது.
1833இல் இலங்கைக்கான ஒரு "நிரந்தர ஆட்சி முறை" வரைந்தெடுக்கப்பட்டபொழுது, சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதற்கு, அவ்வக் குழுக்களிலிருந்து ஒவ்வொருவரை தேசாதிபதி நியமிக்கும் ஒரு முறைமை ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக இனக்குழும அடையாளம் இலங்கை அரசியலில், பிரதிநிதித்துவக்கோட்பாடு இடம் பெறத் தொடங்கும் காலம் முதல் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று எனலாம்.
இவ்வாறு எழத்தொடங்கிய "இலங்கைத் தமிழ்" அடையாளத்தில் ஆரம்பத்திலிருந்தே இந்து, கிறிஸ்தவ வேறுபாட்டுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லை என்பது ஒரு முக்கிய உண்மையாகும். இதனை இலங்கைத் தமிழ் நியமன அங்கத்தவர்களிலே காணலாம். இலங்கைத் தமிழருக்கான முதலாவது நியமன அங்கத்தினராக விளங்கியவர் A. குமாரசாமி என்பவராவார் (1833-35). அவரின் பின்னர், (அவர் இறந்து இரண்டு வருடங்களின் பின்னர்) தமிழருக்கான நிமயனப் பிரதிநிதியாக ஆக்கப்பெற்றவர் புத்தளத்தைச் சேர்ந்த சைமன் காசிச் செட்டி ஆவார். (இந்தச் சைமன் காசிச் செட்டிதான் இலங்கைத் தமிழர்கள் பற்றிய மிகப் பிரசித்தமான "The castes and customs of the Tamils of Ceylon" என்ற நூலையும், தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய முதலாவது நூல் என்று கருதப்படத்தக்க "The Tamil Plutarch" எனும் நூலையும் எழுதியவர்.)
இந்தப் பிரதிநிதித்துவ முறைமை, நியமன முறையிலிருந்து, ஆள்நிலத் தேர்தல் பிரதிநிதித்துவ முறைமையாக மாறத்தொடங்கிய பின்னரும் (1933) அதே இனக்குழும உணர்வே தொடர்ந்து தொழிற்படத் தொடங்கிற்று எனலாம்.
இவ்வாறு தொடங்குகின்ற இனக்குழும பிரக்ஞை அரசியலில் தொடர்ந்து பேணப்படுவதை நாம் இலங்கையின் அரசியல் வரலாற்றினூடே அவதானிக்கலாம். குறிப்பாக, சர்வஜனவாக்குரிமை அளிக்கப்பட்ட 1933ஆம் வருடத்தின் முன்னர் தோன்றிய, தமிழர் சார்ந்த அரசியல் அமைப்புக்களில் இந்தப் பண்பு போற்றப்படுவதைக் காணலாம்.
1905 - யாழ்ப்பாணச் சங்கம்.
1906 - Social Reform Society (யாழ்ப்பாணம்).
1920 - மாதர் ஐக்கிய சங்கம் (திருகோணமலை).
1920 - The Batticalo Union.
1921 - தமிழ் மஹாஜன சபை.
(இது பற்றிய மேலதிக விபரங்கட்கு, மு. குணசிங்கம் எழுதிய Sri Lankan Tamil Nationalism, சிட்னி, 1999 நூல் பார்க்க.)
இவற்றுள் 1921இல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மஹாஜன சபை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாகும்.
கொழும்பில் வாழும் தமிழருக்கு ஒரு தமிழ்ப்பிரதிநிதி வேண்டுமென்ற கோரிக்கை, இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் இறுதி வருடங்களில் முக்கியமான பிரச்சினையாக முகிழ்த்தது. தமிழருக்கான பிரதிநிதித்துவத்தைச் சிங்களத் தலைவர்களின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டதன் (1918) அடிப்படையில் 1919 நவம்பர் 11 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress) தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பின்னர், கொழும்பில் தமிழருக்கான ஒரு விசேட ஆசனத்தை வழங்குவதற்கு ஏற்றுக்கொண்ட இணக்கத்தை சிங்களத் தலைவர்கள் வாபஸ்பெற்றனர். இது சிங்கள, தமிழ்த் தலைவர்களிடையே பலத்த கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.
இதனடியாகவே தமிழர் மஹாஜன சபை 1921 ஆகஸ்ட் 21ஆம் திகதி தொடங்கப் பெற்றது. குணசிங்கத்தின் கூற்றுப்படி அது "தமிழர்கள் எல்லோரையும் ஒரு பதாகையின் கீழ்க் கொண்டுவந்தததுடன், முழுத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்குமான பணியை ஆற்றுவதற்காகச் சகலமட்டத் தமிழர்களையும் ஒருங்கு கூட்டிற்று" (பக். 216).
இதனடியாகவே சேர் பொன். அருணாசலம் தோற்றுவித்த Ceylon Tamil League (1923) தோன்றிற்று.
இந்த நிறுவனத்தையே இலங்கையின் முதலாவது தமிழ்த் தேசியக் குரலாக் கொள்வர்.
பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, இலங்கையின் சிங்கள - தமிழ் அரசியல் உறவில் இது ஒரு முக்கிய பிரிகோடாகக் கிளம்பியது. அதாவது "இலங்கைத் தமிழர்" என்ற அரசியற் பிரக்ஞையில் இது ஒரு முக்கிய கட்டமாகும்.இங்கைத் தமிழர் என்ற அரசியற் பிரக்ஞை விருத்தியில் பின்வரும் கால கட்டங்கள் முக்கியமானவையாகும்:
1921/3-1931 சர்வஜன வாக்குரிமை வரும் காலம் வரை நிலவிய பிரதிநிதித்துவ முறைமைகளில் நிலவிய கருத்துப் பிளவுகள்.
1933-1948 யாழ். மாணவர் காங்கிரசின் அரசியல் பிரவேசம். அரச சபையில் (State Council) அனைத்துச் சிங்கள அமைச்சர் அவை. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50க்கு-50 கோரிக்கை. சோல்பரிக் கமிஷன் வருகை. 50க்கு-50 கோரிக்கை தோல்வி.
சிங்கள தமிழ் நல்லினக்க வாழ்வுக்கான கருத்தொருமிப்பின்மை.
1948-1956 இலங்கை சுதந்திரமெய்தியமை. 1948இல் இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை நீக்கப்பெற்றமை. 1949இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம். இலங்கைத் தமிழர் கோரிக்கையில் முதல் தடவையாக புவியியல் அடிப்படை கொண்டுவரப்படுதல். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கை முன் வைக்கப்படல்.
முக்கியம்: இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், தமிழ் பேசும் மக்கள் என்ற அரசியல் எண்ணக் கருவை (Political concept) அறிமுகம் செய்கின்றனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் மொழியால் ஒன்றுபட்ட மக்கள் என்ற கோட்பாடு இதன் மூலம் முன்வைக்கப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலிருந்து வளர்ந்து வந்த முஸ்லிம், தமிழ் நம்பிக்கையீனங்களை களைவதாக அமைந்தது.
குறிப்பு : எனினும் இவ் அரசியல் எண்ணக்கரு ஓர் அரசியல் யதார்த்தமாக மாறவில்லை என்பது தொடர்ந்துவந்த அரசியல் வரலாற்றினால் நிரூபிக்கப்பட்டது.
1956இல் முஸ்லிம்கள் சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.
1948-56 ஆம் ஆண்டுக் காலத்தில், கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக, மட்டக்களப்பு, திருகோணமலைத் தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர்களின் அரசியல் ஒருமைப்பாட்டுக்கான தேவையை உணர்ந்தனர்.
1956-1972 இலங்கைத் தமிழ் அரசியல் ஒருங்குநிலையுணர்வு இக்காலத்தில் வன்மையுற்றது.
சிங்களம் மட்டும் அரச மொழியாக்கப்பட்டமை காரணமாக இலங்கை வாழ் தமிழர்கள் தங்கள் நாட்டு அடையாளத்தை வற்புறுத்த வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. இது அரசியல்துறையில் மாத்திரமல்லாது கலை, இலக்கியத் துறையிலும் நடைபெற்றது. இக்கால கட்டத்திலேயே மண்வாசனை இலக்கியம் என்ற கோஷம்; முன்வைக்கப்பட்டது. இக்கால கட்டத்திலேயே ஈழத்தின் (இலங்கையின்) சகல பாகங்களிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின், அவ்வவ் பிரதேசங்களைப் பிரதிபலிக்கும் ஆக்க எழுத்துக்கள் தோன்றின. மலையகம்,தென்னிலங்கை போன்ற பகுதிகளின் ஆக்க இலக்கியங்கள ஈழத்து இலக்கியத்தின் ஓரங்கமாயின. இக்காலகட்டத்திலேயே ஈழத்துத் தமிழ் நாடகப் பாரம்பரியம், கூத்து மரபின் மீள் கண்டுபிடிப்பினால் உயிர்ப்பிக்கப்பட்டது.
இக்கால கட்டம், தமிழ் மக்களின் நியாயபூர்வமான குறைபாடுகள் நிலவும் சட்டவாக்க, நிர்வாக அமைப்புக்களின் மூலமாகத் தீர்க்கப்பட முடியாதுள்ளமை நன்கு புலனாயிற்று.
1956ல் சிங்கள மட்டும் மசோதாவை எதிர்த்த இடதுசாரிக்கட்சிகள், 1960களில் சிங்களம் மட்டும் நிலைப்பாட்டை மேற்கொண்டது மாத்திரமல்லாமல், சட்டசபை முறைமையை எதிர்த்ததும் (1966) ஒரு முக்கிய அரசியல் நிகழ்ச்சியாகும்.
பல்லின நாடாகிய இலங்கையில் உண்மையான தேசியம் வளர்வதற்கு இனக்குழுக்களை ஊடறுத்துச் செல்லும் இடதுசாரிக்கோட்பாடு ஒரு முக்கிய இனச்சக்தியாகும். பொதுவுடமை கட்சிகளின் இந்த மாற்றம் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை உடைப்பதாகவும், இலங்கைத் தமிழரை இன ரீதியில் ஒரு தனி அரசியல் அலகாக ஒதுக்குவதாகவும் அமைந்தது.
இந்தப்போக்கின் பெறுபேறு பெருத்த, பாரதூரமான அரசியல் விளைவுகளுக்கு இடம் கொடுப்பதாக அமைந்தது. அதாவது இந்த தேசநிலைப்பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகளின் இந்த நிலைப்பாட்டுக்குப் பின் மாக்ஸீயம் என்னும் அரசியற் கோட்பாட்டின் வளர்ச்சி கூட இனக்குழும நிலையிலேயே மேற்கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. இவ்வுண்மையை நிரூபிப்பதாக அமைந்தது. சிங்கள இளைஞரின் எழுச்சியான "ஜனதா விமுக்தி பெரமுன"வின் தோற்றம் (1971) தமிழ் மக்களிடையேயும் தீவிரவாதத்தின் தோற்றத்துடன் (1974) மார்க்ஸீய நிலைப்பாடுடைய தமிழ் இளைஞர் இயக்கங்கள் தோன்றத் தொடங்கின. [உதாரணம் : ஈரோஸ் (EROS), ஈ.பி.ஆர்.எல்.எப்.(EPRLF)] தமிழ் இளைஞர் இயக்கங்கள் யாவும், மார்க்ஸீயத்தை வற்புறுத்தின. சுயநிர்ணய உரிமையையும், அதற்கான போராட்டத்தையும் வற்புறுத்தின.
1971இல் தமிழ் மாணவருக்கெதிராக பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில், குறிப்பாக தொழில் முறைக் கற்கை நெறிக்கான அநுமதிக்கு "புள்ளிகள் தரப்படுத்தல்" (Standardisation of marks) முறைமை கொண்டுவரப்பட்டது.
இலங்கைத் தமிழ் இளைஞர் தமது அரசியல் தனிமையையும், தனித்துவத்தையும் உணர்வதற்கான ஒரு முக்கிய செயற்பாடாக இந்நடவடிக்கை அமைந்தது.
1972-1988 இந்தக் காலகட்டம், இலங்கைத் தமிழ் மக்கள், இலங்கை எனும் அரசியல் அலகிலிருந்து மேலும் மேலும் அந்நியப்படுத்தப் படுதலையும், ஈழத்தமிழ்ப் பிரிவினைக் கோட்பாடு முனைப்புறுவதையும் காணலாம்.
1972இல் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கையின் தமிழ்ப் பிரதேச(வட-கிழக்கு)ப் பிரகடனத்தை வெளியிட்டது.
இதன் பின்னர் தோன்றிய இளைஞர் தீவிரவாதக் குழுக்கள், தமிழ் ஈழத்தைத் தமது அரசியல் அலகாகக் கொள்ளத் தொடங்கின.
இக்கால கட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவத்தின் பிரசன்னம் பல உரிமைக்குலைவு நிகழ்ச்சிகளுக்கு இடம்கொடுக்கத் தொடங்கியது. இது இளைஞர் தீவிரவாதத்தின் உக்கிரத்துக்கு இடமளிப்பதாக அமைந்தது.
இந்தக் காரண - காரியச் செயற்பாடுகள்தான், 1983இன் இனக்கலவரத்துக்கு இடமளித்தன. தமிழ்ப் பிரதேசங்கள் அல்லாத பிரதேசங்களில் தமிழ் மக்கள்வாழ்வது பெருத்த கேள்விக்குள்ளாக்கப்பட்டு, இடம்பெயர்ந்தவர்கள் வடக்கு, கிழக்குக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கைத் தமிழ் மக்கள் தாம் ஒரு தனி அரசியல் அலகாக உள்ளனர் என்ற பிரக்ஞை அவர்களிடையே மிக ஆழமாக வேரூன்றத் தொடங்கிற்று.
1984இல் இலங்கையின் இனக்குழுமப்போர் உக்கிரமடையத் தொடங்கியது. 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தையடுத்து, 1987-1990 பெப்ரவரி வரை இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் (வடக்கு, கிழக்கில்) இருந்தது.
இவ்வாறாக "இலங்கைத் தமிழர்" பிரச்சினை இக்கால கட்டத்தில் உச்சநிலையையடைந்த வேளையில் 1988இல், இலங்கையிலுள்ள இந்தியவம்சாவழியினரை இலங்கையின் நிரந்தர பிரஜைகளாக்குவதற்கான ஒரு சட்டவாக்கம் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினால் கொண்டுவரப்பட்டது.
(1948/49 முதல் பிரச்சினையாக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜா உரிமை பற்றிய சிக்கல்கள் 1988இல் தீர்த்து வைக்கப்பட்டன.)
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பில், "மலையகம்" முக்கியமான ஓர் இடத்தைப் பெறுகிறது. இலங்கைத் தமிழ் என்ற கருதுகோளின் பன்மைப்பாட்டையும், ஒருமை நிலையையும் மலையகத்தின் "பிரஜாநிலை வருகை" சுட்டிநிற்கின்றது.)
1988 சுதந்திர இலங்கை என்னும் அரசியல் அலகினுள் இலங்கைவாழ் தமிழருக்கு இருக்கவேண்டிய ஆட்சியமைப்பு நிலை இடம் யாது என்பது தீர்மானிக்கப்படுகின்றமை, இவ் இலங்கைத் தமிழரின் ஆட்சிநிலை நிர்ணயம். (constitutional determination of the rights of the Tamils living in SriLanka) பற்றிய ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு இடமளித்துள்ளது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் முடிவு எத்தகையதாக இருத்தல் வேண்டும் என்பது பற்றிய தேடல், இன்று உலக அரசியல் அரங்கின் முக்கிய சிரத்தைகளில் ஒன்றாகியுள்ளது.
இலங்கைத் தமிழர் என்ற அரசியற் பிரக்ஞை நிலையின் வளர்ச்சியும் அதன் பின்புலமும் இதுவரை மிக மிக மேலோட்டமான முறையிலேயே காட்டப்பட்டன. அதாவது இலங்கையில் வாழும் தமிழர்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு மாநிலங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வருபவர்கள் தாங்கள் ஓர் "அரசியற் குழுமம்" (Political Group) என்ற பிரக்ஞையுடன் இனங்காணுவதற்கான ஓர் எத்தனிப்பாகவே இந்த வளர்ச்சி அமைந்திருந்தது.
-----------------------------------------------------------
3
"இலங்கைத் தமிழர்" என்ற பெயருள்ள, அரசியல் ஒருமைத் தன்மையுள்ள (Political Homogenity) ஒரு குழுமத்தின் வளர்ச்சியை இது வரை பார்த்த நாம் இந்தக் குழுமத்தின் அகக்கட்டமைப்பு பற்றி, அதன் உண்மைநிலை பற்றி அறிவது அவசியமாகும். அப்படிப்பார்க்கும்பொழுது, 'இலங்கைத் தமிழர்' என்ற எண்ணக்கருவுக்குள் காணப்பட்ட (இப்பொழுது பெரிதும் அருகிவிட்டதெனினும் ஓரளவு தொடர்ந்து) காணப்படுகின்ற பன்முகப்பாட்டினை நன்கு உணர்ந்து கொள்ளல் அவசியம். "இலங்கைத் தமிழர்" என்ற அரசியல் யதார்த்தம் புலப்படவேண்டுமெனில், இந்த அக வேறுபாடுகள் பற்றிய தெளிவும், புரிந்துணர்வும் அவசியமாகும்.
இலங்கை என்னும் புவியியல் அலகு இந்திய உபகண்டத்தோடு ஒப்புநோக்கும்பொழுது மிகச்சிறிய ஒரு தீவே எனினும், இதனுடைய புவியியல், வரலாறு ஆதியன காரணமாக, மிக அண்மைக்காலம் வரை, பிரதேச நிலைப்பட்ட ஒரு பன்முகப்பாடு நிலவிவந்துள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
அத்துடன், இலங்கைத் தமிழர் என்பது, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களையே பிரதானமாகக் கருதும் (கருதவேண்டும்) என்ற மனப்பாங்கினை விடுத்து, பிரதேச வேறுபாடுகளை அங்கீகரித்து பன்மைப்பாட்டினுள் ஒற்றுமை காணும் மனப்பாங்கினை வளர்த்தல் வேண்டும்.
"இலங்கைத் தமிழ்" அலகை ஒரு பண்பாட்டுக்கூறாகக் கொண்டால், அதனுள்வரும் உப - பண்பாட்டுக் கூறுகளாக பின்வரும் பகுதிகள் அமையும்:
1. மட்டக்களப்பு
2. திருகோணமலை மாவட்டம் - மூதூர்
3. வன்னிப் பகுதி
4. யாழ்ப்பாணம்
5. மன்னார்
6. வடமேல் மாகாணம் - குறிப்பாக புத்தளம், சிலாபப் பகுதிகள்.
7. கொழும்பு
8. தென்மாகாணம்
9. மலையகம்
இவை ஒவ்வவொன்றினது முக்கியத்துவத்தையும் மிக, மிகச் சுருக்கமாகவேனும் நோக்குதல் அவசியமாகும்.
மட்டக்களப்பு
இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக "மட்டக்களப்புச் சமூகம்" என்று குறிப்பிடப்படுவதாகும்.
மட்டக்களப்புச் சமூக அமைப்பு, குறிப்பாக அதன் சமூக ஒழுங்கமைப்பிலும் (Social Organizations), சாதியமைப்பிலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் முறைமையிலிருந்து நிதர்சனமான வேறுபாடுகளைக் கொண்டது.
வரலாற்று ரீதியாக இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுய ஆதிக்கமுள்ள பிரதானிகள் இருந்துவந்தனர் என்ற அபிப்பிராயம் உண்டு.
இங்குள்ள "குடி" முறைமை முக்கியமானதாகும். ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு குடிகள் உண்டு. அக்குடிகள் புற மண குழுமங்களாகும் (Exogamons). [குடிமுறைமை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலும் ஒரு காலத்தில் நிலவி இருத்தல் வேண்டும். அங்கு "குடி", "பகுதி" என்பன வம்சவழியினைக் (Lineage) குறிப்பவை.] மட்டக்களப்பில் குடிமுறைமை, கோயில் ஆதிக்கம் போன்றவற்றால் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று "அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்டஒன்று" அன்று. இதனால் மட்டக்களப்பில், "முக்குவர்" நில ஆதிக்க முதன்மை நிலையுடையோராய் விளங்கினாலும், அவர்களுக்கு (யாழ்ப்பாணத்தில் வெள்ளாளருக்கு உள்ளது போன்று) சடங்காச்சார முதன்மை" (Ritual Supremacy) இல்லை. வெள்ளாளர், சீர்பாதக்காரர் ஆகியோரும் தத்தம் முக்கியத்துவத்தினை வற்புறுத்துவர்.
மட்டக்களப்பின் புவியியற் கூறுகள் காரணமாக அதன் உணவுமுறைகள் தனித்துவமானவை.
மத ஒழுகு முறையில், சமஸ்கிருதமையப்பாடு கிடையாது. இதனால், "ஆகம" முறை முதன்மை அங்கு இல்லை. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈசுவரர் கோயில் வீரசைவ மரபின்படியே கோயிலொழுகு முறையைக் கொண்டது.
மட்டக்களப்பின் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம் அது சோழ ஆட்சியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பதாகும். இதனால் பொலநறுவை - மட்டக்களப்பு - மூதூர் - திருகோணமலை ஆகிய பிரதேசங்களினனூடே ஓர் ஒருமைப்பாடு நிலவியிருத்தல் வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டின் எச்ச சொச்சங்களாக இப்பகுதிகளில் இப்பொழுது காணப்படும் சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வமிசம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. (த.சிவராம் தமது சில கட்டுரைகளில் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார். இது பற்றி முதன் முதலில் புலமைச்சிரத்தையினை ஏற்படுத்தியவர் அவரே).
மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியமானதெனினும் இப்பொழுது அது வழக்கில் இல்லை.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பிரதானமான சனவேற்ற (demographic) அமிசம், அது பாரம்பரிய முஸ்லிம் வாழிடங்களைக் கொண்டது என்பதாகும். இந்த முஸ்லிம்கள் மொழியாலும் (தமிழ்), சமூக ஒழுங்கமைப்பு முறையாலும் (குடிமுறைமை), தமிழரோடு இணைந்தவர்கள். சில நில ஆட்சியிலும் நிறையப் பொதுமை உண்டு.
இங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தை தளமாகக்கொண்டவர்களாதலால், இவர்கள் தமிழர்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவர்கள்.
இங்கு தமிழ் - முஸ்லிம் சகசீவனம் என்பது இருபகுதியினரது தனித்துவங்களையும் உரிமைகளையும் கணக்கெடுப்பதிலும், ஒற்றுமையானவாழ்வு ஒழுங்குமுறையை வகுத்துக் கொள்வதிலும் தங்கியுள்ளது.
இப்பிரதேசத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.
திருகோணமலை
மட்டக்களப்புப் பிரதேசம் போன்று இப்பிரதேசமும், அதற்குரிய தமிழ்நிலை வரலாற்றாய்வுகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை.
திருகோணமலை மாவட்டம் (கந்தளாய், தம்பலகாமம், மூதூர் ஆகியன உட்பட) சோழராட்சிக் காலத்தில் முக்கியம் பெற்ற இடமாகும். இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தென்- மேற்கு நோக்கிய பெயர்வின் பின்னர் (13ஆம் நூற்றாண்டின் பின்னர்) இப்பகுதி இலங்கை வரலாற்றில், ஏறத்தாழ ஒல்லாந்தர் வருகைவரை, அதிகம் பேசப்படாத ஒரு பிரதேசமாகவே போய்விட்டது.
மட்டக்களப்பின் தெற்குப் பிரதேசங்களும், திருமலை மாவட்ட வட பிரதேசங்களும் 1940கள் முதலே சிங்களக் குடியேற்றத்துக்கு உட்பட்டன. அங்கு ஏற்கனவே சில "புராண" (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 1940 களின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியினரில் தமிழ், முஸ்லிம் சீவிய இருப்பு பிரச்சினையாக்கப் பெற்றது. இப்பகுதியின் வாழ்வியல் அமிசங்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.
வன்னி
அநுராதபுரிக் காலத்தின் பின்னர், இலங்கையின் வடமத்தியப் பகுதி படிப்படியான சிதைவுக்கு ஆட்பட்டது. அது மாத்திரமல்லாது பொலன்நறுவைக் காலத்தின் பின்னர் இப்பகுதி "வன" (காட்டு)ப்பிரதேசமாக மாறியது. சிங்கள மக்கள், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களை அடிப்படையாகக் கொண்டு, "சிங்கள வன்னி", "தமிழ் (தெமல) வன்னி" என்று குறிப்பிடும் மரபு ஒன்றுண்டு.
தமிழ் வன்னிப்பிரதேசத்தை, இன்றைய வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களாகக் கொள்ளலாம். (தமிழ் வன்னிமைகள் முன்னர் மட்டக்களப்பு வரை நீண்டிருந்தது. அங்குள்ள சில பிரதானிகள் "வன்னியனார்கள்" என்று குறிப்பிடப்பெற்றனர்.)
இப்பொழுது கிளிநொச்சிப் பிரதேசமும் வன்னி எனப்படும் மரபு உண்டு. ஆயினும் பாரம்பரிய வன்னி, முறிகண்டிக்குத் தெற்கேயுள்ள பிரதேசங்களையகொண்டிருந்தது.
இந்த வன்னிப் பிரதேசங்களில் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிக்காலங்களில் பிரதானிகள் ஆட்சி புரிந்தனர். அந்த மரபு பண்டாரவன்னியன் காலம் வரை நிகழ்ந்ததாக அறிகின்றோம்.
தமிழ் வன்னிப்பிரதேசம் அதன் நில அமைப்புக் காரணமாகவும், தொடர்புக் குறைவுகள் காரணமாகவும் தனித்தனிக் கிராமங்களாக, குடியிருப்புத் தொகுதிகளாக இயங்கும் ஒரு நிலைமையிலிருந்தது. இங்குள்ள நில வசதி, காணிபெறுமதி காரணமாக வசதியான வாழ்க்கை முறை நிலவிற்று. சாதியமைப்பிலும் நெகிழ்ச்சி காணப்பட்டது. ஏறத்தாழ 1960கள் முதல் ஏற்பட்ட குடியேற்றங்கள், விவசாயத்திட்டங்கள் காரணமாகவும் வன்னிப்பகுதியின் சனத்தொகை பெரிதும் அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் என்பது இன்றைய நிலையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தையும், அங்குள்ள தீவுகளையும் குறிக்கும். யாழ்ப்பாணத்தில் 14ஆம் நூற்றாண்டு முதல் ஓர் அரச அமைப்பு நிலவியது. அது போர்த்துக்கேயர் வருகை வரை நிகழ்ந்தது (1520).
ஒல்லாந்தர் காலம் முதல் அதன் பொருளாதார நிலைப்பட்ட நிர்வாக, நடவடிக்கைகள், அப்பிரதேசத்துக்குரிய "தேச வழமை" முறைப்படியே நடைபெற்றது. இதனால் யாழ்ப்பாணச் சமூகத்தின் தனித்துவம் தொடர்ந்து பேணப்படுவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மிஷனரிமார்களின் நடவடிக்கைகள் இங்கு குறுகிக் காணப்பட்டன. இதனால் காலனித்துவ ஆட்சிக்கு வேண்டிய இடைநிலை உத்தியோகங்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் நிறைய இடம்பெற்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றில், இந்நிலைமை யாழ்ப்பாணத்தவர்களுக்கெதிரான சமூக, அரசியல் கோரிக்கைகள் வைக்கப்படுவதற்கும் காரணமாயிற்று.
யாழ்ப்பாணச் சமூகம் காலனித்துவத்தை எதிர்நோக்கிய முறையில் முதலில் சமூக மேலாண்மையுடைய மட்டத்தினர் தங்கள் பாரம்பரியத் தொடர்ச்சிக்கும் பேணுகைக்கும் வேண்டிய அதிகாரத்தினை, சைவக் கருத்து நிலை வழியாக ஏற்படுத்திக் கொண்டனர். இந்தக் கருத்து நிலை மேலாண்மை, யாழ்ப்பாணத்தின் சமூக வேறுபாடுகளை முதன்மையிழக்கச் செய்து, யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஓர் ஒருமைப்பாடான கருத்தினை முன்னிலைப்படுத்திற்று.
இந்த மதநிலைப் பேணுகை ஒரு புறத்தில் தொழிற்பட இன்னொரு புறத்தில் ஆங்கிலக் கல்வி வழியாக வந்த ஒரு தாராண்மைவாதப்போக்கும் தொழிற்பட்டது. யாழ்ப்பாண மாணவர் காங்கிரசையும், அதன் தோல்வியின் பின்னர் வந்த மார்க்சீயச் சிந்தனைப்போக்கையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட அரசியல், சமூகப் பாரம்பரியங்கள காரணமாக, யாழ்ப்பாணமே இலங்கைத் தமிழர்களை சின்னப்படுத்தியும் (Symbolising), பிரதிநிதித்துவப்படுத்தியும் நிற்கின்ற ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் இலங்கைத் தமிழர்களின் அரசியற் பிரக்ஞை வளர்ச்சியில் யாழ்ப்பாணம் நீண்டகாலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.
இந்த "முதன்மைகள்" காரணமாக, யாழ்ப்பாணத் தமிழர், மற்றைய தமிழ்ப் பிரதேசங்களில் எதிர்க்கப்படுவதற்கான ஒரு சூழலும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலவியது உண்மையே.
சைவக் கருத்து நிலை காரணமாக யாழ்ப்பாணத்திற் சமூக அடுக்கமைவு உணர்வு வலிமையுடன் போற்றப்பட்டு வந்ததெனினும், சாதிமுறைமைக் கெதிரான போராட்டங்களும் அங்கு நிலவின.
கத்தோலிக்க புரட்டஸ்தாந்தவர்களும், முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ளனர்.
மன்னார்
இது இலங்கையின் வடமேற்கு மூலையிலுள்ள பிரதேசமாகும். வன்னிப்பகுதியின் ஓர் அம்சமாகவே இதனைக் கொள்ளும் ஒரு மரபும் உண்டு. ஆனால் இப்பிரதேசத்தின் சமூக - பண்பாட்டுக் கட்டமைவை நோக்கும்பொழுது, இது, தனித்துவங்கள் பல கொண்ட ஒரு பிரதேசமென்பது தெரியும்.
இங்கு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள், இந்துத் தமிழர்கள் (சைவர்கள்), முஸ்லிம்கள் ஏறத்தாழ சம முக்கியத்துவமுடையோராய் இருந்து வந்துள்ளனர். கத்தோலிக்கத் தமிழர் பண்பாடு இங்கு பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. சைவப் பாரம்பரியத்துக்கும் இது முக்கிய இடம் கொடுத்தது. திருக்கேதீஸ்ரம் இங்கேயே உள்ளது. முஸ்லிம்கள் மன்னாரில் (எருக்கலம்பிட்டி போன்றபகுதிகளில்) நீண்ட காலமாக முதன்மையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
மன்னார்ப்பகுதியின் அரசியல் போக்கும் முக்கியமானது. அங்கிருந்து கத்தோலிக்க தமிழர்களும், முஸ்லிம்களும் பாராளுமன்ற அங்கத்தவர்களாக வந்துள்ளனர்.
இப்பிரதேசத்துக்கும் தமிழகத்துக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு.
வடமேல் மாகாணத் தமிழ் வசிப்பிடங்கள்
இலங்கையின் மேற்குக் கரையோரத்திலுள்ள புத்தளம், சிலாபம், முதல் ஏறத்தாழ நீர்கொழும்புவரை, தமிழர்கள் முக்கிய இனக் குழுமமாக வாழ்ந்து வந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் இங்கு தமிழ்க் குடியிருப்புகள் நிறைய இருந்தன. சைமன் காசிச் செட்டி புத்தளத்தைச் சேர்ந்தவரே. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் இப்பகுதியின் முக்கிய மதமாகும். புத்தளம் சிலாபத்தை தளமாகக் கொண்ட கத்தோலிக்க பேராயப் பிரிவில் படிப்படியான சிங்கள மயவாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்குள்ள தமிழ்க் குடும்பங்கள் பல, படிப்படியாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டன. இந்த மாற்றத்தை நீர்கொழும்பில் இன்னும் காணலாம். ஆனால் அதேவேளையில் இங்குள்ள சில இந்துக்கிராமங்கள்(உடப்பு, முன்னேஸ்வரம்) இன்னும் தங்கள் தனித்துவத்தை பேணுகின்றன.
புத்தளம் - சிலாபப் பகுதியின் மதப் பண்பாட்டில் திரௌபதி வணக்கம் முக்கியமானதாகும். மட்டக்களப்பில் உள்ள திரௌபதி வழிபாட்டு முறைமைக்கும் இப்பகுதியிலுள்ள திரௌபதி வழிபாட்டு முறைமைக்குமுள்ள தொடர்பினை ஆராய்தல் வேண்டும். இங்கு ஒரு பழைமையான கூத்து பராம்பரியமும் உண்டு. இப்பிரதேசத்தின் தமிழ்த்தன்மையைப் பேணுவதில் பேராசிரியர் அ.சின்னத்தம்பி முக்கிய ஆர்வம் காட்டினார்.
புத்தளம் - சிலாபம் பகுதிகளில் முஸ்லிம்களும் நிறைய வாழ்கின்றனர். புத்தளத்தில் அவர்கள் அரசியல் முதன்மை பெற்றவர்களாவர்.
புத்தளம் - சிலாபப் பகுதிக்கு ஒரு நீண்ட தமிழ்க்கலை, இலக்கியப் பாரம்பரியம்உண்டு.
கொழும்பு
மேல் நாட்டு ஆட்சிக் காலம் முதல் கொழும்பு இலங்கையின் தலைநகராக இருந்து வந்துள்ளது. இங்கு நீண்ட காலமாகத் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். கொழும்பு வாழ் தமிழர்களை இருநிலைப் படுத்திப் பார்த்தல் அவசியம்.
1. கொழும்பிலுள்ள துறைமுகம், ஆலைகள் ஆகியனவற்றில் நீண்டகாலமாகத் தொழில் பார்த்து வரும் தமிழர்கள். இவர்களில் பலர் தமிழகத்திலிருந்து வந்தவர்கள். பெரும்பாலும் கத்தோலிக்கர்கள். இவர்கள் பெரும்பாலும் கொழும்பு நகரின் வடக்குப் பகுதியாகிய கொட்டாஞ்சேனை, முகத்துவாரம் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள்.
2. காலனித்துவ ஆட்சியின் நிருவாகத் தேவைகளுக்கு பிரதானமாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் கொழும்பின் தெற்குப் புறத்தில் (வெள்ளவத்தை) வாழ்ந்து வருபவர்கள்.
இவர்கள் யாழ்ப்பாணத்தோடு உள்ள தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்ளாதவர்கள்.
இந்த இரண்டு பகுதியினரையும் விட கொழும்பின் செல்வந்தர் வட்டாரமாகிய கறுவா காட்டு (Cinnamon Gardens. Colombo -7)பகுதியில் வாழ்ந்து வந்த உயர் உத்தியோகப்பணிக் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் வங்கித் தொழில், வணிகம், மருத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் 1920-1980 காலத்தில் முக்கிய இடம் வகித்தவர்கள். சேர். பொன். இராமநாதன், அம்பலவாணர், விக்கினராசா கனகசபை, செல்லமுத்து போன்றவர்களின் வழித்தோன்றல்கள் இப்பகுதிகளிலே வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களை விட கொழும்பின் வடக்கு மத்திய பகுதிகளில் கூலி வேலைகள் செய்யும் தமிழ்க் குடும்பங்கள் பலவும் உண்டு. (தெமட்டகொடை, வனாத்தரமுல்லை).
கொழும்பின் உயர் தமிழர்களிடத்தே தமிழர்களின் அரசியல் தலைமை நீண்டகாலமாக இருந்து வந்தது. 1956இன் பின்னர் நிலைமை மாறத் தொடங்கிற்று.
தென்னிலங்கை
மேற்குக் கரையோரத்தில், பாணந்துறை முதல், திக்வெல்லை வரை முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். பேருவலை, களுத்துறை, காலி ஆகிய இடங்களிலுள்ள முஸ்லிம்கள் வணிக, அரசியல் முக்கியத்துவமுடையவர்கள்.
இப்பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள், பெரும்பாலும் றப்பர் தோட்டங்களில் வாழ்பவர்கள் உளர். இந்திய வம்சாவழியினரின் தொழிற் சங்கங்கள் இவர்கள் பற்றி அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களின் தமிழ் அடையாளங்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.
மலையகம்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் முக்கியமான ஒரு பகுதியினராக இன்று மலையகத் தமிழர்கள் உள்ளனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் பெருந்தோட்டப் பயிர் செய்கைக்கு தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழியினரின் வழித்தோன்றல்கள் இவர்கள். இவர்களின் குடியுரிமை 1948ல் பறிக்கப்பட்டு 1988ல் ஒரு சுமூகமான தீர்வுக்கு கொண்டுவரப்பட்டது,
இலங்கைத் தமிழர் என்ற வகைபாட்டினுள் இவர்கள் கொண்டு வரப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்என்ற பதம் இலங்கையின் பாரம்பரியத் தமிழ்க் குடிகளுக்கே உரிய ஒன்றாகும். இவர்களை "பெருந்தோட்டத் தமிழர்கள்" என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது.
1950களின் பின்னர், இவர்கள் தங்களை மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிடுவர்.
இலங்கையின் மத்திய பிரதேசங்களான கண்டி, நுவரேலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பெருந்தொகையினராக வாழ்ந்து வருவது, சிங்கள இன உணர்வுள்ள அரசியற் குழுக்களுக்கு ஒரு பெருத்த சவாலாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் இவர்கள் இணைத்துவிடலாம் என்ற ஓர் அரசியற் பயம் இவர்களுக்கு உண்டு.
இலங்கைத் தமிழர்களிடையே தோன்றிய தீவிரவாதக் குழுக்கள் மலையகத்த தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களாகவே பார்த்துவந்துள்ளன.
மலையகத் தமிழர்களிடையே சமூக அரசியற் பின்புலம் இலங்கைத் தமிழர் - மலையகத்தோர் இணைவை ஊக்குவதில்லை. ஆயினும், தமிழர் என்ற இனக்குழும உணர்வு இவர்களிடத்து இல்லை என்று கூறிவிடமுடியாது. மலையகத்தின் காலம் சென்ற தலைவர் திரு. சௌ. தொண்டமான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திய ஒருவராகவே கொள்ளப்பட்டார்.
மலையகத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் இலங்கையின் தமிழ்க் கலை, இலக்கியப் பாரம்பரியத்துக்கு பன்முகப்பாட்டையும் வளத்தையும் வழங்குவனவாகும். மலையக இலக்கியம் ஈழத்து இலக்கியம் என்ற பெருவட்டத்தினுள் வருவதே.
மலையகத்தில் 1960கள் முதல் ஏற்பட்ட கலவரங்கள், பஞ்சம் ஆகியன காரணமாக, கணிசமான மலையகத் தமிழர்கள், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சென்று குடியேறியுள்ளனர். குறிப்பாக வன்னிப்பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் அவ்வப் பிரதேசத் தமிழர் வாழ்க்கை மரபுடன் இணைக்கப்படுகின்றனர்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடையே காணப்படும் பிரதேசக் கூறுகள் பற்றி இதுவரை நோக்கினோம்.
இலங்கைத் தமிழ்ப் பாரம்பரியம் என்பதை முற்றுமுழுதாக ஒரு பிரதேசத்துக்குரிய பாரம்பரியமாக மாத்திரம் கொண்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்கும், இலங்கைத் தமிழ் வாழ்வியற் பண்பாட்டின் பண்முகப்பாட்டை உணர்த்துவதற்கும் இவ் உண்மை இங்கு எடுத்துக் கூறப்படுகின்றது.
இலங்கையில், சிங்கள இன உணர்வின் வளர்ச்சியும், தொழிற்பாடுகளும் இலங்கையின் தமிழ் மக்களிடையே தற்காப்பு நிலை தமிழ் தேசியத்தைத் தோற்றுவித்துள்ளது (Defensive Tamil Nationalism) என்பதை மறக்க முடியாது.
இலங்கைத் தமிழ் தேசியத்தின் சமூகபண்பாட்டு உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு இப்பிரதேசக் கூறுகளின் முக்கியத்துவம் உதவும்.
இந்த சமூக யதார்த்தத்தை மறவாத ஒரு நிலையே அத்தியாவசியமானதாகும்.
4
"இலங்கைத் தமிழர்" என்ற நிலைக்கு அப்பால் "இலங்கைத் தமிழ் பேசும் மக்கள்" என்ற ஒரு அரசியல் எண்ணக் கருவும் முன்வைக்கப்பட்டமையை ஏற்கனவே பார்த்தோம்.
இலங்கையின் முஸ்லிம்களை இலங்கைத் தமிழ் இனக்குழுமத்தினருள் வைத்துப் பார்ப்பதை, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்றுமே ஒத்துக்கொண்டதில்லை. தமிழ் அவர்களின் தாய்மொழியே எனினும், அவர்கள் தங்கள் அடையாளத்தில், மொழியை முதன்மைப்படுத்தாது மதப்பண்பாட்டையே முதன்மைப்படுத்துவர். இலங்கையின் காலனித்துவ எதிர்ப்பு வரலாறு இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
இவ் அரசியல் உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், இலங்கை முஸ்லிம்களின் வாழிடப் பரம்பலை பொறுத்தவரையில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் கணிசமான தொகையினராக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இவ்வுண்மை மிகுந்த முனைப்புடன் காணப்படுகிறது.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் நிலத்தை அடித்தளமாகக் கொண்டவர்கள். அடிப்படையில் விவசாயிகள். எனவே இவர்களின் வேர்கள் அங்கு நிலைத்து நிற்கும்.
இலங்கைத் தமிழரின் பாரம்பரிய வாழிடமாகிய வடக்கு - கிழக்கில் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
முஸ்லிம்களின் மொழிநிலை ஒருமைப்பாட்டையும், மதநிலைத் தனித்துவத்தையும் போற்றும், ஊக்குவிக்கும் வகையில் இலங்கை - முஸ்லிம் - தமிழ்ப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
5
இலங்கைத் தமிழர்களுடைய ஒட்டு மொத்தமான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை. யாழ்ப்பாண நிலை வரலாற்றைப் பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, சி. பத்மநாதன், சி. சிற்றம்பலம், கலாநிதி ப. புஷ்பரத்தினம் முதலியோர் எழுதியுள்ளனர். மட்டக்களப்பு வரலாறு பற்றிய சில முக்கிய
தரவுகளை வித்துவான் F.X.C. நடராஜா, ச.இ. கமலநாதன், த. சிவராம் முதலியோர் வெளிக்கொணர்ந்துள்ளனர். மன்னார், புத்தளம், கொழும்புப் பகுதியிலுள்ள தமிழர்கள் வரலாறு இன்னும் சித்திரிக்கப்படவில்லை. மலையகம் பற்றிய வரலாற்று எழுத்துக்கள் உண்டு. பேராசிரியர்கள். ஜெயராமன், சந்திரசேகரம் மற்றும் சாரல் நாடன், நடேசன் ஆகியோரின் பங்களிப்புகள் முக்கியமானவை.
6
இலங்கையின் இன்றைய அரசின் செல் நெறியைப் பார்க்கும்பொழுது, இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள தமிழர் - தமிழ் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தும், குறைக்கப்பட்டும் வருவதை காணலாம். குறிப்பாக தமிழ் மொழிவழிக்கல்வியில் இந்தப் போக்கினை முனைப்பாக காணலாம்.
இத்தகைய ஒரு சூழலில் இலங்கையில் தமிழர் வகிக்கும் பாகம் பற்றிய எண்ணக் கருத்துக்கள் முக்கியமானவையாகும்.
இலங்கைத் தமிழ் இளைஞரின் தீவிரவாத நடவடிக்கைகளை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோலும் இதுவே. அதாவது இலங்கையின் மற்றைய பகுதிகளில் தமிழ் - தமிழரின் இருப்பு அச்சுறுத்தப்படும்பொழுது, பாரம்பரியப் பிரதேசத்தை, அதன் தனித்துவம் குன்றாது பேண வேண்டிய ஒரு தற்காப்பு நிலை ஏற்படுகிறது.
இப்பயத்தினை நீக்குவதற்கான ஒரேயொரு வழி, இலங்கைத் தமிழரின் இலங்கை நிலைப்பட்ட அவர்களின் வகிபாகத்தையும் (Role) இடத்தையும் (Place) ஆட்சியமைப்பு ஆவணத்திலேயே உறுதிப்படுத்துவதும், அந்த உறுதிப்பாட்டைச் செயல் நிலைப்படுத்துவதற்கான முறை வழியை, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவரும் ஒத்துக்கொள்ளும் வகையில் மேற்கொள்வதுமாகும்.
இலங்கையின் பின் காலனித்துவ கால வரலாறு, இந்த உறுதிப்பாட்டை, இலங்கைக்கு அப்பாலான ஓர் அரசியற் சக்தியாலேயே வழங்க முடியும் என்ற நிலையே ஏற்படுத்தியுள்ளது.
-----------------------------------------------------
பிற்குறிப்பு
இக்கட்டுரை "இலங்கைத் தமிழர்" என்னும் எண்ணக்கருவின் (Concept) தோற்றத்தையும், அந்த "வரையறை"க்குள் வருவோர் யாவர் என்பதையும், அவர்களின் தளங்களையும், அந்த "வரையறை" கிளப்பும் பிரச்சினைகளையும் பற்றிக் கூறுகின்றது.
இது பற்றிப் பேசும்பொழுது, இம்மக்களின் வரலாறு பற்றியும், அவற்றின் போதாமை பற்றியும் குறிப்புக்கள் வந்துள்ளன. வரலாறு தெளிவாகும் பொழுதுதான் இலங்கை என்னும் அலகுக்குள் தமிழ்/ தமிழர் எத்தகைய வகிபாகத்தினைப் பெற்றிருந்தது/பெற்றிருந்தனர் என்பதும், அந்த வகிபாகம் இலங்கையின் வரலாற்று முழுமைக்கும் செழுமைக்கும் எவ்வெவ்வகையில் உதவியுள்ளது/உதவியுள்ளனர் என்பதும் தெரியவரும்.
இலங்கை எனும் அரசியல் அலகினுள் ஏற்பட்ட தமிழ்/தமிழர் வழி அபிவிருத்திகள் ஒரு புறத்தில் முக்கியப்பட இன்னொரு புறத்தில், இவர்கள் (இலங்கைத் தமிழர்) தங்கள் தனித்துவத்தை எவ்வாறு பேணியுள்ளனர், அந்த முறைமை தமிழ்ப் பண்பாட்டின் பன்முகப்பாட்டுக்கும் செழுமைக்கும் எவ்வகையில் உதவியுள்ளது என்பது பற்றிப் பார்க்க வேண்டுவதும் அவசியமாகும்.
இலங்கை என்ற "அமைப்பினுள்" தமிழ்/தமிழர் பெறும் இடம் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டு வட்டத்தினுள் இலங்கையின் தமிழர் பெறும் இடம் பற்றியும், (செய்துள்ள பங்களிப்புகள் பற்றியும்) பல முது, இளம் அறிஞர்கள் ஆய்வுகள் செய்துள்ளனர்.
அவற்றை ஒன்று திரட்டும் பணி ஒரு புறமாக நடைபெறவேண்டிய அதே வேளையில், அவர்கள் தம் ஆய்வு முடிவுகளையும் (முடிபுகளையும்), தொகுத்து, சிறு ஆய்வுரைகளாகத் தரும் பொழுது, சாதாரண வாசகர்களுக்கும், ஈடுபாடு கொண்ட ஆர்வலர்களுக்கும் இவ்விடயம் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தொகுதியாக, அது அமையும், அமையவேண்டும்.
இப் பெருநோக்குகளை 'இலக்காக'க் கொண்டே, இத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது.
இத்தொடர் இனிது நிறைவுற்று, உரைகள் தனித்தனியே அச்சிடப்பெற்று, முடிவில் ஒரு தொகுதியாக வெளிவரும் நாளை எதிர்நோக்கி நிற்கின்றேன்.
கா. சிவத்தம்பி
23.11.2000.
-----------------------------------------------------------------
இக்கட்டுரையாக்கத்துக்கு உதவிய நூல்கள் :
1. Gunasingham, M. - Sri Lankan Tamil Nationalism, Sydney, 1999.
2. Nahiya, A.M., (Ed) 50th Anniversary of Sri Lanka Independence -
North East provincial Council - North East Sri Lanka a compen-
dium, Colombo, 1990.
3. Pathmanathan, S. - The Kingdom of Jaffna - Colombo, 1978.
4. Wilson, A.J. - The Break - up of Sri Lanka - London, 1988.
5. Sankaran Krishna - Post colonial Insecureties: India, Sri lanka and
Question of Nation hood - oup, Delhi, 1999.
6. Whall, Halen J. - The Right to Self Determination - The Sri Lankan
Tamil National Question , - London, 1995.
7. Arudpragasam, A.R. - The Traditional Homeland of Tamils -
Colombo, 1996.
8. K. Sivathamby
(1) Sri Lankan Tamil Society and Politics - Chennai, 1995.
(2) யாழ்ப்பாணம் - Chennai, 2000
------------------------------------------------------------------------------
ed;wp:http://noolaham.net
Monday, October 15, 2007
இலங்கைத் தமிழர் - யார், எவர்?
Posted by tamil at 1:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment