Tuesday, October 30, 2007

'ஓக்ரோபர் மாதமும் வரலாற்றின் வழிகாட்டியும்"

ஓகஸ்ட் மாதம் - ஓகஸ்ட் மாதத்தின் இறுதி நாட்களில் நாம் இப்போ அடியெடுத்து வைத்திருக்கின்றோம்! வரலாற்றுப் பதிவுகளைத் தன்னுள் அடக்கி என்றும் நினைவு கூரவைக்கும் அற்புதம் உண்டு இந்த மாதத்திற்கு.

இன்று எங்கு பார்ப்பினும் வெடியோசை! திரும்பும் பக்கமெல்லாம் போர் முழக்கங்கள்! துப்பாக்கி வேட்டுக்கள்; கைக்குண்டு வீச்சுக்கள்; கண்ணிவெடிகள்; விமானக் குண்டுவீச்சுக்கள்; எங்கு பார்ப்பினும் அழிவின் கதாநாயகனாக வெடிபொருட்கள்! மனித உயிர்களைக் குடிப்பது, அங்கங்களைப் பறிப்பது, கட்டடங்களைத் தகர்ப்பது என எந்த அழிவிலும் வெடிமருந்துகளின் காட்டாட்சி! ஆம் காடையரின் சண்டித்தனத்திலிருந்து பெரும் பெரும் போர்கள் வரை எங்கும் வெடிமருந்து இன்று பயன்படு பொருளாகிவிட்டது.

இந்த வெடிமருந்தைக் கண்டு பிடித்தவர்கள் சீனர்கள்... ஆனால் போர்களிலும், மனித உயிர்குடிப்பிலும் பயன்படுத்தப்படுமளவுக்கு அவர்கள் இறங்கிவிடவில்லை.

ஆனால் வெடிமருந்துகளைக் காலனின் தோழனாக உற்பத்தி செய்து கோடி கோடியாகக் குவித்தவர் அல்பேட் நோபல்! வெடிமருந்து உற்பத்தியைப் பிரமாண்டமான அளவில் உற்பத்தி செய்தவர் இவர். பணம் ஏராளமாகக் குவிந்தது இவரிடம். ஒவ்வொரு உயிர் விழும்போதும் இவரின் வங்கிக் கணக்குப் பொங்கிப் பொலிந்தது. இவர் பணப்பெருக்கத்தைப் பெற்றார். ஆனால் மனநிம்மதியைப் பெறமுடியவில்லை. இவர் திருமணம் செய்யவில்லை. அது மட்டுமல்ல, இவரின் இறுதி நாட்களில் இவர் மனம் குழம்பியவராகவே காணப்பட்டார்!

எனினும் இவர் தன் செயலுக்குப் பாவ விமோசனம் தேட நினைத்தாரோ என்னவோ தனது செல்வத்தை வங்கியில் வைப்பிலிட்டு அதன் வட்டியிலிருந்து வருடா வருடம் சர்வதேசப் பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்தார்.

ஆம்! அவை தான் நோபல் பரிசுகள்!

கலை, இலக்கியம், அரசியல், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், மருத்துவம் என வருடா வருடம் சர்வதேசப் பரிசுகள் நோபலின் பணத்தின் வட்டியிலிருந்து! அதேவேளை போர்களின் நாயகனான வெடிமருந்தால் கிடைக்கும் பணத்திலிருந்து சமாதானத்திற்கும் கூட நோபல் பரிசு.

ஆம்! அழிவின் பணம் வருடா வருடம் சமாதானத்திற்கான பரிசையும் வழங்குகிறது. வியப்பல்லவா? எப்படியிருந்தபோதிலும் இந்த அல்பிரட் நோபல் பிறந்ததும் இந்த ஒக்ரோபர் மாதத்தில் தான்! இப்படி அழிவுகளுக்கு கால்கோள் எடுத்துக்கொடுத்தவர் பிறந்த இந்த மாதம் ஆக்கிரமிப்பின் மாதமாகவும் இது தன்னை நிலை நிறுத்தியுள்ளது. ஆம் ஆதிக்கவாதிகளின் ஆக்கிரமிப்பு மாதமும் இதுதான்.

சோவியத் யூனியன், சீனா போன்ற பெரும் நாடுகள் அதாவது வல்லரசு என்ற நிலையை எட்டித் தொடும் நாடுகள் விடுதலை பெற்றது இந்த மாதத்தில்தான். பஞ்சத்திலும் பசியிலும் வாடும் உகண்டா விடுதலை பெற்றதும் இந்த மாதத்தில் தான். விடுதலையின் மாதமாக இருக்கும் இந்த மாதம் தான் ஆக்கிரமிப்பின் மாதமாகியது. கொலம்பஸ் அமெரிக்காவில் போயிறங்கியது ஒக்ரோபர் மாதத்தில் பரம்பரை பரம்பரையாக அமெரிக்க தேசத்தில் வாழ்ந்து வந்த இன்கா, மாயா இனங்கள் இந்தத் தரையிறக்கத்தால் தானே அழிக்கப்பட்டன. பொன்தேடும் வேட்டையில் இறங்கிய ஐரோப்பியர்கள் மண் பிடித்த கதை இது.

இப்படியான அநீதியான ஆக்கிரமிப்பு எமது மண்ணிலும் இடம் பெற்றது. 1987 ஒக்ரோபர் மாதத்தில்! ஆம் அந்த ஒக்ரோபர் 10 இல் தான் இந்திய அமைதிப்படை தமிழ்மக்கள் மீது போர்ப்பிரகடனம் செய்தது. மறக்க முடியாத ஒக்ரோபரல்லவா இது! இந்திய அமைதிப்படை யாழ். நகர வீதிகளில் எத்தனை பொதுமக்களைச் சுட்டுவிழுத்தியது.

யாழ். புகையிரத நிலையத்தில் பிரம்படியில், கொக்குவில் ரயில் நிலையத்தில், கொக்குவில் இந்துக்கல்லூரியில், சாவகச்சேரி சந்தையில் நாங்கள் இழந்த உயிர்கள் கொஞ்சமா நஞ்சமா? ஆம் 1987 ஒக்ரோபர் எங்களுக்கு குருதியால் எழுதப்பட்ட மாதம்! இந்திய அமைதிப் படையின் துரோகத்தால் எழுதப்பட்ட மாதம்! ஒக்ரோபர் விடுதலையின் மாதமாக அகிம்சையின் மாதமாக அழிவின் மாதமாக ஆக்கிரமிப்பின் மாதமாகவும் தன்னைப் பல்வேறு முகங்களில் வெளிக்காட்டியுள்ளது. ஆனால் இவையை நாம் அறிவதும் இவை காலம் காலமாக அறியப்படுவதும் வாசிப்பின் மூலமல்லவா? ஆம்! ஒக்ரோபர் வாசிப்பின் மாதமும் கூடத்தான். வாசிப்பு ஒரு மனிதனை முழுமை யாக்குகிறது. எவரோ ஒரு பெரியார் சொன்ன வார்த்தைதான் இது! ஆனால் இதற்குள் எவ்வளவு உண்மையிருக்கிறது. வானொலி, தொலைக்காட்சி என்பன பாவனைக்கு வந்தபோது பலருக்கும் ஒரு அச்சம் எழுந்தது. எங்கே வாசிப்பின் மகத்துவம் அற்றுப்போய் விடுமோ என்பதுதான் அது. ஆனால் அவர்களின் அச்சம் அர்த்தமற்றுப் போய்விட்டது.

வானொலி காதில் கேட்கும் பின் காற்றில் கலந்துவிடும். தொலைக்காட்சி காதிலும் கேட்கும் கண்ணிலும் தெரியும். பிறகு ஓடிப் போய்விடும் போனால் போனது தான். திரும்பி வரப்போவதில்லை. ஆனால் புத்தகங்கள் அப்படியல்லவே... புரிந்துகொள்ளாவிடில் திரும்பவும் படிக்கலாம். மறந்து போனால் கூட மீண்டும் எடுத்துப் புரட்டலாம்! அவை அசைக்க முடியாத ஆவணங்கள்! அதனால் தான் நூல்கள் தான் மனிதனின் உண்மையான நண்பர்கள் என்கிறார்கள். அதன் காரணமாகத் தான் வானொலியாலோ தொலைக்காட்சியாலோ வாசிப்புப் பழக்கத்தை அசைத்துவிட முடியவில்லை.

இப்போ இணையத்தளங்களின் காலம் இவை வந்ததும் வாசிப்புப் பழக்கம் இதற்குள் போய் கூடு கட்டிவிடுமோ என்ற பயம் எழுந்தது உண்மைதான். ஆனால் முடியவில்லை. இணையத்தளங்கள் என்பன சாதாரண மக்கள் எட்டித் தொடமுடியாத உயரத்தில் அல்லவா கோலோச்சுகின்றன. எப்படியிருப்;பினும் வாசிப்பு என்பது என்றும் நிரந்தரமாக நிலைத்து நிற்பது என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டியது.

வாசிப்பு இரு விதங்களில் இருப்பதாக எம்மால் நம்பப்படுகிறது. ஒரு பொழுதுபோக்கு வாசிப்பு! மற்றது கற்றலுக்கான வாசிப்பு! இவை இரண்டும் வௌ;வேறானவை. எனவே எம்மில் பலரால் நம்பப்படுகிறது. இல்லை நிச்சயமாக இல்லை! இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப் பட்டவை. வௌ;வேறாகப் பிரிக்கப்பட முடியாதவை. நாம் பொழுது போக்காகக் கற்கும்போது எம்மை அறியாமலே நாங்கள் சில கருத்துக்களால் ஆட்கொள்ளப்படுகிறோம்.

நல்லதோ கெட்டதோ ஏதோ ஒன்றை நாம் கற்றுக்கொள்கிறோம் அல்லவா? இதேவேளை நாம் கற்றலுக்காக வாசிக்கும்போது இயல்பாகவே பொழுதுபோகிறது. இப்படி இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டபோதிலும் இவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் நிற்கின்றன! எப்படி? நாம் பொழுது போக்குக்காக வாசிக்கும்போது தெரிவு செய்பவை இலகுவான வாசிப்புக்குரியவையே.

அதாவது லையிற்றீடிங்ஸ் என இதைச் சொல்வதுண்டு. உதாரண மாகத் துப்பறியும் கதைகள், கொலை, கொள்ளை, பயங்கரச் சம்பவங்கள் அடங்கிய கதைகள் மேலோட்டமான காதல் கதைகள் மெல்லிய ஆபாசம் கலந்த படைப்புக்கள், சினிமா நடிகர் நடிகையர் சம்பந்தப்பட்ட சங்கதிகள் போன்றவை இந்த லையிற் றீடிங்ஸில் அடங்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் இவை பொழுதுபோக்கு என்ற விடயத்துடன் நின்று விடுவ தில்லை. எங்கள் மனங்களை மலினப்படுத்துகின்றன. வாழ்வின் யதார்த்தத்தைப் பார்க்க மறுத்து ஏதோ ஒரு கனவுலகில் மிதக்க வைக்கின்றன.

கோசங்களை நிஜமென நம்பவும் நாமே வேசங்களை நிஜமாகக் காட்டவும் என்றொரு நிலையை நோக்கி எம்மை இட்டுச் செல்கின்றன. அதாவது அடிப்படையில் இவை எம்மை ஒரு போலி மனிதர்களாக்கி விடுகின்றன. பட்டுச்சேலையின் போடர் பற்றி நீண்ட ஆய்வு நடத்தவும், சினிமாவில் வரும் கதாநாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கலங்குமளவுக்கும் எம்மை மலினப்படுத்தி விடுகின்றன.

இந்தப் பொழுதுபோக்கு வாசிப்பில் ஒரு முன்னேறிய பக்கமும் உண்டு. ஒரு காலத்தில் கருணாநிதி, அண்ணா போன்றவர்களின் கதைகள், கட்டுரைகளை வாசித்தவர்கள் அதனால் ஆகர்ஷிக்கப்பட்டு சில காலம் அவர்களின் பக்தர்களாக இருந்து பின் இடதுசாரிகளாக உருமாறிய அனுபவங்களும் உண்டு. இவ்வாறே கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன் , ஜெக சிற்பியன், ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புக்களைப் படித்தவர்கள் பிற்காலங்களில் எழுத்தாளர்களாக இலக்கிய கர்த்தாக்களாக பரிமணித்திருக்கிறார்கள். இங்கே பொழுதுபோக்குக்கான வாசிப்பு என்பது கூட ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி வாசகர்களை இட்டுச்சென்றிருக்கிறது. இது காலப்போக்கில் கற்றலுக்கான வாசிப்பாகப் பரிணாமம் பெறுவது முண்டு.

ஆனால் கற்றலுக்கான வாசிப்பு என்பது ஒரு தேவையை நோக்கிய வாசிப்பாகும். கல்வி சம்பந்தப்பட்ட வாசிப்புகளும் இதற்குள் அடங்கும். மேலோட்டமாக இத்தகைய வாசிப்பு அறிவைப் பெருக்குவதற்காக எனச் சொல்லிக்கொள்ளப் பட்டபோதிலும் இது ஒரு இலக்கு நோக்கியதாகவே இருக்கும். ஆன்மீகவாதிகள் ஆன்மீக விடயங் களைக் கற்கின்றனர்.

அரசியல்வாதிகளோ தங்கள் கற்றலை அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களுக்குள் அடக்குகின்ற னர். இவ்வாறே இராணுவ வல்லுநர்கள் போர்பற்றிக் கற்கின்றனர். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கூடத் தங்கள் துறைசார்ந்த கல்வி யிலேயே கவனம் செலுத்துகின்றனர். எப்படியிருந்த போதிலும் வாசிப்பு என்பது மனிதனை முழுமையாக்குகிறது என்பது மட்டும் உண்மை. அறிவு என்பது அனுபவத்திலிருந்து வருவது. ஒரு மனிதன் காலம் காலமாக உலகில் நிலவிய அனுபவங்களை நேரில் அனுபவிக்க முடியுமா?

எனவே யுகம் யுகமாக மனித குலம் பெற்ற அனுபவங்கள் அறிவாகிப் புத்தங்களை அரியாசனமாக்கிக் கொள்கின்றன. அவற்றை நாம் படிப்பதன் மூலம் அத்தனை அனுபவங்களையும் நாம் பெறுகிறோமல்லவா? வாசிப்பு அனைத்தையும் எமக்கு அள்ளி அள்ளியல்லவா தருகிறது.

எனினும் இங்கும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. வாசிப்பு எப்பிடி இருக்கவேண்டும்! வாசித்து விட்டு சில நிமிடங்களில் அல்லது சில மணித்தியாலங்களில் அல்லது சில நாட்களில் ஏன் சில மாதங்கள், வருடங்களில் கூட மறந்து விடுவோமானால் வாசிப்பின் அர்த்தம் தான் என்ன? அது பயனற்ற வாசிப்பாகவே போய்விடுகிறதல்லவா? வாசிக்கும் போது மனதை முழுமையாக வாசிப்பதில் ஈடுபடுத்தி வாசித்தால் நிச்சயமாக அதுமறக்கப் போவதில்லை. புலன்கள் வேறு விடயங்களில் பாதி, வாசிப்பதில் பாதி செலுத்தி வாசிக்கும்போது அது எப்படி மனதில் பதிய முடியும்.

சுவாமி விவேகானந்தர் ஒவ்வொரு நாளும் ஒரு நூலகத்திற்குப் போவாராம். அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் எடுத்துக்கொண்டு போய்விட்டு திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பாராம். நூலகருக்கோ ஒரு சந்தேகம். இவர் கொண்டுபோகும் நூல்களைப் படிக்கிறாரோ என்பது பற்றி அவர் இவரைப் பரிசோதிக்க விரும்பினார். ஒருநாள் விவேகானந்தரிடம் ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு நீங்கள் அதைப் படித்தீர்களா எனக் கேட்டாராம். விவேகானந்தரோ விடயத் தைக் கூறியது மட்டுமன்றி எந்தப் பக்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறது எனவும் குறிப்பிட்டாராம். இன்னொரு புத்தகத்தில் உள்ள விடயத்தைக் கேட்டபோதும் கூட அதேபோன்ற தெளிவான பதில் வந்ததாம்.

ஆம்! ஆழமான வாசிப்பு எம்மை அறிவுபூர்வமானவர்களாக்குகிறது. தெரிந்த இரண்டு விடயங்களிலிருந்து தெரியாத ஒரு விடயத்தைப் புரிய வைக்கிறது. இருப்பதைப் புரியவும் இருப் பதிலிருந்து வருவதைத் தெளிந்த றியவும் அறிவு தருகிறது.

ஆம்! வாசிப்பு மனித குல வரலாற்றின் வழிகாட்டி.

நன்றி: வெள்ளிநாதம் (26.10.07)

0 Comments: