Sunday, October 14, 2007

வடக்குப் போர்முனையும் மரபுவழியற்ற உத்திகளும்

-அருஸ் (வேல்ஸ்)-

சூடானின் டாபர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைகளில் கொல்லப்பட்ட மக்களுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் அதே காலப்பகுதியில் கொல்லப்பட்ட மக்கள் அதிகம். இருந்த போதும் அனைத்துலகத்தின் கவனம் இலங்கை மீது அதிகம் திரும்பவில்லை என்பதை அனைத்துலக ஆய்வாளர்களும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அப்பாவி மக்கள் மீதான படுகொலை களையோ அல்லது அவர்கள் மீது ஏவப்படும் மனித உரிமை மீறல்களையோ தடுக்க முயலாது அரசிற்கு படைத்துறை உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிவரும் நாடுகளில் இந்திய மத்திய அரசுக்கு அடுத்த நிலையில் அமெரிக்கா அதிகளவில் செயற்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. சில இந்திய அரசியல்வாதிகளும், ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் கூட அப்பாவி மக்களின் மீது ஏவப்படும் போரை ஊக்குவித்து வருவதும் வேதனையானது.

அனைத்துலகத்தின் அரசியல் ஒருபுறம் இருக்க தற்போது இலங்கையில் தங்கியிருந்த ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் என்ன ஒரு நகர்வை ஏற்படுத்த போகின்றார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் தலைதூக்கியுள்ளன.

எனினும் இலங்கையின் அழுத்தங்களை மீறி வன்னி செல்ல இயலாத அவரின் ஆளுமை, அதற்கு ஒத்துழைக்காத அனைத்துலகம் என்பன தமிழ் மக்கள் மத்தியில் அவரின் விஜயம் தொடர்பாக அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்காது என்பது தெளிவானது.

இப்படியாக ஒருபுறம் சின்னச் சின்ன அனைத்துலக அசைவுகள் நிகழ்ந்து வருகின்ற போதும், தென்னிலங்கை அரசியல் நிலமையும், அது சார்ந்த போரும் மிகவும் நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அரசு தோற்கடிக்கப்பட்டதாகி விடும் என்பது ஜனாதிபதி அறிந்ததே.

எனவே தன்னையும், தனது கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. இந்தத் தருணத்தில்தான் ஆறுமுகன் தொண்டமானும் மீண்டும் அமைச்சரவையில் இணைந்துள்ளார். பொருளாதாரம் சீரழிந்து பணவீக்கம், வாழ்க்கைச் செலவு என்பன உயர்ந்துள்ள நிலையில் போரும், அதன் மூலம் உருவாக்கப்படும் விம்பங்களும் தான் தற்போது அரசின் கைகளில் உள்ள ஆயுதம்.

எனினும் முயலை வேட்டையாடி ஜெயிப்பதை விட யானையை வேட்டையாடி தோற்பது மேலானது என்ற ஒரு வாசகம் உண்டு. ஆனால் தற்போதைய அரசியலில் அது மறுதலையானது. அதாவது யானையை வேட்டையாடித் தோற்பதை விட முயலை வேட்டையாடி அதனை யானையாக உருமாற்றுவது அரசியல். ஆனால் முயல்கள் தீர்ந்து போன நிலையில் யானை மீது வேட்டையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு உள்ளது. அதுவே வட போர்முனை.

வட போர்முனையை பொறுத்த வரைக்கும் தனது அரசியலில் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாதபடி வன்னி மீதான படை நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை அரசு வகுத்து வருகின்றது. அதாவது விடுதலைப் புலிகளை ஒரு போர் முற்றுகைக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடிகளை கொடுப்பது அரசின் உத்தியாகும். எனினும் இந்த நடவடிக்கைகளின் போது தமது தரப்பிற்கு ஏற்படும் இழப்புக்களை குறைப்பதற்காக படை நடவடிக்கைகளில் சிறிய அளவிலான படையினரையே அது ஈடுபடுத்தி வருகின்றது.

மேலும், தோல்வியடையும் எந்த படை நடவடிக்கையும் சரித்திரத்தில் இடம்பிடிக்கக்கூடாது என்பதிலும் அரசாங்கம் அவதானமாக உள்ளது. இந்நிலையில், வடபகுதியில் மேற்கொள்ளப்படும் தற்போதைய நடவடிக்கைகள் எதற்கும் படையினர் பெயர் சூட்டவில்லை.

அதாவது இராணுவத்தின் ஒரு சில பற்றாலியன் படையினரை பயன்படுத்தி சிறுக சிறுக ஆமை வேகத்தில் தம்மை பலப்படுத்திக் கொள்ள படையினர் முயன்று வருகின்றனர். மன்னாருக்கு மேற்குப்புறத்தில் தற்போது நடைபெற்று வரும் படை நடவடிக்கைகளில் இந்த உத்திகளே கடைப்பிடிக்கப்படுகின்றன.

கடந்த இரு வாரங்களில் மன்னார்ப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் விளாத்திக்குளம் மீதான படையினரின் நகர்வே பிரதானமாக இருந்தது. அங்கு இருதரப்பும் கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு மிகவும் நெருக்கமாக கடும் சமர் நடைபெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் அணியொன்றை சுற்றிவளைக்க முற்பட்ட படையினர் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டதுடன், பெரும் இழப்புக்களையும் சந்தித்துள்ளனர். இந்த மோதலின் போது இரு கப்டன் தர அதிகாரிகள் உட்பட 8 படையினர் கொல்லப்பட்டதாகவும், 22 படையினர் படுகாயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இழப்புக்கள் பல மடங்கு அதிகமானவை என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மன்னாரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் படையினர் விடுதலைப் புலிகளின் கவனத்தை சிதறடிப்பதற்காக கிளாலி, நாகர்கோவில் முன் அரங்குகளிலும் சிறப்புப் படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் அவை படையினருக்கு எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என்பதுடன், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களும் கணிசமானவை.

நாகர்கோவில் களமுனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் இரவுநேர சமர் உத்தியை கையாண்டிருந்தனர். அதாவது இரவோடு இரவாக நகரும் படையினர் விடுதலைப் புலிகளை பின்புறமாக தாக்குவதன் மூலம் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவது தான் இந்த தாக்குதலின் உத்தி. அதற்காக இரவு நேர பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், அண்மையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட இரவுநேரத் தாக்குதல் சாதனங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

பொதுவாக ஒரு திறந்த வெளியினூடாக எதிரியின் பாதுகாப்பு நிலைகளை நோக்கி (னுநகநளெiஎந pழளவைழைளெ) நடத்தப்படும் பகல் வேளையிலான தாக்குதல்கள் பேரிழப்புக்களையும், தோல்வியையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. ஆனால் இரவில் தாக்குதல் நடத்தப்பட்டால் எதிரியை அதிர்ச்சியடைய வைப்பதுடன் அவர்களின் தாக்குதல் இலக்குகளை தெளிவற்றுத் தாக்குவதன் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதும் பொதுவான இராணுவ உத்தி.

ஆனால், இந்த திட்டத்தை தீட்டிய படையினர் தாக்குதலை நடத்திவிட்டு மீண்டும் தமது தளத்திற்கு எவ்வாறு திரும்புவது என்பது குறித்து சிந்தித்துப் பார்க்கவில்லை போலும். ஏனெனில் விடுதலைப் புலிகளினதும், படையினரினதும் நிலைகளுக்கு இடையில் உள்ள மனித நடமாட்டமற்ற பகுதிகளில் பெரும்பாலானவை திறந்த வெளிகள் என்பதுடன் சிறிய பற்றைகளையும் கொண்டிருப்பவை. மேலும் வடபோர்முனையின் எல்லாப் பகுதிகளும் விடுதலைப் புலிகளின் இறுக்கமான பாதுகாப்பு மிக்க பகுதிகளாகும்.

முன்னிலை அரண்களில் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கும் பொருட்டு பின்னிருக்கை படையினரையும் விடுதலைப் புலிகள் எப்போதும் தயார் நிலையில் தான் வைத்திருப்பதுண்டு. பின்னிருக்கைப் படையினரையும், கனரக மோட்டார்கள் மற்றும் ஆயுதங்களையும் தாக்குதல் நடைபெறும் களமுனைக்கு விரைவாக அனுப்புவதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். எனவே விடுதலைப் புலிகளின் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்வது என்பது இலகுவானதல்ல.

ஆனாலும் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து விடுதலைப் புலிகள் மீள்வதற்கு இடையில் தமது பகுதிகளுக்குள் தப்பிச் சென்றுவிடலாம் என படையினர் கருதியிருக்கலாம். ஆனால் களநிலைமை படையினர் எதிர்பார்த்ததற்கு மாறாகவே இருந்தது. 30.09.2007 அன்று இரவு 11.30 மணியளவில் கெமுனுவோச் இலகு காலாட்படை றெஜிமென்டைச் சேர்ந்த சிறப்புப் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளை ஊடறுத்து நகரத் தொடங்கினர். சிறு குழுவாக நகர்ந்த இந்த படையணி அதிகளவான ஆயுதங்களை சுமந்தவாறு சத்தமின்றி நகர்ந்து சென்றது. விடுதலைப் புலிகளின் இரு காவலரண்களுக்கு இடையிலான பகுதி ஊடாக நகர்ந்து பின்புறமாகத் தாக்குவது தான் திட்டம்.

ஆனால் படையினரின் நகர்வை அறிந்த விடுதலைப் புலிகள் அவர்களை தந்திரமாக உள்வாங்கியுள்ளனர். பின்னர் உள்வாங்கப்பட்ட படையினர் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், தப்பியோடிய படையினர் மனித நடமாட்டமற்ற பகுதியை கடந்த போது அவர்கள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. எறிகணைகளில் இருந்து தப்புவதற்கான மறைப்புக்கள் எதுவும் மனித நடமாட்டமற்ற பகுதியில் இருக்கவில்லை. மேலும் திறந்த வெளியினூடாக ஓடிய படையினரையும் விடுதலைப் புலிகள் இலகுவாக குறிவைத்துள்ளனர்.

இதன் போது தமது தரப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் படுகாயமடைந்த தாகவும் படையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இழப்புக்கள் அதிகமானவை என சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் பெருமளவான படையினர் கொல்லப்பட்டதுடன், இரு ஏ.கே., எல்.எம்.ஜி துப்பாக்கிகள், ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி உட்பட பெருமளவான ஆயுதங்களையும் படையினரிடம் இருந்து தாம் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலத்தில் இருந்து பெருமளவான சமர்களை நள்ளிரவு வேளைகளிலேயே நடத்தி வந்துள்ளனர். பெரும் படைத்தளங்கள், கூட்டுப்படைத் தளங்கள், தொடர் முகாம்கள் என்பன நள்ளிரவு வேளைகளில் நடைபெற்ற தாக்குதல்களில் வீழ்ச்சி கண்டிருந்தன. இரவு நேர சமர்களில் விடுதலைப் புலிகளின் அனுபவம், பயிற்சிகள் என்பன படையினரை விட பல மடங்கு அதிகமானது என்பது வெளிப்படையான உண்மை. எனவே இரவு நேரத்தில் நடத்தப்படும் படையினரின் வலிந்த தாக்குதலுக்கான முறியடிப்புச் சமர்களை நடத்துவதும் அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கமாட்டாது. அதுவே நாகர்கோவிலில் நிரூபணமாகியுள்ளது.

கடந்த வாரம் இதே போன்றதொரு தாக்குதலை கிளாலிப் பகுதியிலும் படையினர் மேற்கொண்டிருந்தனர். எனினும் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் சிறு குழுவாக ஊடுருவ முனைந்த இராணுவத்தின் சிறப்பு படையினர் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்தித்தனர். இதையடுத்து பின்வாங்கிய படையினர் மீது கடுமையான எறிகணை வீச்சுக்களும் நிகழ்த்தப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படையினரில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

ஒரே உத்திகளுடன் வகுக்கப்பட்ட இந்த இரு திட்டங்களும் படையினருக்கு எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்பதுடன் எதிர்பார்க்காத பல அனுபவங்களையும் கொடுத்துள்ளது.

அதாவது இரவு வேளைகளிலும் துல்லியமாக எதிர்த்தாக்குதலை மேற்கொண்டது, இந்த எதிர்த் தாக்குதலின் போது தமது கனரக ஆயுத (கனரக மோட்டார்கள்) படை அணிகளை விரைவாக ஒருங்கிணைத்தது, பின்வாங்கிய படையினரின் மாற்று வழிகளையும் இருளில் கண்டறிந்து தாக்கியது என்பன வடபோர் முனையில் விடுதலைப் புலிகளின் படை அணிகளின் தரம் மற்றும் அவர்களின் பயிற்சிகள் தொடர்பான ஒரு மதிப்பீட்டை படையினருக்கு ஏற்படுத்தியிருக்கும்.

கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற இந்த மோதல்களை எடுத்துக் கொண்டால் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு படையினர் தற்காப்பு சமரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தற்காப்பு சமரை பொறுத்தவரையிலும் அவர்கள் மரபுவழியற்ற மோதல்களில் தான் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மரபுவழியிலான பெரும் வலிந்த தாக்குதல், அதனை தொடர்ந்து தற்போது பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரபுவழியற்ற தாக்குதல்கள் என்பவற்றில் படையினர் சந்தித்துவரும் இழப்புக்கள் வடபகுதியில் மரபுவழியிலோ அல்லது மரபு வழியற்ற முறையிலோ விடுதலைப் புலிகளுடன் மோதுவது மிகவும் ஆபத்தானது என்பதை அவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.

எனினும் நாடு பெரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனமாக 166.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, இது வடபகுதி மீதான படை நடவடிக்கையை தீவிரமாக்க அரசாங்கம் முயன்று வருவதற்கான அறிகுறியே.

ஆனால், அனைத்துலகத்தினால் கைவிடப்பட்ட ஸிம்பாப்வே என்ற நாடு தற்போது முற்றாக வீழ்ந்து போகும் நிலையை அடைந்துள்ளதை போல இலங்கைக்கும் அனைத்துலகத்தின் நிதி உதவிகள் நிறுத்தப்படுமாக இருந்தால் வெல்லமுடியாத இந்த போருக்காக இறைக்கப்படும் பணத்திற்கான பலன்களை இலங்கை மக்கள் அனுபவித்தே தீரவேண்டியிருக்கும்.

0 Comments: