Sunday, October 7, 2007

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை தப்பிக் கொண்டது எப்படி?

[07 - October - 2007] தினக்குரல்

-டிட்டோ குகன்-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (யூ.என்.எச்.ஆர்.சி.) ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானமானது சமர்ப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டதானது தங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியெனவும் அரசாங்கம் இப்போது மார்தட்டிக் கொள்கிறது.

எனினும் இதன் மறுபக்கத்தைப் பார்த்தால் அரசுக்கு எதிரான தரப்பு தீர்மானத்தைப் பேரவையில் கொண்டு வரும் விடயத்தில் துளியளவும் முயற்சிகளை எடுக்காததன் காரணமாகவே அரசாங்கத்துக்கு இந்த வெற்றி கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த வருடம் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்கள் முதலே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பாக தீர்மானமொன்றைக் கொண்டு வருவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு அமர்விலும் இவ்வாறான தீர்மானத்தை இலங்கைக்கு எதிராகக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதை இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சரான மகிந்த ராஜபக்ஷவும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அத்துடன், ஒவ்வொரு அமர்வுகளின் போதும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படாத போதிலும், அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்படுவது தொடர்ந்து வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க, கடந்த வியாழக்கிழமை இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதேநேரம், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படப் போகின்றதென அறியவரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோவொரு வகையில் தன்னாலான முயற்சிகளை எடுத்தே வந்துள்ளது.

எனினும் கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்ட அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்க விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கை சற்று முன் கூட்டியே ஆரம்பித்திருந்தது. அண்மைக் காலங்களில் இலங்கைக்கு வந்த சர்வதேச பிரதிநிதிகள் இங்கேயே நிலைவரங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் அரசுக்கு சாதகமாக அமையாமை மற்றும் சர்வதேச நாடுகளிடையே இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பாக இருந்து வந்த அவதானங்களும், அதிருப்தியுமே இந்த முன்கூட்டிய எச்சரிக்கை முனைப்புகளுக்கு ஏதுவாக அமைந்திருந்தன.

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதியே ஜெனீவாவில் ஆரம்பமாகவிருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சார்பான அணியொன்று செப்டெம்பர் 2 ஆம் திகதியே ஜெனீவா புறப்பட்டு சென்றுவிட்டது. இந்த அணியில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா, அரச சமாதான செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றைக் கொண்டு வரப்பட்டுவிடாமல் சமாளிப்பதற்காக முன் கூட்டியே அனுப்பப்பட்டிருந்த இந்தக் குழுவினர், ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான தயான் ஜயதிலகவின் ஒத்துழைப்புகளுடன் செப்டெம்பர் 4 ஆம் திகதி முதல் சமரச சமாளிப்பு முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், ஜெனீவாவிலுள்ள வதிவிடப் பிரதிநிதிகள் உட்பட சந்திக்க முடிந்த அனைவரையும் சந்தித்து இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கூறியதாக அமைச்சர் மகிந்த சமரசிங்கவே கூறியிருந்தார். பொதுக் கூட்டங்களின் போது தனிப்பட்ட ரீதியிலும் பல சந்திப்புகளை நடத்தியதாகவும், இம்முறை தங்களுக்கு `மூச்சு விடுவதற்கு' கூட நேரமிருக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார்.

அரசாங்கம் எதிர்பார்த்தது போலவோ என்னவோ, மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் பேசும்போது இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அதிருப்தி வெளியிடும் வகையில் பேசியிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் போர்த்துக்கல், ஜேர்மன், பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்கள் குறித்து அதிருப்திகளை வெளியிட்டிருந்ததுடன், இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பரின் அறிக்கையை பெரிதும் எதிர்பார்ப்பதாக சுட்டிக் காட்டியிருந்தனர்.

இதற்கேற்றாற் போல், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் சற்று வித்தியாசமான முறையில் கொண்டு வர எத்தனிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பேரவையின் தலைவரின் ஊடாக இலங்கை குறித்த விஷேட அறிக்கையொன்றை விடுக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில், இலங்கையில் யுத்தம் அதிகரித்துவிட்டது. படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் அதிகரித்துவிட்டன, போன்ற அரசுக்குப் பாதகமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், இறுதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய சர்வதேச குழுவொன்று தேவையென குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் மனித உரிமைகள் அமைச்சரான மகிந்த சமரசிங்கவே வெளிப்படையாக ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறினார்.

எனினும், இந்த அறிக்கையின் உள்ளடக்கம் தவறு என்றும் அதை சமர்ப்பிக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோமென்றும் தான் உறுதியாக தெரிவித்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேநேரம், சம்பந்தப்பட்ட நாடொன்றின் சம்மதமும், பேரவையின் சம்மதமும் இன்றி நாடொன்று தொடர்பாக பேரவையின் தலைவருக்கு தன்னிச்சையாக அறிக்கை விடுக்க முடியாதென்ற வரை முறைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருப்பதைப் பயன்படுத்தியும் மேற்குறித்த அறிக்கையை வெளிவர விடாமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தத் தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றால் இதைவிட பாரதூரமான விடயங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி வகிக்கும் போர்த்துக்கல் நாட்டின் பிரதிநிதியொருவர் இலங்கைப் பிரதிநிதிகளிடம் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதற்குப் பதிலளிக்க தாங்கள் தயாரென அமைச்சர் சமரசிங்க கூறியிருக்கிறார்.

இதன் பின்னர் தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் அதைத் தோற்கடிப்பதற்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக நடைபெற்ற சந்திப்புகளின் போது எதிர்பார்த்ததை விட சிறந்த பலன் கிடைத்ததாகவும் ,தென் அமெரிக்க , ஆபிரிக்க , ஆசிய உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் தீர்மானம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதைத் தோற்கடிக்க போதிய பலத்துடன் இருந்ததாகவும் எனினும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர இது சந்தர்ப்பமல்ல என்பதை உணர்ந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் அதைச் சமர்ப்பிக்கவில்லை எனவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்திருந்தார்.

இது மட்டுமல்லாது சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் இவ்வளவு காலமும் அடுத்துவரும் ஒவ்வொரு அமர்வுக்குமான நிகழ்ச்சி நிரலில் இலங்கைக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் இம்முறை அது நிகழ்ச்சி நிரலில் இருந்தே முற்றாக அகற்றப்பட்டு காலாவதியான கடிதமாக (Dead Letter) மாற்றப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க சுட்டிக் காட்டியிருந்தார்.

இதேநேரம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்குச் சார்பாகக் கிடைத்த இந்த முடிவுக்கு ஐ.நா.வில் தமிழ்த் தரப்பினரின் செயற்பாடின்மையே காரணம் எனவும் மறுபுறத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த தீர்மானத்தைத் தடுத்துக் கொள்ள அரசாங்கம் பாரிய பரப்புகளையும் பல்வேறு வழிகளிலான பிரச்சாரங்களையும் மேற்கொண்ட போதும் இவ்விவகாரத்தில் ஐ.நா.விலுள்ள தமிழர் தரப்பு எந்த அக்கறையையும் காட்டவில்லை என பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் நிலையத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் கிருபாகரன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஐ.நா.சபையில் பல தமிழர்கள் ஆண்டுக் கணக்கில் வேலை செய்கின்ற போதிலும் அவர்கள் விவாதம் நடைபெறும் இடத்திற்கு சென்று வாதாட தயாராக இல்லாமல் இருந்ததாகவும் கிருபாகரன் விசனம் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா.சபையில் தமிழர் தரப்பின் செயற்பாடின்மையால் சர்வதேச ரீதியில் பின்னடைவு ஏற்பட நேரிடுமென்றும் அவர் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கிருபாகரனின் கருத்தை வைத்து நோக்கும் போது ஐ.நா. சபையிலுள்ள தமிழ் தரப்புகள் அக்கறையுடனும் முழுவீச்சுடனும் செயற்பட்டிருந்தால் இலங்கை அரசுக்கான முடிவு மாறியிருக்கலாம் என்ற தோற்றப்பாட்டை இங்கு உருவாக்குகிறது. அதாவது தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் இன்னும் பல பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்திருக்கும் அல்லது தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் போன்ற ஏதாவதொரு முடிவு கிடைக்கப் பெற்றிருக்கலாமென்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

0 Comments: