Saturday, October 27, 2007

"உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்".... திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளிடம் தேசியத் தலைவர்

27.10.2007

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார்.


21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு கூறிய ஒரு சிலமணி நேரத்தில் இளங்கோவிடமிருந்து "நாங்கள் இறுதி நகர்வை ஆரம்பிக்கப் போகின்றோம்" என்ற செய்தி வந்தது. தலைவர் பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அந்தப் பெரும் வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தார். சென்றிருந்த ஒவ்வொரு போராளிகளிடத்திலும் தலைவர் அதிக நம்பிக்கையுடனும் பற்றுடனும் இருந்தார். அந்த அணிக்குத் தளபதியாகச் சென்றவர் இளங்கோ, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டார்.

ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றதோடு கைத்துப்பாக்கிப் பயிற்சி ஆசிரியராகவும் அடிப்படைப் பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் இருந்தார். இவற்றுக்கு அப்பால் சிறப்புப் புலனாய்வுப் பணிகள், சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு போராளி. 14-க்கும் மேற்பட்ட களங்களைக்கண்ட ஒரு வீரன். இவரின் போரிடும் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்ட களமாக இத்தாவில் சமர்க்களம் அமைந்திருந்தது. அவர் விக்டர் கவச எதிர்புப்படையணியின் அணியொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்தார். அங்கு எமது அணிகளின் காப்பரண்களுக்குள் எதிரியின் கவசப்படையணி உள்நுழைந்த போது அவரது அணியைச் சேர்ந்த போராளிகள் இரு டாங்கிகளைத் தகர்த்து அழிக்க இளங்கோ தனது கையிலிருந்த ஆர்.பி.ஜி. மூலம் ஒரு பவள் கவச வாகனத்தை நோக்கி மிக வேகமாக ஓடிச்சென்று அதன் மீது ஏறித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த எதிரியைச் சுட்டுவீழ்த்தி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை எடுத்து அதனைப் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டார். இதன் மூலம் எமக்குப் பெரும் நெருக்கடியாகவிருந்த இத்தாவில் களமுனையை முற்றுமுழுதாக எமது பக்கம் திருப்பித்தந்த ஒரு பெரும் வீரன். அதற்குப்பின்னரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின் குறித்த சில காலம் எமது தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியில் மிக முக்கியமான ஒரு பணியைப் பொறுப்பேற்று மிக நேர்த்தியாகச் செய்து முடித்திருந்தார். இளங்கோ தான் கரும்புலியாகச் செயற்படவேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவருக்குத் தொடர்ச்சியாகக் கடிதம் வரைந்து கொண்டே இருந்தார்.

ஆனாலும் அவரது கடமைகளின் முக்கியத்துவம் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதில் சற்றும் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 10 ஆண்டுகளாக இளங்கோ சுமந்து வந்த அந்த உணர்வைப் புரிந்து கொண்ட தலைவர் 2006 ஆம் ஆண்டு அவருக்குக் கரும்புலிகள் அணியில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். இளங்கோவின் தலைமையில் புறப்படுகின்ற அணியில் இரண்டாவது பொறுப்பாளராக வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவரின் செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை தற்போது வெளியிட முடியாதுள்ளது. திரியாயைப் பிறப்பிடமாகக்கொண்ட வீமன் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்பில் வசித்து வந்த காலத்தில் விடுதலை புலிப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். மிகச்சிறிய வயதில் அன்று அவர் அமைப்பில் இணைந்ததனால் படையணிகளுக்கு இணைக்கப்படாமல் படைத்துறைப் பள்ளியில் சில காலம் கற்று வந்தார். அதன்பின் குறித்த வயதை எட்டியதும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். பின் அவரும் தலைவரின் மெய்பாதுகாப்பு அணிக்கு உள்வாங்கப்பட்டார். அதில் அதியுச்ச நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். அப்பணியில் மிக இரகசியமான பல்வேறுபட்ட கடமைகளை மிக நேர்த்தியாகச் செய்தார். அதேவேளை "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத்திற்குப் பயணிக்கும் போது அவருடைய பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் தலைவர் வீமனிடமே ஒப்படைத்திருந்தார். ஈழப்பிரியா மிகுந்த ஆளுமை மிக்க ஒரு போராளி. அவர் பயிற்சியின் போது மிக உற்சாகமாகச் செயற்பட்டார்.

அவர்கள் பெற்ற பயிற்சி என்பது சாதாரணமான பயிற்சி அல்ல. அவர்கள் தாக்குதலுக்குச் செல்லும் போது உதவி அணிகள் செல்லப்போவதில்லை. எனவே தாக்குதலுக்குத் தேவையான முழு வெடிபொருட்களையும் சுமந்து கொண்டு நீண்டதூரம் பயணிக்க வேண்டும். அந்தளவு மிகக்கடினமான பயிற்சியைப் பெற்றவர்தான் ஈழப்பிரியா. இளம்புலி மிக உற்சாகமான போராளி எல்லோரையும் நகைச்சுவையாக வைத்திருக்கக்கூடிய ஒரு போராளி. அவர் இறுதியாகச் செல்லும் நேரத்தில் தலைவரிடம் எமது தேசியக்கொடியைக் கொண்டு செல்ல அனுமதி கேட்டிருந்தார். ஏனெனில் இத்தாக்குதல் ஒரு இரகசியமான தாக்குதலாக இருக்காது என்பதை உணர்ந்த அவர் முகாமை அழித்து விட்டுத் தொடர்புக் கோபுரத்தில் ஏறி எமது கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று அவர் அந்த அனுமதியைக் கேட்டிருந்தார். அதற்கு அமைவாக அவர் தேசியக் கொடியினையும் கொண்டு சென்றிருந்தார். பஞ்சீலன் மட்டக்களப்பிலிருந்து மிகச் சிரமங்களுக்கு மத்தியில் கால்நடையாக இங்கு வந்து மிகக் கடுமையாகப் பயிற்சிகளைப் பெற்றவர். சமாதான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள் எதிரியின் ஊடுருவலைத் தடுப்பதற்காகத் தீவிரமாகச் செயற்பட்ட வீரன். அதற்கான பெரும் அணியொன்றினைப் பொறுப்பெடுத்து செய்து வந்த வீரன். இவ்வாறு தான் ஒவ்வொரு வீரர்களும் ஒரு அணியாக நின்று மிகக்கடுமையான பயிற்சிகளைப் பெற்ற பெரும் வீரர்கள். ஒவ்வொரு போராளிகளும் தங்களது உணர்வுகளைத் தலைவரிடம் பல ஆண்டுகளாகத் தெரியப்படுத்தி வந்தனர்.

தலைவரும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அப்போராளிகளைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தார். அன்று தொடக்கம் அவர்கள் உச்ச இலக்கொன்றைத் தாக்கி அழிப்பதற்கான முறையில் மிகக்கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த அணிதான் அன்று அனுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் நுழைவதற்கான இறுதி நகர்வை தொடங்கிக் கொண்டிருந்தது. அன்று தலைவர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார். அதிகாலை 3:20 மணிக்கு இளங்கோ அறிவிக்கின்றார். "நான் சண்டையைத் தொடக்கப் போகின்றேன். சண்டை தொடங்கியதும் மிகுதி விடயங்களை அறிவிக்கின்றேன்" என்று கூறிச் சமரை ஆரம்பித்தார். அனுராதபுரம் வான் படைத்தளம் என்பது ஒரு சாதாரண வான் படைத்தளம் அல்ல. வடபகுதியில் இருக்கின்ற அனைத்து இராணுவத் தளங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும் வடபகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்வதானால் அதற்கு இதயமாகச் செயற்பட வேண்டிய தளமாகவும் இருந்தது. அது மட்டுமல்ல, வடபகுதியில் அனைத்து இராணுவச் செயற்பாடுகளுக்குமான ஒரு மையத்தளமாக அனுராதபுரம் வான் படைத்தளம் இருந்தது. இலங்கையில் உள்ள அனைத்து தளங்களிலும் இத்தளம் மிக வித்தியாசமானது. ஏனெனில் ஏனைய தளங்களில் மக்களின் போக்குவரத்திற்கும் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்காகவே ஒதுக்கப்பட்ட தளம் அனுராதபுரம் தளம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு பொதுமகனும், ஊடகவியலாளரும் கூட உள்நுழைய முடியாதளவுக்கு மிக இறுக்கமான பாதுகாப்பைப் பேணிவந்த தளம் தான் அத்தளம். 3 கிலோ மீற்றருக்கு மேலான நீளமும் 2 கிலோ மீற்றருக்கு மேலான அகலமும் கொண்ட ஒரு பெரும் தளம். அதற்குள் தான் இந்த வீரர்கள் உள்நுழைந்தார்கள். 3:20 மணிக்குத் தாக்குதல் தொடங்குகின்றது. மிக வேகமாகத் தாக்குதலை நடத்தி தமக்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்து அங்கிருந்த வானூர்திகளைத் தகர்த்து முடித்தார்கள். சிங்களம், அனுராதபுர வான் படைத்தளத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. அத்தளம் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்ருக்கின்றது. மிகையொலி வானூர்திகளை நிறுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் பல தாக்குதல் வானூர்திகளையும் நிறுத்தி வைக்கப் பாதுகாப்பான தளம் எனவும் கருதி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதேவேளை முற்று முழுதாக சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட பகுதி. அதற்குள் ஊடுருவுவது என்பது மிகக் கடினமான விடயம். சிங்களம் பெரும் மமதையுடன் இருந்த அக்கோட்டைக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் 20 நிமிடத் தாக்குதலுக்குள் அத்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். அந்த நிலையில் இளங்கோ மீண்டும் தொடர்பு கொண்டு கதைத்தார். நான் காலில் காயமடைந்து விட்டேன் தொடை எலும்பு முறிந்துவிட்டது. எனவே இந்த இடத்தில் அமர்ந்து கொண்டே கட்டளைகளை வழங்குகின்றேன் எனக்கூறி அவர் கட்டளைகளை வழங்கினார். இதேவேளை வீமனின் கட்டளையும் கட்டளைப்பீடத்துடன் தொடர்புபட்டிருந்தது.

வீமன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். எம்ஐ-24 ரக உலங்குவானூர்தியையும், எம்ஐ-17 ரக உலங்குவானூர்தியையும் அழித்துவிட்டு கட்டளைப்பீடத்திற்கு அறிவித்தார். எனக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். பல நூற்றுக்கணக்கான படையினரால் பாதுகாக்கப்பட்டிருந்த அம் முகாம் எதிரியால் கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு அதி உக்கிரமாகவும், வேகமாகவும் அந்த வீரர்கள் தாக்குதலை நடத்தி வந்தார்கள். தாக்குலில் உக்கிரமாக ஈழப்பிரியா செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் எதிரியின் பிரதானமான வானூர்திகளுக்கு அப்பால் வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தன. அதனை எடுத்து இயக்கித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார். தளத்திற்குள் நூறு மீற்றர் நீளமான ஒரு கட்டடத்திற்ள் பல வானூர்திகள் நின்றிருந்தன. அறிவுமலரும் இன்னுமொரு போராளியும் அதற்குள் நுழைந்து தாக்குதலை நடத்திக் கொண்டு அறிவித்தார்கள். இங்கு நிறைய வானூர்திகள் நிற்கின்றன. பல வானூர்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. உள்ளே சென்று பார்க்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எல்லாவற்றையும் அடித்து அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்று எரிந்து கொண்டிருக்கும் வானூர்திகளின் இலக்கத்தைக் கூடக் கூறிக் கொண்டு வானூர்திகள் எரியும் போது அவர்கள் மகிழ்ச்சியில் சிரித்து ஆரவாரித்தவாறு தாக்குதலில் ஈடுபட்டார்கள். தாக்குதல் தொடங்கி சில மணிநேரத்தில் தளத்தைக் கைப்பற்றுவதற்காகத் தளத்தின் வாசலில் படையினர் குவிக்கப்படுகின்றனர். அப்போது பல போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

ஒருவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையிலும் தனது ஆயுதத்தால் வந்த படையினர் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எமது வானூர்திகள், படையினர் மீது தாக்குதல் நடத்தின. அதனால் படையினர் சிதறி ஓட அதனையும் அவர் அங்கிருந்து கொண்டு அறிவித்துக்கொண்டிருந்தார். பின்னர், தீயணைப்புக் கருவிகளுடன் இராணுவத்தினர் வர அவர்கள் மீதும் அப்போராளிகள் தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் அங்கிருந்த எல்லா வானூர்திகளும் அழித்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேவு வானூர்திகள் மட்டும் அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். பின் மறைவான இடமொன்றில் அவை நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு விட்டார்கள். அப்போது வீமனுக்கு இளங்கோ கட்டளையிட வீமன் படுகாயமடைந்த நிலையிலும் தனது டொங்கானால் அவற்றைத் தாக்கினார். தாக்கிவிட்டு அவை வெடித்துக் சிதறுகின்ற ஒலியை அனுப்பிவிட்டு மகிழ்ச்சியில் சிரித்தார். அவ்வாறு அத்தளத்தில் ஒரு பொருளையும் மிஞ்சவிடாது தளத்தையே துவம்சம் செய்துவிட்டுத்தான் அந்த வீரர்கள் வீரச்சாவடைந்தார்கள்.

இன்று நாங்கள் பெரிய வெற்றியொன்றின் மிதப்பில் நிற்கின்றோம். மாபெரும் மனக்கோட்டை கட்டிவந்த சிங்களம் இந்த 21 வீரர்களின் வீரத்திலும் அர்ப்பணிப்பிலும் அனைத்தையும் போட்டு உடைத்துள்ளது. இருந்த போதும் எங்களுக்கு நிமிர்வைத் தந்த வீரர்களின் நினைவுகள் எம் ஒவ்வொருவரது இதயத்தையும் பாறாங்கல்லாக அழுத்தத்தான் செய்கிறது. அந்த வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் 21 பேரும் எம்மிடம் ஒன்றைத்தான் எதிர்பார்த்தார்கள். தலைவர் கவனம், அவரது கரத்தைப் பலப்படுத்துங்கள். அதன்மூலம் எமது மக்களை அவலத்தில் இருந்து மீட்டு எடுங்கள். நீங்கள் அனைவரும் ஒன்றாக எழுந்தால் அது முடியும் என்றார் அவர். .

0 Comments: