Tuesday, October 16, 2007

முன்னாள் தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறி ஆட்சியாளருடன் போட்டிபோடக்கூடிய அளவுக்கு மனித உரிமைகளை மீறுகிறது இலங்கை அரசு

[16 - October - 2007] தினக்குரல்

* யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலே யாழ். குடாநாடு உட்பட அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு - கிழக்கிலுள்ள அத்தனை பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகிரங்கமாக ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையிலே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பகிரங்க அரசியல் நடவடிக்கைகளிலே எந்தவிதமான தயக்கமுமின்றி, வஞ்சகமும் இன்றி கலந்து கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் அதற்கான விலையாகத் தங்கள் உயிர்களைக் கொடுப்பதைத் தயவு செய்து உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு யதார்த்தம்.
** கடந்தவாரம் பாராளுமன்றத்தில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் என். ஷ்ரீகாந்தா ஆற்றிய உரை

நாங்கள் எவரையும் அவர் பேசுகின்ற அலங்கார வார்த்தைகளினால் எடைபோடுகின்றவர்கள் அல்லர். சொற்களுக்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட நபர் அல்லது நபர்கள் அல்லது அவர்கள் சார்ந்திருக்கின்ற நிறுவனம் அல்லது அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற ஸ்தாபனம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதனை வைத்துத்தான் நாங்கள் அவர்களை எடைபோட விரும்புகிறோம்.

அரசாங்க தரப்பிலே குறிப்பிட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயம் தொடர்பான சட்டமூலத்தைக் கொண்டுவந்ததற்கு ஆதரவாக, அதற்கான காரணமாக, மிக அலங்காரமான வார்த்தைகளிலே உன்னதமான நோக்கங்களை உள்ளடக்கி பல்வேறு கருத்துகள் பலமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த அரசாங்கம் முழு இலங்கைத் தீவிலும், மிகவும் குறிப்பாக போர் தொடர்ந்து கொண்டிருக்கின்ற வடக்கு - கிழக்கு மாகாணத்திலும் அரசாங்க தரப்பைச் சேர்ந்த, அரசாங்கத்துடன் இணைந்த, அரச துருப்புகளுடன் தோளோடுதோள் நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு, சிவில் உடைகளில் ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருக்கின்ற பல்வேறு சட்டவிரோத காடையர் கும்பல்களுக்கு, அப்பாவித் தமிழ் மக்களை வகைதொகையின்றிப் படுகொலை செய்கின்ற பகிரங்க அனுமதியை - பகிரங்க ஃடிஞிஞுணஞிஞு ஐ தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, நாங்கள் ஒன்றை மாத்திரம் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் உங்களை நம்பத் தயாராக இல்லை. தினமும் போதையிலே உழன்றுகொண்டிருக்கின்ற ஒரு குடிகாரன் மது விலக்குக்கு ஆதரவாக காகிதத்திலே கட்டுரைகள் வடிப்பதைப்போல அல்லது காகிதத்திலே கவிதை வடிப்பதுபோல, இந்த அரசாங்கம் தமிழ்பேசும் மக்கள் தொடர்பிலே மனித உரிமைகளை மிதித்துத் துவைத்துக்கொண்டு, இங்கே மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள், குடியியல் உரிமைகள் தொடர்பாகப் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக, சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, சமீபத்திலே ஐக்கிய நாடுகள் மன்றத்தினுடைய மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானமொன்று கொண்டுவரப்படவிருந்ததைப் பகீரதப்பிரயத்தனம் செய்து தடுத்துவிட்ட பின்னணியில், அவசர அவசரமாக இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பது, உண்மையை மதிக்கின்ற இருதரப்பிலுள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்தச் சட்டமூலத்தினூடாக சர்வதேச சமூகத்தின் கண்களிலே மண்ணைத் தூவ முடியுமென்று அரசாங்கம் நம்பினால், அது வெறும் பகற்கனவென்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முழு உலகத்துக்கும் தெரியும். ஒருவேளை, சர்வதேச சமூகம் உங்களை உரிய விதத்திலே கண்டிப்பதற்கு இன்னும் நாட்கள் பிடிக்கலாம். ஆனால், அதனுடைய அர்த்தம் சர்வதேச சமூகத்துக்கு உண்மை தெரியாதென்பதல்ல. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்க அரசு, அந்த நாட்களிலே எதையெதையெல்லாம் செய்ததோ, அந்த நடவடிக்கைகளோடு போட்டி போடக்கூடிய அளவிலே இன்றைக்கு எமது மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை இந்த அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பதை உண்மையை நேர்மையை மதிக்கின்ற எவரும் ஒருபொழுதும் மறுத்துரைக்க முடியாது.

துருப்புகளைக் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. அரச படைகளின் எடுபிடிகளாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிற தமிழ்த் தேசவிரோத காடைக் கும்பல்களைக் குறைசொல்லிப் பிரயோசனமில்லை; அவர்களுக்கு `லைசென்ஸ்' வழங்கியிருப்பது நீங்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

உதாரணமாக, கிழக்கு மாகாணத்திலே பல ஆண்டுகளாக அட்டூழியங்களைச் செய்துவந்த கருணா என்ற மனிதர் இன்று பலகோடி ரூபாக்களோடு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பம் இந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்பதை நான் கேட்க விரும்புகின்றேன். அவருக்குப் பதிலாக பிள்ளையான் என்ற ஒரு நபர் அந்தக் காடைக்கும்பலுக்குத் தலைமை ஏற்றிருக்கிறாரே. இந்தக் கருணா, பிள்ளையான் ஆகியோருடைய தலைமையிலேதான் அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டார்கள் என்பதை உலகம் புரிந்துகொண்டிருக்கிறது. இவர்கள் இன்னும் பல விதமான அட்டூழியங்களைப் பொதுமக்களுக்கெதிராக அரங்கேற்றினார்கள். இவர்களுக்கு இதுவரையிலே அட்ணஞுண்ணாதூ என்று சொல்லப்படக்கூடிய பகிரங்க மன்னிப்பு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கவில்லை. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ஒரு காரணத்துக்காக, அனுதாபிகள் என்ற ஒரு காரணத்துக்காக, அப்பாவித் தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிற யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் உட்பட வடக்கு - கிழக்கு மாத்திரமின்றி, கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கூட வேட்டையாடிக்கொண்டிருக்கிற இந்த அரசு, இந்தக் கொலைகாரர்களைப் பொறுத்தவரையிலே என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது? சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய நபரல்லவா இந்தக் கருணா? கைது செய்யப்பட்டு கம்பிகளுக்குப் பின்னாலே தள்ளப்படவேண்டிய நபரல்லவா இந்த பிள்ளையான்? அப்படிப்பட்ட இவர்கள் பகிரங்கமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அரச துருப்புகளோடு தோளோடுதோள் உரசிக்கொண்டிருக்கிறார்கள். உயரதிகாரிகளோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அனுமதித்துக்கொண்டு , இன்றைக்கு இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக இந்த உன்னத நோக்கங்களை இந்த அரசாங்கம் கூறுவதை உலகம் ஒரு போதும் நம்பமாட்டாது - நம்பமுடியாது என்பதை நான் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் திருமதி லூயிஸ் ஆர்பர் இலங்கைக்கு வந்திருக்கிற சந்தர்ப்பத்திலே இந்தச் சட்டமூலம் இச்சபையிலே சமர்ப்பிக்கப்படுகிறதென்றால் அது ஒன்றும் தற்செயலாக நடந்திருப்பதல்ல, நீங்கள் எதனைச் செய்தாலும் சாதுரியமாகவும் மிகவும் கனகச்சிதமாகவும் தான் செய்யப்பார்க்கிறீர்கள் என்ற அந்தப் பாராட்டை நான் அரச தரப்புக்கு உரித்தாக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பினைச் சுமந்திருக்கிறேன். ஆனால், ஒரு விடயம், இவ்வாறாக தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டு போக முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

யாழ்ப்பாணக் குடாநாடு பி.ப. 2 மணியோடு அடங்கி விடுகிறது. அங்கு சட்டத்தரணிகள் கூட வாய்திறந்து அங்குள்ள நடவடிக்கைகளைப் பற்றிப் பேச அஞ்சுகிறார்கள். சந்தேகம் இருந்தால் வந்து பாருங்கள்! நான் யாழ்ப்பாண வீதிகளிலும் குடாநாட்டின் மூலைமுடுக்குகளுக்கும் என்னோடு அழைத்துச் செல்ல என்னுடைய அரசாங்க தரப்பு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள்! அங்கு இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள்களிலே வரும் வெள்ளை அரைக்காற்சட்டை அணிந்த நபர்கள் கொலைகள் புரிவதைப் பாருங்கள்! அவர்கள் கொலை நடைபெறப்போகிற இடத்துக்கு வருவதற்கு 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்னர் கொலை நடைபெறப்போகிற சூழலிலிருந்து துருப்புகள் அகற்றப்படுவதைப் பாருங்கள்! வீதிகளிலே எங்காவது ரோந்துக் கடமைகளில் ஈடுபட்டிருக்கிற அரச தரப்பு இராணுவச் சிப்பாய்கள் சடுதியாக அங்கிருந்து அகற்றப்பட்டால், அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே அங்கு வெடி ஓசை கேட்கும் என்கிற யதார்த்தத்தை வந்து பாருங்கள்! நான் இதனை ஓர் அறைகூவலாக விடுக்க விரும்புகிறேன் நண்பர்களே! நீங்கள் மனித உரிமைகளை மதிப்பது உண்மையென்றால், நீங்கள் தயவுசெய்து ஒரு நிமிடமாவது இதனை தீவிரமாகப் பரிசீலியுங்கள்!

அது மாத்திரமல்ல, சட்டத்தின் கீழ் பகிரங்க மன்னிப்பு அளிக்கப்பட்டிருக்காத கருணாவை, பிள்ளையானை, கடந்த காலங்களிலே அவர்களோடு சேர்ந்து அராஜகங்களை அரங்கேற்றிய அத்தனை நபர்களையும் இன்றைக்குப் பகிரங்கமாக நடமாட அனுமதித்திருக்கிற நீங்கள், உங்களுடை அரசு கடந்த காலங்களிலே யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலே யாழ். குடாநாடு உட்பட அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு - கிழக்கிலுள்ள அத்தனை பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகிரங்கமாக ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையிலே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பகிரங்க அரசியல் நடவடிக்கைகளிலே எந்தவிதமான தயக்கமுமின்றி, வஞ்சகமும் இன்றி கலந்து கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் அதற்கான விலையாகத் தங்கள் உயிர்களைக் கொடுப்பதைத் தயவு செய்து உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு யதார்த்தம்.

அரசியலமைப்பிலே அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாகக் கூறப்பட்டிருக்கின்ற அத்தனை விடயங்களும் இலங்கை நாட்டிலே கடந்த பல வருடங்களாக ஆட்சிக்கு வந்த அரசுகளினால் எப்படி இரவும் பகலும் தொடர்ந்து மீறப்பட்டு வந்திருக்கின்றன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, நீங்கள் இங்கே கொண்டு வந்திருக்கின்ற இந்தச் சட்டமூலம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை - வெறும் ஏமாற்றுவித்தை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நான் ஒரு விடயத்தை மாத்திரம் இறுதியாக ஒரேயொரு நிமிடத்தில் குறிப்பிட்டு முடிக்க விரும்புகிறேன். போரைப் பரப்புவதை கணூணிணீச்ஞ்ச்ணாடிணிண ணிஞூ தீச்ணூ ஒரு குற்றமென்று இந்தச் சட்டவாக்கம் கூறுகிறதே, அது இந்தச் சட்டமூலம் சட்டமாகப் போகின்ற இன்னும் அடுத்த சில மணித்தியாலங்களைத் தொடர்ந்து அது சட்ட அந்தஸ்தைப் பெற்ற பிறகு எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படப் போகின்றது என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். போரைப் பரப்புவது இந்தச் சட்டமூலத்தின் கீழே குற்றமான பிறகு, "போரை முன்னெடுங்கள்! போருக்குப் பிறகுதான் அரசியல் தீர்வு! என்று பேசிக் கொண்டிருக்கின்ற சக்திகள் தொடர்பிலே, இந்த இலங்கைத் தீவிலே ஒரேயொரு இனம் - அதுவும் சிங்கள இனம் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கண்மூடித்தனமாக உழறிக் கொண்டிருக்கின்ற அரசியல் முட்டாள்கள் தொடர்பிலே, போர் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோஷிக்கின்ற, எதிர்க்கட்சிகளின் தரப்பிலே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற அந்தப் போர் வெறியர்கள் தொடர்பிலே இந்தச் சட்டமூலத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்படப்போகிறது என்பதைத்தான் நாங்கள் அறிய விரும்புகிறோம். பர்மாவிலே பௌத்த பிக்குகள் கொல்லப்படுகின்றபோது தட்டிக்கேட்கத் துணிவற்ற, நெஞ்சுரமற்ற ஆனால், அதேநேரத்தில் பௌத்தத்தின் கோட்பாடுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற எதிர்த்தரப்பு நண்பர்கள் உட்பட போருக்கு ஆதரவாகக் கோஷிக்கின்ற அத்தனை பேரின் தொடர்பிலே என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பதனை அறிய நாங்கள் ஆவலாகக் காத்திருக்கிறோம்.

0 Comments: