Wednesday, October 10, 2007

மாலதி - ஈழத் தமிழ்ப் பெண் விடுதலை முன்னோடி

-சண். தவராஜா-

ஒரு தேசத்தின் விடுதலை என்பது அத்தேசத்தின் அனைத்து மக்களாலும் வென்றெடுக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் இன்று 5 தசாப்தங்களுக்கு மேலாக அஹிம்சை ரீதியிலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆயுத ரீதியிலும் நடைபெற்று வரும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் விதி விலக்கானதல்ல.

ஆசியாவில் உள்ள மிகப்புராதன, பாரம்பரிய சமூகங்களுள் ஒன்றெனக் கருதப்படும் தமிழ்ச் சமூகம் மிகக் கட்டுப்பெட்டித்தனமான ஆணாதிக்கச் சிந்தனையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகம். இங்கு பெண்கள் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒளிவு மறைவுக்கு எதுவுமில்லை.

விடுதலை என்பது உள்ள நிலைமையிலிருந்து முன்னோக்கிப் பாய்வதே. அந்த வகையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம், பெண் விடுதலை தொடர்பில் அப்பாய்ச்சலைச் சரியாகவே செய்துள்ளது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. காலங்காலமாக அடுப்பங்கரையே கதியென்று கிடந்த பெண்கள், ~பின் தூங்கி முன்னெழும் பேதைகளாக| இருந்த பெண்கள் இன்று கருவிகள் பல ஏந்திக் களமாடி வெற்றி குவித்து வருகின்றமை ஒவ்வொரு தமிழ் மகனும், ஒவ்வொரு தமிழ் மகளும் பெருமை கொள்ளக் கூடிய விடயம்.

இந்த மாற்றம் எவ்வாறு உருவானது? அது எவ்வகையில் சாத்தியமானது?

போர் என்று வரும்போது அதனால் பாதிக்கப்படுவோரில் அநேகர் பொதுமக்களே என்பது உலகப் பொதுவிதி. அதிலும் பலவீனமானோர் எனக் கருதப்படும் சிறார்கள், பெண்கள், முதியோரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்படுவோர் அப்பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உள்ள விருப்பத் தேர்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட ஒருசிலவே. ஓன்றில் அவர்கள் அந்த நிலமையில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள தமது வாழிடத்தை விட்டுத் தப்பியோட வேண்டும். அல்லது ஆயுதமேந்தி எதிரியோடு பொருத வேண்டும்.

ஈழத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டு வகைப் பெண்களையும் காணமுடிகின்றது. எனினும், இரண்டாவது விருப்பத் தேர்வை தேர்ந்தெடுத்துக்கொண்ட பெண்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் போர்க்களத்திலே காட்டி வரும் வீரமும் விவேகமும் மெய் சிலிர்க்கச் செய்கின்றது.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் கருக்கொண்ட நாள் முதல், அப்போராட்டத்தில் பெண்களின் பங்கு என்பது கணிசமாக இருந்தே வந்துள்ளது. ஆரம்ப நாட்களில் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகிக்காத போதிலும் கூட புறந்தள்ளி விடமுடியாத அளவில் அவர்களின் பங்களிப்பு இருந்தமையை மறுதலித்துவிட முடியாது.

போராட்ட அரசியலிலும் கூட பெண்கள் ஆரம்ப நாள் முதல் பங்கெடுத்தே வந்துள்ளனர். இறுக்கமான ஆணாதிக்கச் சிந்தனை காரணமாக போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் பெண்களின் பங்களிப்புத் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்கள் தோன்றியிருந்த போதிலும் பின்னாளில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாக மாறியது.

ஆரம்ப காலத்தில் போராட்டத் தலைமைகளிடமும் கூட பெண்களின் போராட்டப் பங்களிப்புத் தொடர்பில் தெளிவின்மை இருந்து வந்தது. பெண்கள் ஆயுதமேந்திப் போராட அனுமதிக்கப்படலாமா, அதற்கு அவர்களால் முடியுமா என்ற விவாதம் நீண்டகாலமாகவே இயக்கத் தலைமைகளிடம் விவாதப் பொருளாக இருந்து வந்தது. இத்தகைய காலகட்டத்தில் பெண்கள் போராட்ட இயக்கங்கங்களின் அரசியல்துறை, மருத்துவத்துறை, விநியோகப் பிரிவு போன்றவற்றிலேயே பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.

ஆனால், காலத்தின் கட்டாயமாக பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கு கொள்ள வேண்டிய தேவை, இந்திய இராணுவ காலகட்டத்தில் ஏற்பட்டது. தமிழீழப் பெண்களின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த இச்செயற்பாட்டுக்காக இந்திய இராணுவத்திற்கு நன்றி கூறினால் கூடத் தவறில்லை. ஏனெனில் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் என்பது ஈழ மண்ணில் பெண் போராளிகள் தம்மை ஆயுதமுனையில் காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தையும், புறநானூற்றுக் காலத்தின் பின்னர் தமிழ்ப் பெண்கள் தமது வீரத்தை மற்றுமொறு முறை நிரூபிக்கச் சந்தர்ப்பத்தையும் வழங்கியது.

ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளின் உயிர்த் தியாகம் என்பது முன்னரேயே நிகழ்ந்தாலும், 1997 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணிக்கு கோப்பாயில் இந்திய இராணுவத்திற்கு எதிரான வழிமறிப்புச் சமரில் களப்பலியான முதல் பெண் போராளியான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் (சகாயசீலி பேதுரு) வீரச்சாவு போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது.

கடினமான பயிற்சிகள், ஒறுப்புக்கள் என்பவற்றுக்கு அப்பால் தமிழ்ப் பெண்கள் மிக மிக அஞ்சும் விடயங்களுள் ஒன்றான சாவு என்பது தமது கண்முன்னாலேயே நிகழ்கையில் ஏற்படக்கூடிய அச்சம், தயக்கம் என்பவற்றைப் பெண் போராளிகள் எதிர்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியவர் மாலதி. இன்று கரும்புலிகளாகக் களம் சென்று தம்மைத் தாமே ஆகுதியாக்கிப் பெண்கள் தற்கொடை புரிவதற்கான உளத் துணிவை உருவாக்கிச் சென்றவர் மாலதி. அந்த வகையில் மாலதியின் நினைவு தமிழீழப் பெண்களால் மறக்கப்படமுடியாத ஒன்று.

அவருடைய மறைவு பெண்களுக்குள்ளே பலப்பல நூற்றாண்டுகளாக அடங்கிக் கிடந்த அல்லது அடக்கி வைக்கப்பட்டிருந்த இராட்சத மனத்துணிவை வெளிக்கொணர்ந்தது. பெண்களையே, பெண்களின் திறமைகளையே பெண்களுக்கு இனங்காட்டியதில் மாலதியின் பங்களிப்பு மறக்கப்பட முடியாதது. இதன் பரிணாம வளர்ச்சியாக இதுகாறும் சிங்கள இராணுவத்துக்கு தமிழ்ப் பெண்கள் பயந்தார்கள் என்ற நிலமை மறைந்து சிங்கள இராணுவம் பெண்புலிப் போராளிகளின் பெயர் கேட்டு அஞ்சும் நிலையேற்பட்டுள்ளது என்றால் அந்த மாற்றத்துக்கு வித்திட்டுள்ளவர்களுள் மாலதி முக்கியமானவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அது மட்டுமன்றி தமிழீழப் பெண்கள் எழுச்சி தினம் கூட மாலதியின் நினைவு தினத்தன்று அனுஸ்டிக்கப் படுகின்றமை சாலப் பொருத்தமானதே. ஏனெனில் மாலதியின் துணிச்சல் ஈழத் தமிழ்ப் பெண்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதன் விளைவாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் விடுதலைப் போராட்டத்தில் தமது வகிபங்கு என்ன, தாம் ஆற்றக்கூடிய பங்களிப்பு என்ன என்பவை பற்றிச் சிந்திப்பதற்கு மாலதியின் களச் செயல்கள் பெரிதும் துணை புரிந்துள்ளன.

இருப்பினும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், போராட்ட அரசியலைப் பொறுத்த வரை ஈழத் தமிழ்ப் பெண்கள் வகிக்கும் முன்னணிப் பாத்திரம், பாரம்பரிய ஆணாதிக்கக் கட்டமானத்தில் உருவமைக்கப்பட்டுள்ள குடும்பச் சூழலிலும் சமூகச் சூழலிலும் நிலவுகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படும் போது இல்லை என்ற கசப்பான விடையே கிடைக்கிறது.

ஏன் இத்தகைய நிலை என்பதை ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் சிந்தித்தப் பார்க்க வேண்டியது தமிழீழப் பெண்கள் எழுச்சி தினத்தின் சிந்தனையாக அமைய வேண்டும்.

விடுதலைப் போராட்டம் தமக்கு அப்பாற்பட்டது எனப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளாத பெண்கள் நினைப்பதைப் போன்று, விடுதலைப் போரில் பங்கெடுக்கும் பெண்கள் கூட பெண் விடுதலை என்பது தேசிய விடுதலைக்கு ஊடாகத் தானாகவே கிடைத்து விடும் என நம்புவதாகத் தெரிகின்றது. தற்போது குடும்ப வாழ்க்கைக்கு முழுதாகவே திரும்பிவிட்ட முன்னைநாள் பெண் போராளிகள் பலரின் செயற்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது அத்தகைய முடிவுக்கே வரவேண்டி உள்ளது.

'விடுதலை பெற விளைகின்ற ஒரு சமூகம் அல்லது மக்கள் கூட்டம் தான் அடிமையாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்வதே பாதி விடுதலை பெற்றதற்குச் சமன்" என்ற கார்ல் மார்க்சின் கூற்றுக்கு ஒப்ப ஈழத் தமிழ்ப் பெண்களும் தமது நிலைமையை உணர்ந்து கொண்டால் மாத்திரமே ஆணாதிக்க சமூகத்தளைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட தலைநிமிர்ந்து வாழ முடியும். இலக்கு எதுவென்று தெரிந்து கொண்டு விட்டால் அதை அடைவதற்கான வழி முறைகள் தானே துலங்கும்.

ஒவ்பொரு ஈழத் தமிழ்ப் பெண்ணும் இதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்வதே மாலதி கண்ட கனவை நிறைவேற்றும்.


நன்றி: நிலவரம் வார ஏடு (05.10.07)

0 Comments: