Tuesday, October 30, 2007

லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயமும் மனித உரிமைகள் விவகாரமும்

[30 - October - 2007] thinakkural

நவீன இலத்திரனியல் ஊடகங்கள் கொடிகட்டிப் பறக்கின்ற இந்த யுகத்தில் எஃகுத் திரைகளுக்குப் பின்னால் எந்தத் தகவல்களையும், மறைத்து வைக்க எடுக்கின்ற நடவடிக்கைகள் திரைப்படங்களில் வரும் கோமாளித்தனம் பண்ணும் பாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு ஒப்பான நடவடிக்கையாகவே கணிப்பீடு செய்ய வேண்டியிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்தங்களாக நமது மண்ணில் நடந்து கொண்டிருக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் வாழ்வு தொடர்பான அவலங்கள் என்றோ சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுவிட்டது. அதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திலிருந்து மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கைகளும் காலம் கடந்து போன ஒரு அணுகுமுறையாகவே அமையும்.

நாட்டின் ஆளும் வர்க்கம் வாக்காளர்களைப் பிழையான வழிகளில் நெறிப்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பிரசாரங்களும் ஆட்சியாளர்களின் இருப்புத் தொடர்பான பிரச்சினையே அன்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வோ யதார்த்தமோ அல்ல.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐ.நா. சபை விஜயம் நிகழ்ந்த சந்தர்ப்பம் மனித உரிமைகள் அமைப்பு ஏதேனும் இலங்கைக்கெதிரான தீர்மானங்களை நிறைவேற்றி விடுமோ என்றதொரு நிலை நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அப்படியெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இன்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரே வந்து சென்றிருக்கின்றார். இவரை அரசாங்கம் ஒரு விருந்தாளியாக அழைத்து வந்திருக்கின்றது என்ற செய்திக்குப் பெரும் விளம்பரம் கொடுக்கப்பட்டது. எனவே, அவர் ஓர் அழைப்பாளி! உபசரிப்பு சந்திப்பு எல்லாம் அழைத்தவர்களுக்கு மட்டுமே ஏக உரிமை என்ற செய்தியை அந்தப் பிரசாரங்கள் வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தன.

மொத்தத்தில் லூயிஸ் ஆர்பர் கைவிலங்கிடப்பட்ட ஓர் விருந்தாளியாகவே அவர் இங்கு நடத்தப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

தான் விரும்பிய பயணங்களை மேற்கொள்ளவோ விரும்பியவர்களைச் சந்திக்கவோ லூயிஸ் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான சிரேஷ்ட நிர்வாகி இங்கு வருகை தந்தது அரசாங்கம் கொடுக்கின்ற விருந்தை உண்டு கழிப்பதற்கோ அல்லது இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசிப்பதற்கோ அல்ல. விருந்தாளியாகவோ அல்லது விருந்தாளியாக முத்திரைப் பதிக்கப்பட்ட நிலையில் அவர் இங்கு கால் பதித்திருக்கலாம். ஆனால், அவர் வருகை இங்கு நடைபெறும் அவலங்கள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை நாடிபிடித்துப் பார்ப்பதற்குத்தான் என்பதே உண்மை.

அரசு மட்டத்தில் இவர் சந்திப்புக்களை மேற்கொண்ட போது இவருக்கு அரசின் மனோநிலை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவை இவ்விஜயத்தின்போது லூயிஸ் ஜே.வி.பி. செயலகத்தில் சந்தித்தார். அவர்களும் யுத்தத்தின் மூலமே நாம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவிரும்புகின்றோம். ஐ.நா. இங்கு கூடாரம் போட்டு எங்களை வழிநடத்த வேண்டிய தேவையுமில்லை என அடித்துக் கூறியதுடன் பாதுகாப்புப் படையினர் வட, கிழக்கில் மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடையே சுமுகமான உறவு காணப்படுகின்றது. எனவேதான், எமது பாதுகாப்புப் படையினர் வடகிழக்கில் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.

ஆனால், ஈராக், ஆப்கானிஸ்தானில் படைகளினால் அப்படி மக்கள் மத்தியில் சுதந்திரமாக நடமாடமுடியுமா? என அவர் லூயிஸ் ஆர்பரிடம் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். இலங்கையின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் இது புரிந்துகொள்ள அவருக்குச் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கும். மாறாக ஐக்கிய தேசியக் கட்சி சில தினங்களுக்கு முன்பு எடுத்த தீர்மானங்களும் பெரும்பான்மையினம் இனப்பிரச்சினைக்குக் கொடுக்கப் போகும் தீர்வைக் கோடிட்டுக் காட்டியிருக்கும்.புதிதாக அவருக்கு இங்கு ஏதேனும் கண்டுகொள்வதற்கு வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்காது. இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைகள் தொடர்பாக லூயிஸ் ஆர்பர் முன்பின் தெரியாமல் இங்கு காலடி எடுத்து வைக்கவில்லை.

புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மக்கள் படும் நெருக்கடிகளைக் கண்டு கொள்வதற்கோ அல்லது விடுவிக்கப்பட்ட கிழக்கைத் தரிசிப்பதற்கோ, அங்கு மக்கள் வாழ்வு தொடர்பாக பார்ப்பதற்கோ அவருக்கு ஏற்பாட்டில் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

ஒருபக்க நியாயங்களைக் கேட்டு அவர் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இங்கு நிலவியது.

அவர் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இவர் மிகவும் இக்கட்டான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். தேவாலய குருமார்களைச் சந்திப்பதற்கு மேலாக துயரங்களைக் கொட்டித்தீர்க்க வந்த ஆயிரக்கணக்கானவர்களின் அபாயக் குரலையும் முகங்களையும் மட்டுமே இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் அவரால் பார்க்க முடிந்தது.

துயர் சொல்ல வந்த மக்களைச் சந்திப்பதற்கு அவருக்கு இராணுவம் இடம்கொடுக்கவில்லை. அவரால் அவர்கள் பக்கம் ஒரு அடிகூட நகரமுடியவில்லை. இச்செயல் என்ன செய்தியை உலகிற்குச் சொல்லுகின்றது? வெலிக்கடை - தென்னிலங்கையில் தலைநகரில் அமைந்துள்ள மிகப் பெரிய சிறைக்கூடம் அங்கு பலவருடங்களாக எதுவித விசாரணையுமின்றி கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள், இவர் இலங்கை வருகையை அறிந்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை தொடக்கியதுடன் லூயிஸ் தம்மைச் சந்தித்து எமது துயரங்களைக் கேட்கும் வரை நாம் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவிப்புச் செய்தனர். இச்செயல் அரசை இக்கட்டில் மாட்டிவிட்டது. அச்சந்திப்பைத் தடுப்பதற்கு படையினரால் முடியாமல் போனது. லூயிஸ் அவர்களையாவது சந்திக்காதிருந்திருந்தால் ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனம் பெரும் கேலிக்கூத்தாகப் போயிருக்க சந்தர்ப்பமிருந்தது. எனவே, இச் சந்திப்பின் அவசியத்தை லூயிஸ் தெளிவுபடுத்தி அனுமதியைப் பெற்றுக்கொண்டார்.

வெலிகடைச் சிறைக் கைதிகள் சார்பில் ஐவரே இவரைச் சந்திக்க சந்தர்ப்பம் பெற்றிருந்தார்கள். சந்திப்பின் பின்பு மனித உரிமைகள் ஆணையாளரிடம் இவர்கள் அவலங்களைக்கொட்டி வைத்திருக்கின்றார்கள். இன்னும் மூன்று மாதங்களுக்குள் உங்களுக்கு விமோசனம் கிட்டும் என அவர் உறுதிமொழி சொல்லியிருக்கின்றார். கைதிகள் அவர் வார்த்தையில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

எல்லாம் முடிந்த கையோடு மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவும் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு `விருந்தாளி, அழைப்பாளியின் கன்னத்தில் அறைந்த கதையாகவே' அது நிகழ்ந்திருக்கின்றது. இது அரச மட்டத்தில் பெரும் பின்னடைவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே, சூடு பறக்கும் விமர்சனங்கள் இப்போது துவங்கியிருக்கின்றது. இவரும் எல்.ரி.ரி.ஈ.யினரிடம் பணத்தை வாங்கிவிட்டுத்தான் இப்படிப் பேசியிருக்கின்றார் என இனவாதிகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விருந்தாளி! சந்திப்பில் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

விசாரணைக் கமிஷன்கள் சம்பவத்தை விசாரணை செய்ய உதவுமே தவிர குற்றவாளிகளைத் தண்டிக்க அதில் இடமில்லை. அரசாங்கத் தரப்பில் புதிதாக நம்பிக்கை ஏற்படும் வகையில் எந்த செய்தியும் மனித உரிமைகள் தொடர்பில் தனக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் முறைப்பாடு சொல்லியிருக்கின்றார்.

புலிகள், கருணா தரப்பால் மீறப்படும் மனித உரிமைகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தாலும் தன்னால் அப்பகுதிக்கு விஜயம் செய்து அவற்றை கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனை தருகின்றது எனவும் அவர் அங்கலாயித்திருக்கின்றார்.

கைவிலங்கிடப்பட்ட விருந்தாளி கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தின் உபயோகங்களைக் கண்டு கொள்ள சில காலங்கள் எடுக்கும்.

அரசாங்க மட்டத்தில் இவரை எப்படியும் சமாளித்து அனுப்பிவிடலாம், என எதிர்பார்த்தாலும், தலைக்கு மேல் வெள்ளத்தில் சிக்கிய நிலையிலேயே அரசாங்கம் சிக்கியிருக்கிறது.

அரசாங்க விருந்தாளியாகச் சொல்லப்பட்ட ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளருக்கு தடுப்புகளை விதித்து விருந்தாளியை அனுசரித்த ஒழுங்கு முறை அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றிக்கு மாறாக, சர்வதேச மட்டத்தில் பாரிய பின்னடைவுகளையும் அவமானத்தையுமே இச்சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. ஏன் அவர் இப்படி நடத்தப்பட்டார்? திட்டமிட்டு எல்.ரி.ரி.ஈ. யினருக்கு உதவும் நடவடிக்கையாக அல்லவா இது அமைந்திருக்கின்றது. அமைச்சர்களும் அரச அதிகாரிகளும் எல்.ரி.ரி.ஈ. யினரின் கையாட்களாக இந்த நாடகத்தை நடத்தியிருக்கின்றார்களா? என்று கேட்குமளவிற்கு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளை நெறிப்படுத்துவது யார் என்ற தேசபக்தர்கள் கேட்க வேண்டியிருக்கின்றது. அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா.வின் விஷேட செயலகமொன்றை அமைக்க அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அடித்துக் கூறியிருக்கின்றார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இப்படி ஒரு செயலகத்தின் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார். என்பதே இவ்விஜயத்தின் ஒட்டு மொத்த சுருக்கமாகும்.

0 Comments: