தினக்குரல்
-விதுரன்-
வன்னியில் தினமும் நடைபெற்று வரும் சிறுசிறு மோதல்கள் பெரும் போராக மாறப்போகிறது. பெரும்போர் ஒன்றுக்காக படையினர் சிறுசிறு தாக்குதல்கள் மூலம் புலிகளை ஆழம் பார்க்கிறார்கள். சரியான தருணம் வரும் போது வடக்கில் பாரிய படைநகர்வுகளை ஆரம்பிப்பதே படையினரின் திட்டமாகும்.
அதேநேரம், வடக்கில் படையினர் ஆரம்பிக்கவுள்ள பாரிய படை நடவடிக்கைக்காக விடுதலைப்புலிகள் காத்திருக்கின்றனர். கிழக்கில் மரபு வழிப் படையணி கெரில்லா படையணியாக மாற்றம் பெற்றுவிட்டதால் வடக்கை படையினர் இலக்கு வைத்துள்ளனர். ஆனாலும், வடக்கே பாரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான தருணம் குறித்து அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
வடபகுதியில் சிறுதுண்டு நிலத்தைக் கூட இழக்க புலிகள் தயாரில்லையென்பது படையினருக்கு நன்கு தெரியும். இதனால், வடக்கில் தங்களுக்கு கிடைக்கும் சிறு வெற்றிகள் கூட புலிகளுக்கு பெரும் தோல்வியாக இருக்குமெனக் கருதும் படையினர், வடக்கில் தங்களுக்கேற்படும் சிறு பின்னடைவுகள் கூட புலிகளுக்கு பெரும் வெற்றியாகிவிடக் கூடாதென்பதிலும் தீவிர கவனம் செலுத்துகின்றனர்.
கிழக்கில் தங்கள் போராட்ட வழி முறையை புலிகள் மாற்றியமைத்ததையடுத்து அங்கிருந்த படையணிகளை தற்காலிகமாக வடக்கே அழைத்துள்ளனர். இது வடக்கில் புலிகளின் போரிடும் ஆற்றலை மிகப்பெருமளவில் அதிகரித்துள்ளதுடன், வடக்கில் அதிகரித்துள்ள புலிகளின் படையணிகளை வழிநடத்தவும் வழிவகுத்துள்ளது.
கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் திருகோணமலை முதல் அம்பாறை வரை பாரிய படைநகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டபோது, கிழக்கின் களநிலையை புலிகளின் தலைமைப்பீடம் நன்குணர்ந்திருந்தது. கிழக்கில் நிலப்பரப்பை தக்கவைத்து வீண் இழப்புகளை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. இதனால் தங்கள் படையணிகளையும் ஆயுதங்களையும் பெரும் சேதமின்றி வடக்கே நகர்த்தியிருந்தனர்.
கிழக்கில் இடம்பெற்ற சமரில் புலிகளுக்கு மிகக் குறைந்தளவு சேதங்களே ஏற்பட்டன. ஆனால், கிழக்கில் படையினர் ஒவ்வொரு பிரதேத்தையும் கைப்பற்றும் போதும், அதனால் புலிகளுக்கு பெரும் சேதமேற்படவில்லையென்பது வெளியுலகிற்கு தெரிந்தால் தங்கள் படை நடவடிக்கையில் பலன் கிட்டவில்லையென்பதுடன் புலிகள் மிகவும் தந்திரமாக நடந்துகொண்டார்களென்பதை உலகம் அறிந்துவிடக் கூடாதென்பதற்காக புலிகளுக்கு பாரிய உயிர்ச் சேதங்களைத் தாங்கள் ஏற்படுத்தியதாக படையினர் பெரும் பிரசாரம் செய்தனர்.
புலிகள் தங்களது ஆயுதங்களை வடக்கே நகர்த்த முடியாதவாறு படையினர் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், புலிகளுக்கு கிழக்கில் மிகக் குறைந்தளவு சேதங்களே ஏற்பட்டன. களநிலைமைக்கேற்ப தற்காப்புச் சமரை நடத்தியவாறு தங்கள் ஆளணியையும் ஆயுத வளத்தையும் வடக்கே நகர்த்திவிட்டனர். இது படையினருக்கு பெரும் ஏமாற்றமாகவேயிருந்தது.
புலிகளின் இந்தத் தந்திரம் வடக்கே அவர்களது போரிடும் ஆற்றலை அதிகரித்துள்ளது. கிழக்கிலிருந்து போராளிகளும் தளபதிகளும் வடக்கே வந்துவிட்டதால், வடக்கில் அதிகரித்துள்ள புலிகளின் படையணிகளை அந்தத் தளபதிகள் தற்போது வழிநடத்தி வருகின்றனர். இது வடபகுதி களமுனையில் படையினர் தினமும் சந்திக்கும் பலத்த இழப்புக்கள் மூலம் தெரிய வருகிறது.
அத்துடன், வடபகுதி களமுனை எப்படியானதென்பதை தினமும் படைத்தரப்பு உணர்கிறது. புலிகளின் பதில் தாக்குதல் படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எந்த முனையில் நகர முயன்றாலும் பலத்த அடி விழுகிறது. மாரிகாலம் தொடங்கிவிட்டால் நிலைமை மேலும் மோசமாகலாமென்பதால் மாரிகாலம் முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு படையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம், வட பகுதிக் களமுனையை பொறுத்தவரை யாழ். குடாநாடும் மணலாறும் புலிகளின் பிரதான இலக்குகளென்பதையும் படையினர் நன்கறிவர். இதனால், வன்னிக்குள் பாரிய படை நகர்வை மேற்கொள்ளும் அதேநேரம் புலிகளின் பாரிய தாக்குதல்களிலிருந்து யாழ். குடாவையும் மணலாறையும் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவையும் படையினருக்குள்ளது.
தற்போதைய நிலையில் புலிகள் அடுத்தடுத்து பல ஆயுதக் கப்பல்களை இழந்து விட்டதால் அவர்கள் மிகவும் பலவீனமாயிருப்பதாக படைத்தரப்பு கருதுகிறது. ஒரேநேரத்தில் மூன்று கப்பல்களில் ஆயுதங்களைக் கொண்டு வருமளவிற்கு புலிகளுக்கு ஆயுதத் தேவை அதிகரித்துள்ளதாகவும் படையினர் கருதுகின்றனர்.
ஒரு கப்பலில் ஆயுதத்தை கொண்டு வந்து தரையிறக்குவதே மிகமிகச் சிரமமென்ற நிலையில் புலிகள் ஒன்றாக மூன்று கப்பலில் ஆயுதங்களைக் கொண்டு வருமளவிற்கு வடபகுதி யுத்தமுனையில் அவர்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்திப்பதாகவே படையினர் கருதுகின்றனர். அத்துடன், இந்த மூன்று கப்பல்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் மேலுமொரு கப்பலில் அவர்கள் (கடந்த வாரம்) ஆயுதங்களைக் கொண்டு வருமளவிற்கு பலத்த ஆயுதப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவே படைத்தரப்பு கூறுகின்றது.
இவ்வாறு குறிப்பிட்ட சில வாரங்களில் நான்கு ஆயுதக் கப்பல்களை புலிகள் இழந்துவிட்டதால் வன்னியில் அவர்கள் மேலும் பலவீனமடைந்துள்ளதாகக் கருதும் படையினர், புலிகள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடுத்து அவர்களை மேலும் மேலும் பலவீனமாக்கிவிட வேண்டுமென்று முனைப்புக் காட்டுகின்றனர்.
ஆனாலும், மாரிகாலம் முடிவடையும் வரை பாரிய தாக்குதலை தொடுக்க முடியாத நிலையிலேயே படைத்தரப்பு உள்ளது. அதேநேரம், மாரி காலத்திற்கு முன் வன்னியில் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்து விடலாமென்றும் படைத்தரப்பு அஞ்சுகிறது.
இதனால், தங்களது தாக்குதலுக்கு முன்னர் புலிகளது தாக்குதலைச் சமாளிக்க தினமும் புலிகளுக்கெதிராக படையினர் சிறுசிறு தாக்குதல்களை பல்வேறு முனைகளிலும் நடத்துகின்றனர். புலிகளுக்கு ஓய்வு கொடுக்காது இந்தத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. எனினும், இது பாரிய படை நடவடிக்கையல்ல. இது அவ்வாறானதொரு தாக்குதலுக்குரிய தருணமுமல்ல என்றும் படையினர் கருதுகின்றனர்.
மன்னாரில் மடுப் பகுதியை கைப்பற்ற படையினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவியது. இதில் படையினருக்கு பலத்த சேதமும் ஏற்பட்டது. இதனால், வன்னிக்குள் தற்போது பாரிய படை நகர்வுகளைத் தவிர்த்து சிறிய சிறிய நடவடிக்கைகள் மூலம் புலிகளை ஓய்வாக இருக்க விடாது தாக்குவதும் அவர்களுக்கு தினமும் சிறுகச் சிறுக இழப்புகளை ஏற்படுத்தி பெரும் சலிப்பையும் விரக்தியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதே படையினரின் நோக்கமாகும்.
அதேநேரம், வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளிலிருந்து மடுவை நோக்கி படை நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்த்து மன்னாரிலிருந்து வடபகுதி நோக்கி கரையோரத்தால் நகர்ந்துவிட்டு பின்னர் இடையே குறுக்கறுத்து கிழக்குப் பக்கமாக முன்னேறும் போது பலத்த எதிர்ப்பின்றி மடுப்பக்கமாக நகரலாமெனவும் படைத்தரப்பு கருதுகிறது.
அதேநேரம், மன்னார் கரையோரத்தை புலிகள் வசமிருந்து உடனடியாக கைப்பற்றிவிட வேண்டுமெனவும் அரசு கருதுகின்றது. தென் கிழக்காசிய நாடுகளிலிருந்து வரும் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்படுவதால் இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வர புலிகள் முயற்சிப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த இந்திய கடற்படையினர் முயற்சித்தாலும் அவர்களது கண்களில் மண்ணைத் தூவிவிட்டு புலிகள் ஆயுதங்களை கடத்துவதாகவும் படையினர் கருதுகின்றனர்.
இதனால், மன்னார் கரையோரத்தை முழுமையாகக் கைப்பற்றி விடுவதன் மூலம் இந்தியாவுடனான புலிகளின் அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து விடலாமெனக் கருதியே தற்போது மன்னாருக்கு வடக்கே கரையோரமாக பாரிய படை நகர்வை மேற்கொள்ளும் முயற்சியில் படைத்தரப்பு தீவிர அக்கறை செலுத்துகிறது. இதற்காக தினமும் மன்னார் பகுதியிலிருந்து கரையோரப் பகுதிகளை நோக்கி தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடத்தப்படுகின்றன.
படையினரின் நோக்கத்தை புலிகளும் நன்கறிவர். அவர்களும் கடும் பதில் தாக்குதல் மூலம் படையினருக்கு தினமும் பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன், மன்னார் கரையோரமாக அண்மையில் படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சியையும் முறியடித்துவிட்டனர். மேலும், படையினர் இப்பகுதியில் பாரிய நகர்வை மேற்கொள்வர் என்பதால் அதற்கேற்ப வியூகங்களை வகுத்து தாக்குதல்களை நடத்தியும் வருகின்றனர்.
இதேநேரம், வன்னியில் அண்மைக்காலமாக ஆயிரக் கணக்கானோரைப் புலிகள் தங்கள் படையணிகளில் சேர்த்துள்ளதையும் படையினர் அறிவர். இது புலிகளின் ஆளணியை பல மடங்காக்கியுள்ளது. தற்போதைய நிலையில் புலிகள் ஆயுத பலத்தையும் அதிகரித்துவிட்டால் நிலைமை தலைகீழாகி விடுமென்பதும் படையினருக்குத் தெரியும். இதனால், கடற்புலிகளின் செயற்பாடுகளை முடக்கும் தீவிர முயற்சியில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.
புலிகள் வசமுள்ள கரையோரப்பகுதிகளை கைப்பற்றி கடற்புலிகளது நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதன் மூலம் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுக்க முடியுமெனவும் படையினர் கருதுகின்றனர். ஏற்கெனவே, கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதால் கிழக்கே கடற்புலிகளின் செயற்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டதாக படையினர் கூறுகின்றனர்.
அதுபோல், மன்னாருக்கு தெற்கே சிலாவத்துறை பகுதியையும் கைப்பற்றிவிட்டதால் மன்னாருக்கு தெற்கே கடற்புலிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்திவிட்டதாக படைத்தரப்பு கூறுகிறது. அதுபோல் மன்னாருக்கு வடக்கேயும் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால் நாட்டின் மேற்குக் கரையோரம் முழுமையாக கடற்படையினரின் ஆதிக்கத்தினுள் வந்துவிடும்.
இவ்வாறெல்லாம் திட்டமிட்டு படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கையில் புலிகளும் பதில் தாக்குதல்கள் மூலம் தினமும் படையினருக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர். வன்னியில் தினமும் நடைபெறும் மோதல்களில் படையினருக்கு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருவதுடன் பலர் படுகாயமடைந்தும் வருகின்றனர். புலிகளின் மிதிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகள், முன்னேற முயலும் படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்துகின்றன.
பாரிய படைநகர்வொன்றின்போது, முன்னேற முயலும் படையினர் சிறிது தூரம் முன்னேறி அந்தப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்ற முயலும் போது, அந்த இடத்தை குறிவைத்து புலிகள் கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்துவதால் படையினர் பலத்த இழப்புகளை சந்திப்பதாக படைத்தரப்பே கூறுகின்றது.
புலிகளின் இவ்வாறான தந்திரங்களால் படையினரின் முன்னேற்ற முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்படுகின்றன. தினமும் வன்னியில் புலிகளுக்கெதிராக பலத்த தாக்குதல்களை மேற்கொண்டும் படையினரால் எவ்வித முன்நகர்வுகளையும் மேற்கொள்ள முடியவில்லை. இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
அதேநேரம், முன்னரங்க பகுதிகளில் புலிகளை மோதல்களுக்கிழுத்து அவர்களுக்கு தினமும் இழப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்தை புலிகளுமறிவர். இதனால், அவர்கள் படையினரின் தந்திரத்திற்குள் சிக்காது தங்கள் பகுதிக்குள் படையினரை வரவிட்டு திடீர் தாக்குதல்கள் மூலம் படையினருக்கு சேதங்களை ஏற்படுத்துகின்றனர்.
பாரிய முன்நகர்வுகளின் போது எவ்வாறான பதில் தாக்குதல்களை மேற்கொள்வதென்ற திட்டமிடல்கள் மூலம் படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர்.
யுத்த டாங்கிகளும் ஆட்லறி ஷெல்களும் பல்குழல் ரொக்கட்டுகளுமே இன்று படையினரின் முக்கிய போர்த்தளபாடங்களாகும். பதில் தாக்குதல்களுக்கு புலிகள் ஆட்லறி ஷெல்களையும் மோட்டார்களையுமே பயன்படுத்துகின்றனர். இதனால், பாரிய படை நகர்வொன்றின் போது தங்கள் கையே ஓங்கியிருப்பதாக படைத்தரப்பு நம்புகின்றது. இதனை சாதகமாக்கி பெரும் முன்னேற்றங்களை மேற்கொண்டுவிட முடியுமெனவும் அவர்கள் நம்புகின்றனர்.
தற்போதைய நிலையில் வன்னிக் களமுனையில் தினமும் மோதல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அது பாரிய படை நகர்வுகளல்ல. மாரிகாலத்திற்கு முன் படையினர் மீது புலிகள் பாய்ந்து விடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே தற்போது தினமும் இந்தத் தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இத் தாக்குதல் மாரிகாலம் முடியும் வரை தொடரப்போகிறது.
இதனால், மாரிகாலம் முடிவடைவதற்கிடையில், குறிப்பாக அடுத்த மாதம் மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் முக்கிய செய்தியொன்றைக் கூறவிருப்பதாகக் கருதப்படுவதால் அந்த முக்கிய செய்திக்குரிய பாரிய தாக்குதலைப் புலிகள் எங்கு நடத்துவார்களென்ற எதிர்பார்ப்பில் படைத்தரப்பு காத்திருக்கிறது.
Sunday, October 14, 2007
மாரி முடியும் வரையில் காத்திருக்கும் படையினர்
Posted by tamil at 8:10 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment