Monday, October 29, 2007

புத்தாண்டில் தமிழீழப் பிரகடனமா? அதனைக் கொண்டாட உலகத் தமிழர் தயார் : நெடுமாறன்

ஆக்கம்: கொழும்பு நிருபர்
29. அக்டோபர் 2007 18:33
புத்தாண்டில் விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யவிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சர் ஒருவரே அதனைக் கூறிவருகின்றார். அச்செய்தி உண்மையாயின் அதனைக் கொண்டாட உலகத் தமிழர்கள் காத்துக்கொண்'டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நெடுமாறன் வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

"2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க இருப்பதாக சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே தொடர்ந்து கூறிவருகிறார். சிங்கள அரசு வட்டாரங்களில் அடுத்தப் பிரதமராக வரக்கூடியவராக இவர் கருதப்படுகிறார். இப்போதே தான் பிரதமராகிவிட்டது போன்ற உணர்வுடன் அவர் புலிகளைத் தாக்கி அறிக்கைகள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

புலிகள் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிடப்போகிறார்களா இல்லையா? என்ற கேள்விக்கு யாராலும் விடையளிக்க முடியாது. இதற்கு பதில் கூறக்கூடிய அதிகாரமும் உரிமையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் சிங்கள அமைச்சர் இவ்வாறு தொடர்ந்து கூறிவருவது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழீழத்தில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அங்கு அவர்கள் நீதி, நிர்வாகம், வரி வசூலித்தல் மக்களுக்கான கடமைகளைச் செய்தல் போன்ற எல்லாவற்றையும் மக்கள் சேமநல அரசு போல நடத்திவருகிறார்கள் என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன. சிங்கள அரசாங்கத் தலைவர்களைச் சந்திப்ப தற்காக கொழும்புக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்கள் கிளிநொச்சிக்கும் சென்று பிரபாகரனைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசப் பத்திரிகையாளர்களும் அவ்விதமே பிரபாகரனைச் சந்திக்காமல் செல்வதில்லை.

இலங்கைத் தீவில் இரு அரசுகள் இயங்கி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே இந்தச் சூழலில் சுதந்திரப் பிரகடனத்தை பிரபாகரன் அறிவிப்பாரானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலக வரலாற்றின் பலவேறு நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களின் போது குறிப்பிட்ட காலக் கட்டம் வரும்போது அந்த நாடுகளின் தலைவர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இது ஒன்றும் புதிது அல்ல.

1944ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அந்தச் சுதந்திர அரசை ஜெர்மனி ஜப்பான் இத்தாலி உட்பட பல நாடுகள் அங்கீகரித் தன. ஆனால் அமெரிக்கா அணுகுண்டை வீசியதின் விளைவாக ஜப்பான் சரணடைந்தது இரண்டாம் உலகப்போரின் போக்கு அடியோடு மாறிவிட்டது. நேதாஜியும் விமான விபத்தில் மாண்டதாகக் கூறப்பட்டது. இதன் விளைவாகத்தான் அவரின் சுதந்திர அரசு செயல்பட முடியாமல் போயிற்று. நேதாஜி தனது படையோடு இந்தியாவிற்குள் நுழைந்திருப் பாரேயானால் மக்கள் ஆர்த்தெழுந்து வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நெதர்லாந்து நாட்டின் காலனி நாடாக அடிமைப்பட்டுக்கிடந்த இந்தோனேசியாவுக்குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. ஆனால் இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்தபோது அந்தச் சூழ்நிலையை முற்றிலுமாக பயன்படுத்தி இந்தோனேசியாவின் தலைவர் சுகர்ணோ சுதந்திரப் பிரகடனத்தை 1945ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்தியப் பிரதமர் நேரு அந்த அரசை வரவேற்று அங்கீகரித்தார். மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பலவும் அங்கீகாரம் அளித்தன. மீண்டும் இந்தோனேசியாவை ஆக்கிரமிப்பதற்கு டச்சு அரசு முயற்சி செய்தபோது அதற்கு எதிராக சுகர்ணோ தலைமையில் பெரும் போராட்டம் நடத்தினார்கள். 1949ஆம் ஆண்டில் இந்த போர் முடிவுக்கு வந்தது. இந்தோனேசியா விடுதலை பெற்றது.

அதைப் போல பிரெஞ்சு காலனி நாடுகளாக இருந்த கம்போடியா லாவோஸ் வியட்நாம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரெஞ்சு இந்தோ சீனா என்ற பெயரில் பிரெஞ்சுக்காரர்கள் அடக்கி ஆண்டனர். 2ஆம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்த நாடுகளை அடிமைப்படுத்தினர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் நாள் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை அந்த மக்களின் மாபெரும் தலைவரான ஹோசிமின் வெளியிட்டார். ஆனால் பிரஞ் ஏகாதிபத்தியம் மீண்டும் வியட்நாமை கைப்பற்ற முயன்றது. இதன் விளைவாக பெரும் போர் மூண்டது. பிரெஞ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியது. சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்ற வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்திற்குபின் வியட்நாம் விடுதலை பெற்றது.

1988ஆம் ஆண்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் அவர்களின் தலைமை யில் பாலஸ்தீன தேசிய சபை கூடி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால் அந்த வேளையில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கீழ் பாலஸ்தீன பிரதேசத்தின் எந்தப் பகுதியும் இருக்கவில்லை. பாலஸ்தீன பகுதியில் எத்தகைய நடைமுறை அரசாங்கத்தை யும் அவர்கள் நடத்தவில்லை. ஆனாலும் அரபு நாடுகள் அனைத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன. இந்தியாவின் தலைமை யில் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன.
சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டு சுதந்திர அரசை நிறுவியபோது அவரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இந்தியாவின் எந்தப் பகுதியும் இருக்கவில்லை. ஆனாலும் அந்த அரசை பல நாடுகள் அங்கீகரித்தன.

1945ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் சுகர்ணோ சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டபோது நாட்டின் ஒருசிலப் பகுதிகள் மட்டுமே அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பிற பகுதிகளை மீட்டு அவர் தனது நாட்டின் விடுதலையை நிறுவினார்.

வியட்நாமில் ஹோசிமின் சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டபோது தென் வியட்நாம் பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இயங்கிய ஒரு பொம்மை அரசின் கையில் இருந்தது. தன்னுடைய மக்களைத் திரட்டி ஹோசிமின் நடத்திய தீரமிக்க போராட்டத்தின் விளைவாக தென்வியட்நாமில் இருந்து பிரெஞ்சு-அமெரிக்க ஆதிக்கப்படைகளை விரட்டியடித்தார். வட-தென் வியாட்நாம்கள் இணைக்கப்பட்டு ஐக்கிய வியட்நாம் பிறந்தது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் சொந்த மண்ணில் நின்று போராட வழியில்லாமல் சுற்றிலுமிருந்த அரேபிய நாடுகளில் மாறி மாறி தங்கி தனதுப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. அவர் சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டபோது பாலஸ்தீனத்தின் ஒரு அடி மண் கூட அவரது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் அரேபிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றின் அங்கீகாரத்தை அவர் பெற்றார்.

உலக வரலாற்றில் இதைப்போல பல்வேறு நாடுகளில் சுதந்திரப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேதாஜி போஸ், சுகர்ணோ, ஹோசிமின், யாசர் அராபத் போன்ற தலைவர்கள் சொந்த நாட்டிற்கு வெளியே இருந்து போராடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மண்ணை மீட்டார்கள். சுதந்திர கொடியைப் பறக்க விட்டார்கள் என்பது வரலாறாகும்.

மேலே கண்ட மாபெரும் தலைவர்களுடன் ஒப்பிடும்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வயதாலும், அனுபவத்தாலும் மிகவும் இளையவர். நேதாஜி அவர்களுக்கு ஜெர்மானி, ஜப்பான், இத்தாலி ஆகிய வல்லரசுகள் எல்லாவகையான உதவிகளையும் செய்தன. சுகர்ணோ அவர்களுக்கு இந்தியா உட்பட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் உறுதுணையாக நின்றன. ஹோசிமின் அவர்களுக்கு சோவியத் ஒன்றியமும், சீனாவும் பெருந்துணை புரிந்தன. யாசர் அராபத் அவர்களுக்கு அரேபிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் ஒன்றியம், இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகள் பேராதரவு அளித்தன. ஆனால் அருமைத் தம்பி பிரபாகரன் அவர்களுக்கு இந்தத் தலைவர்களுக்கு கிடைத்த உதவியில் கோடியில் ஒரு பங்கு உதவிகூட கிடைக்கவில்லை. இந்தியா உட்பட எந்த நாட்டின் ஆதரவும் இல்லை. ஆனாலும் அவர் தனது மக்களை நம்பிப் போராடி தனது மண்ணின் பெரும்பகுதியை மீட்டுத் தனியரசையே நடத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் புலிகள் அறிவிக்கப் படாத அரசை நடத்தி வருகிறார்கள் என்ற உண்மையை உலகம் அறியும்.


எனவே அவர் சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டால் வியப்படைவதற்கு இல்லை. அவ்வாறு நிகழுமானால் தமிழர் வரலாற்றில் மகத்தானதொரு நிகழ்ச்சியாக அது அமையும். உலகத் தமிழர்களைத் துடித்தெழ வைக்கும்.

சிங்கள அமைச்சர் வயிறெரிந்து புலம்புவது உண்மையானாலும் ஆகலாம். அது உண்மையாகும் நன்னாளை ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்த்துக் கொண்டாடக் காத்திருக்கிறான்.

நன்றிகளுடன். முரசம்

0 Comments: