புதன் 17-10-2007 19:01
"ஈழமுரசு"
இதற்கான பிரதான காரணம் அவருக்கு உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஆதரவுத்தளம் வரவரக்குறைந்து வருகிறது. பதிலாக நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உள்ளூரில் அவருக்கு எதிரான தரப்புகள் அதிகரித்தும் பலம் பெற்றும் வருகின்றன.
இதற்கெல்லாம் பிரதான காரணம், அவரது அரசாங்கத்தின் அணுகுமுறையும் போக்குமே ஆகும்.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏறியுள்ள விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுக்குக்காரணம் அரசாங்கத்திடம் பொருளாதாரம் இல்லை. கிடைக்கின்ற சகல உதவிகளையும் அரசாங்கம் போருக்கு செலவு செய்கிறது. இலங்கை பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரு நாடல்ல.
இருக்கின்ற பொருளாதார வளத்தையும் சரியாகப்
பயன்படுத்துவதும் இல்லை. அத்துடன் கடந்த முப்பது ஆண்டுகளில் போருக்கு செலவிட்ட நிதியில் பாதியைக்
கூட பொருளாதார வளர்ச்சிக்கு சிறீலங்கா அரசாங்கம் ஒதுக்கவில்லை. அதுமட்டுமல்ல, அப்படி ஒதுக்குவதைப்
பற்றி அது சிந்திக்கவும் இல்லை. இது குறித்து இலங்கையின் கொள்கைவகுப்பாளர்களோ, பொருளியல் நிபுணர்களோ, புத்தி ஜீவிகளோ கூட சிந்தித்ததாக தெரியவில்லை.
அதனால் நாட்டின் பொருளாதாரம் முழுதாகவே சீரழிந்துள்ளது. இந்தச் சீரழிவு மக்களையே நேரடியாகப்பாதிக்கிறது. போர்ச் செலவை கட்டுப்படுத்த முடியாதபோது அது பொதுமக்களின் தலைமேல் கையை வைக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கத்தில் வேறு காரியங்களும் இதே போலவே பாதகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்து விட்டால் பிறகு போர்ச் செலவே ஏற்படாது என்றொரு கணக்கை சுலபமாகப்போட்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச. அதன்படி பிறகு மிகச் சுலபமாகவே இனப்பிரச்சினையையும் தாம் விரும்பியமாதிரி தீர்த்து விடலாம் என்றும் அவர் கருதியிருக்கிறார்.
எனவே இப்போது எந்தப்பாடு பட்டாவது போரில் வெற்றிபெற்று விட்டால் போதும் என்பதே அவருடைய முழு எதிர்பார்ப்புமாகும். ஆனால் விருப்பங்கள் வேறு, யதார்த்தம் வேறு அல்லவா. அவருடைய கணிதத்தை மீறியே நிலைமைகளிருக்கின்றன. இந்தப்போரை எந்த வழிமுறைகளுக்கூடாகவும் செய்து அதில் வெற்றி பெற்று விட்டால் போதும் என்பதே இப்பொழுது மகிந்தவுக்குள்ள ஒரே எதிர்பார்ப்பு. அதுதான் அவருடை நிகழ்ச்சி நிரலின்படியான தேவையுமாகும். இதற்காக அவர் படையினரை முதனிலைப்படுத்தியிருக்கிறார்.
அவர் பதவிக்கு வந்தபிறகு அதிக நிதி ஒதுக்கப்பட்டதும் படைத்துறைக்குத்தான். அதிகம் நவீனப்படுத்த முயன்ற துறையும் படைத்துறைதான். அதிக தடவைகள் பகிரங்கமாக கலந்து கொண்ட பெரும் நிகழ்வுகளும் படைத்துறை சம்மந்தமானவைதான்.
வாகரையைப் படையினர் கைப்பற்றிய பின்னர் அவர் அங்கே சென்று படையினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தி நன்றியையும் தெரிவித்தார்.
படுவான்கரையை ஆக்கிரமித்தபின்னர் குடும்பிமலை வெற்றிகொள்ளப்பட்ட விழா என்று கொழும்பில் கிழக்கின் உதயம் என்ற பிரமாண்டமான பாராட்டு நிகழ்வைப் படையினருக்காக நடத்தினார்.
இந்தவாரம் கடற்படையினரைப் பாராட்டும் பெரிய விழாவொன்றை திருகோணமலையில் வைத்து நடத்தியிருக்கிறார். இதில் ஒரு செய்தியையும் மகிந்த ராஜபக்ச மறைமுகமாகவும் ஒரு வகையில் நேரடியாகவும் சொல்கிறார். இதுவரையில் எந்த சிங்களத் தலைவர்களும் நேரடியாக களமுனைக்கு சென்றதில்லை. அதிலும் போர்ச்சூழலில் அவர்கள் ஒருபோதும் களமுனைக்குச் சென்றதேயில்லை.
ஆனால் ராஜபக்ச களமுனைக்கு சென்றிருக்கிறார். அதிலும் தமிழரின் பகுதியான வாகரைக்கும் திருகோணமலைக்கும் போயிருக்கிறார். அங்கே போய்ப் படையினரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். களமுனைக்கு ஜனாதிபதியே நேரில் போகும்போது அது படையினரின் உளவியலில் முன்னோக்கிய ரசமாற்றத்தை ஏற்படுத்தும் என்று மகிந்தவுக்குத் தெரியும். அதனால் அவர் இப்படியரு தந்திரோபாயத்தைச் செய்கிறார்.
அதேபோல படைத்துறைக்கு வலுச்சேர்க்கும் துணை ஆயுதக்குழுக்களை அவர் கட்டுப்படுத்தவேயில்லை. துணை ஆயுதக்குழுக்களைப்பற்றி சர்வதேச சமூகம் முன்வைத்துள்ள பகிரங்கமான குற்றச்சாட்டையே அவர் பொருட்படுத்தாது விட்டதும் இந்தப்பின்னணியில்தான்.
இதனால் அவருக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வலயம் உருவாகியது. அதாவது போரை நடத்த முனைந்த போதே இந்தப்பிரச்சி¬னைகள் எல்லாம் சேர்ந்து வந்தன.
துணை ஆயுதக் குழுக்களின் விவகாரம், மனித உரிமை மீறல்கள் விவகாரம் எல்லாம் பெரிய அளவில் துலங்கத் தொடங்கியதும் இதனால்தான். போருக்கு துணை ஆயுதக்குழுக்கள் தேவை. ஆனால் சர்வதேச சமூகத்துத்துக்கோ அது மனித உரிமை மீறல் விவகாரங்களுடன் தொடர்பு பட்டதாகவே இருக்கிறது.
இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சட்டத்துக்குப்புறம்பான ஆயுதக் குழுக்களை அரசாங்கம் வைத்திருப்பது நிச்சயமாகவே ஒரு பயங்கரவாதச் செயல்தான்.
அரச பயங்கரவாதத்தை வெளிப்படையாகவும் பயங்கரமாகவும் செய்வதற்கான ஒரு வழிமுறையாகவே அது இருக்கும். அத்துடன், துணை ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள், படைப்புலனாய்வுப்பிரிவினரின் செயற்பாடுகள், படையெடுப்புகள் போன்றவற்றால் ஏற்படுகிற மனித உரிமை மீறல்கள் எல்லாம் மறுபுறத்தில் பயங்கரவாத நடவடிக்கையே. அரச பயங்கரவாதத்துடன் அவை இனங்காணப்படுகின்றன.
இந்த விடயத்தை மிகத் தெளிவாக பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி. கிருபாகரன் அண்மையில் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு அறிக்கையில் தெளிவாகவும் அறிவு பூர்வமாகவும் நியாய முறைப்படியும் முன்வைத்திருக்கிறார்.
ஆட்கடத்தல்கள், படுகொலைகள், ஊடகத்துறை, மனிதாபிமான நடவடிக்கைகள் மீதான அச்சுறுத்தல் என்பதெல்லாம் பயங்கரவாத நடவடிக்கைகளே. அதில் எந்தச் சந்தேகமுமில்லை. கடந்த கால் நு£ற்றாண்டாக பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் வைக்கப்பட்டுள்ளதே பெரும் அடிப்படை மனித உரிமை மீறல்தான். அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்தின் மூலம் மக்களின் வாழிடங்கள் பறிக்கப்பட்டதும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருப்பதும் மனித உரிமை மீறல்களுக்குள்தான் வரும்.
ஆனால் இதெல்லாவற்றையும் படையினருடைய நலன் குறித்தே அரசாங்கம் தடுத்தும், மீறியும், பொதுமக்களுக்கு விரோதமாகச் செய்துவருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான பாதையைத் திறப்பதற்கு இன்னும் அரசாங்கம் தயங்குவது படைத்தரப்பின் பாதுகாப்பு மற்றும் விருப்பம் என்பவற்றை மீறிச் செயற்படக்கூடாது என்ற அக்கறையின்படியே. இப்படி படைத்தரப்பின் நலனைக்குறித்தே அரசாங்கம் சிந்திக்கிறது. தமிழ் மக்களின் பாதுகாப்பு, அவர்களுடைய வாழ்க்கை, அவர்களது எதிர்காலம் என்பவற்றைப்பற்றி அது சிறிதும் சிந்திக்கவும் இல்லை.
கவலைப்படவும் இல்லை. பதிலாக தினமும் தமிழ் மக்கள் தங்களின் வீடுகளிலும், தெருக்களிலும், நகர்களிலும், ஊர்களிலும் கொல்லப்படுகிறார்கள். அரசாங்கமோ அதன் படையினரோ இந்தக் கொலைகளை தடுத்து நிறுத்தவும் இல்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை.
ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் நடக்கின்ற படுகொலைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் எடுக்க வேண்டும். இதிலிருந்து அரசாங்கம் எந்தச் சாட்டுகளையும் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. இதற்கு முதற்காரணம் சீராக இருந்த அமைதிச் சூழலைக் கெடுத்ததில் அரசாங்கத்துக்கு பெரும் பங்குண்டு. அதனால் வன்முறை பெருகிவிட்டது. இப்போது அது அளவுக்கதிகமாக தினமும் நடந்து கொண்டிருக்கிறது.
தன்னுடைய கட்டுப்பாட்டுப்பகுதியில் படையினரின் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிர்வாகமும் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசாங்கம், எப்படி அங்கே நடக்கின்ற கொலைகளையும் ஆட்கடத்தல்களையும் கட்டுப்படுத்த முடியாமலிருக்க முடியும். அதிலும் இந்தக் கொலைகளை அவதானிக்கும்போது ஒரு விடயம் தெரியவரும். அங்கே கொல்லப்படுகிற ஆட்கள் பெரும்பாலும் தமிழ் மக்களின் விடுதலை குறித்து சிந்தித்தவர்கள். அல்லது அரச பயங்கரவாதத்தையும் சிங்கள மேலாதிக்கத்தையும் எதிர்த்தவர்கள். எனவே இந்தக்கொலைகளுக்கு யார் காரணம் என்பதும், யார் பொறுப்பு என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இது எதைப்பற்றியும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.
அது இப்போது எப்படியும் போரை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றே விரும்புகிறது.
திருகோணமலையில் கடற்படையினரை உற்சாகப்படுத்தும் வைபவத்தில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் அவரது சகோதரரும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச சொன்னதை இங்கே கவனிக்கலாம். ``இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு இராணுவ வழி மூலம் அரசாங்கம் வெற்றி பெறவேண்டும்`` என்று கோத்தபாய, படையினருக்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அரசியல் அறிவுரை சொல்லியிருக்கிறார். கூடவே அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்படித்தான் அரசாங்கத்தினதும் அதன் தலைவருமான மகிந்த ராஜபக்சவினதும் சிந்தனை இருக்கிறது. போர் ஒரு சுலபமான முதலீடாகி விட்டது இலங்கையில்.
இந்த முதலீடு இலாபம் தருவதற்கு வெற்றி வேண்டும் என்றதால் அதன் மீதான மோகமும் அதிகமாகிவிட்டது.
"ஈழமுரசு"
Wednesday, October 17, 2007
போரே மகிந்தவிற்கு இலாபம் தரும் முதலீடாகிவிட்டது
Posted by tamil at 7:25 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment