Sunday, October 14, 2007

லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயம் தமிழருக்கு பெற்றுத் தந்தது என்ன?

14 - October - 2007 - தினக்குரல்
-ச.பா.நிர்மானுசன்-
காணாமற் போன உறவுகளின் அவலக்குரல்கள், நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், எதிர்ப்புகள், மழுப்பல்களுக்கு மத்தியில் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் சந்திப்புகள் தொடர்கின்றன (12-10-07).

முழுமைப்படுத்தப்படாத இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலைப் போலவே அம்மையாரின் விஜயத்தின் நோக்கமும் வெற்றியளிக்காமல் போய்விடுமோ என்ற வினா தமிழ் மக்களிடமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடமும் மேலோங்கியுள்ளது.

தமிழர்களின் வாழ்விற்கும், மனித உரிமை தத்துவங்களின் உண்மைக்கும், உலகின் நீதிக்குமான சவால் மிகுந்த சோதனைக்களம் இலங்கைத் தீவில் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. "தாமதித்து வழங்கப்படும் நீதி, மறுக்கப்படுவதற்கு சமன்" என்பது இலங்கைத் தீவிலும் நிதர்சனமாகப் போகிறதா என்பது விரைவில் தெரியவரவிருக்கின்றது.

நெருக்கடியானதும், நீண்டகாலம் நிலவுகின்றதுமான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்து அவற்றிற்கு முக்கியத்துவமளித்தல், பல்வேறு தரப்பினர்களாலும் உயிர் ஆபத்தினை எதிர் நோக்கியுள்ளவர்களுக்கு நிவாரணமளித்தல், குடிநிலை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக உரிமைகள் அபிவிருத்தி உள்ளடங்கலாக ஆகியவை அனைவருக்கும் பாரபட்சமற்ற வகையில் கிடைப்பதை கவனத்திற்கொள்ளல் ஆகியவை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோள்களாகும்.

இந்த வகையில், குறித்த தருணத்தில் இலங்கைத் தீவில் இடம்பெறுகின்ற மனித உரிமை விவகாரம் இலங்கைத் தீவில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக் காணப்படுகின்றது. எது எப்படியிருப்பினும் லூயிஸ் ஆர்பர் அம்மையரின் இலங்கைத் தீவிற்கான விஜயமென்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றே. அவர் சாதாரண நோக்கங்களுக்காக குறித்த நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்வதென்பது இன்றுவரை நடைமுறையில் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகரின் விஜயமென்பது மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளினை நோக்கியதாகவே இடம்பெற்றுள்ளது. யூகோஸ்லாவியா, கொங்கோ ஜனநாயக குடியரசு ஆகியவற்றில் நிலவிய கொடூரமான மனித உரிமை மீறல்கள், ரூவாண்டா, புரூண்டியில்இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, 2006 இல் இடம்பெற்ற இஸ்ரேல் லெபனானுக்கிடையிலான மோதல் ஆகியனவற்றினை தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகரின் விஜயங்கள் குறித்த நாடுகளை நோக்கியதாக அமைந்தன. இலங்கைத் தீவுக்கு வரமுன்னர் லூயிஸ் ஆர்பர் அம்மையாருடைய பார்வை ஈராக்கை நோக்கியதாகவிருந்தது.

லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த விதத்தில் நன்மையளிக்கப் போகின்றது? தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் உரிய முறையில் எடுத்துக் கூறப்படுகிறதா? அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கோட்டை விட்டது போல் லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்தின் போதும் இடம்பெறுமா? என்பது போன்ற தவிர்க்க முடியாத கேள்விகள் மேலெழும்புகின்றன.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகத்தினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் நடவடிக்கைகள் மீதான சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன. ஏனெனில், மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்பு, விசாரணை போன்றவற்றை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமாயின் மோதுகையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும். மேற்கொள்ளப்படுகின்ற சந்திப்புகள் எத்தகைய அழுத்தங்களும் இன்றி சுயாதீனமாக இடம்பெறவேண்டும்.ஆனால் மேற்கூறிய இரண்டு விடயங்களுமே லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்தின் போது இடம்பெறவில்லை.

முப்பத்துநான்கு நாடுகள் புலிகளை தடைசெய்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் அல்ல என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. அப்படியிருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தான் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகமும், தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கமும் அடிக்கடி கூறிவருகின்றன.

மேற்கூறிய இரு தரப்புகளுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தான் பேச்சினை மேற்கொள்ள வேண்டும் என்பதனை இதயசுத்தியுடன் உறுதியாக தெரிவித்து வருகின்றார்களாயின், ஏன் லூயிஸ் ஆர்பர் அம்மையார் புலிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கவில்லை? நிலைபேறான சமாதானம் எட்டப்பட வேண்டும் என்ற தூய எண்ணம் இருக்குமாயிருந்தால் அதன் முதற்படியாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அதுவே நீதியான சமாதானத்திற்கான முதற்படியாக அமையும்.

"மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வதன் மூலமே சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை நல்க முடியும்" என கிழக்கு திமோருக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் முன்னாள் விசேட பிரதிநிதியும், சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமுமான இயன் மார்ட்டின் தெரிவித்திருந்தமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை. லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்திற்குப் பிற்பாடாவது அது மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவ்வாறானதொரு ஆக்கபூர்வமான செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாயின் இலங்கைத் தீவில் சர்வதேச சுயாதீன மனித உரிமைக் கண்காணிப்பகம் அமைக்கப்படுவது மிக மிக அவசியமானது.

ஆனால், சர்வதேச சுயாதீன மனித உரிமைக் கண்காணிப்பகத்தினை ஷ்ரீலங்காவில் அமைப்பதற்கு அரசாங்கம் சம்மதிக்குமா என்பது கேள்விக்குரியதே. இருப்பினும் சர்வதேச நெருக்குவாரங்கள் உரிய முறையில் அரசாங்கத்தின் மீது தொடுக்கப்படுமாகவிருந்தால் அரசாங்கம் சம்மதித்தே ஆக வேண்டும். இவ்வாறான அழுத்தத்தினை தொடர்ந்து இறுதியில் அரசாங்கங்கள் சம்மதித்த சம்பவங்கள் வரலாற்றில் நடந்தேறியுள்ளன.

கிழக்கு திமோரில் சர்வதேச படைகளை அனுமதிப்பதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இணங்க மறுத்த போதும் பல்வேறு முறைகளில் வெவ்வேறு முனைகளினூடாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் இந்தோனேசிய அரசாங்கத்தை இறங்கிவரச் செய்தது. வன்முறைகள் தொடருமாகவிருந்தால் மானுடத்துக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான பொறுப்புகளிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது என ஐ.நா. செயலாளர் மற்றும் மனித உரிமை ஸ்தானிகரால் விடுக்கப்பட்ட அழுத்தம் பொதிந்த அறிவிப்புகளே காரணமாக அமைந்தன. ஷ்ரீலங்காவினுடைய வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவோ அல்லது குற்றங்களுக்காகவோ உரியவர்கள் யாருமே நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவில்லை. அதாவது பொறுப்புக்கூறும் தன்மையிலிருந்து (Accountability) இலகுவாக விலகிக் கொள்கிறார்கள்.

அடுத்து, மோதுகை இடம்பெறுகின்ற சூழலாக இருப்பினும் சட்டவாட்சியை (Rule of Law) உறுதிப்படுத்த வேண்டியது பொறுப்புள்ள ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமை. பக்கச்சார்பற்ற நீதித்துறையென்பது பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை எடுத்துக்காட்டுவதற்கான அடையாளம்.

ஆனால், மேற்கூறிய மிக முக்கியமான மூன்று கட்டுமானங்களும் ஸ்ரீலங்காவில் இல்லை. ஆகவே, ஸ்ரீலங்கா தொடர்பான "மறுசிந்திப்பு" என்பது ஷ்ரீலங்கா மீது உண்மையான அக்கறைகொண்ட அனைவருக்கும் வரவேண்டியதொன்று. அது ஸ்ரீலங்காவை சீர்திருத்துவதாக இருத்தல் வேண்டும்.

பர்மாவில், கிழக்கு திமோரில், கொங்கோ ஜனநாயக குடியரசில், சூடானில், சோமாலியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஷ்ரீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஹெயிட்டியில் மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் காட்டப்பட்ட அக்கறை ஏன் ஷ்ரீலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்கு காட்டப்படவில்லை.

மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, போர்க்குற்றங்கள், உடன்படிக்கைகளை மீறிய குற்றங்கள் ஆகியவற்றுக்கான குற்றங்களுக்கான பொதுமன்னிப்பு ஐ.நா. சபை ஆதரவளிக்க முடியாது. இது எல்லாத் தரப்புக்கும், பிராந்தியங்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, ஸ்ரீலங்கா அதற்கு விதிவிலக்கானதல்ல ஆதலால், உரிய நடவடிக்கையினை பொறுப்பான தரப்புகள் உடனடியாக எடுக்க வேண்டும். அதற்கு நான் மேலே குறிப்பிட்ட "மறுசிந்திப்பு" மிக அவசியமானது. அதுவே, இலங்கைத் தீவில் பூரண அமைதியையும் நிலையான சமாதானத்தையும் நிலைநாட்டவல்லது. இவையனைத்துக்குமான திறவுகோல் என்பது லூயிஸ் ஆர்பர் அம்மையாரினுடைய விஜயத்தின் முடிவினையடுத்து சர்வதேச சமூகம் எடுக்கவுள்ள முடிவுகளிலேயே தங்கியுள்ளது.

சர்வதேசத்தின் மனச்சாட்சியுடன் கூடிய நடவடிக்கைக்காக தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக அந்த முடிவே அமையப்போகிறது. அதனூடாகவே இலங்கைத் தீவினுடைய எதிர்காலமும் நிர்ணயிக்கப்படப் போகிறது.

0 Comments: