Thursday, October 18, 2007

உலகின் கருத்தக்களை செவிமடுக்காத மகிந்த அரசு

குடும்பம் குடும்பமாக மக்கள் சரணடைவதால் தாங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இவர்களைத் தடுத்து வைக்கின்ற சிறைச்சாலையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அங்கு தொற்றுநோய்
கள் பரவியுள்ளதாகவும் தங்களால், யாழ்ப்பாணத்தில் உருவாகிவரும் நிலைமைகளைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய நிலைமை எங்கே போய் முடியப்போகிறது எனவும் இவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நிலைமை இவ்வாறு குடாநாட்டில் இருக்கையில், மூன்று மாதங்களிற்குள் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவோம் எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறீலங்கா அரசு ஐக்கியநாடுகள் சபையின் செயற்பாட்டாளர்களுக்கும் ஏனைய மனித உரிமை மீறல் தொடர்பான கண்டனங்களை வெளியிட்டுவரும் அமைப்புக்களிடமும் தெரிவித்துள்ளது.

ஆனால் தொடர்ந்தும் அரசு மனித உரிமை மீறல்களை சாதாரணமாகவே மேற்கொண்டு வருகிறது. அரசு கூறுவதுபோல் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாக இருந்தால் மகிந்தவின் சகோதரர்களான பசில் ராஜபக்சவையும், கோத்தபாய ராஜபக்சவையும் முதலில் சிறையில் தள்ள வேண்டும். இவர்களே பல படுகொலைகளின் சூத்திரதாரிகளாகச் செயற்பட்டுள்ளனர். ஆனால் இதைச் செய்ய மகிந்த அரசால் முடியாது. ஆனால் வரும் நாட்களில் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ மகிந்தரால் முடியும். ஆனால் மகிந்தர் தடுக்கவும் மாட்டார், கட்டுப்படுத்தவும் மாட்டார்.

ஏனெனில் காணாமற் போவதும் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் தமிழர்கள். தமிழினம் அழிவடைவதே மகிந்தரின் இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேற அவர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார். இதற்கு நல்ல உதாரணம் மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கும் ஈ.பி.டி.பி குழுவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டு இரண்டு தரப்பும் மோதத் தொடங்கிய போது மகிந்தருக்கு டக்ளஸ் தொலைபேசியில் சொன்னாராம் “எங்கட ஆட்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

கருணா குழுவிடம் ஆயுதங்களைப் பறியுங்கள்” என்று, இதற்கு மகிந்தர் சொன்னாராம் “சரி பார்க்கிறேன்” என்று. தொலைபேசியில் சொல்லிவிட்டுத் தன்னுடன் கூட இருந்த லேக்கவுஸ் பத்திரிகை நண்பர்களிடம் மகிந்த கூறினாராம். “மட்டக்களப்பில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை கருணாவும் டக்ளசும் செய்வார்கள். அவர்களில் யார் செத்தாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. நாங்கள் யாழ்ப்பாணத்தைத்தான் முறையாகப்பார்க்க வேண்டும்” என்று.

இவ்வாறு கூறிவிட்டு வாழைச்சேனையிலுள்ள படைப்புலனாய்வுத் துறை அதிகாரியான ‘இமேஸ்’ என்பவரிடம் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச, ‘அவர்களை முழுமையான மோதல்
களுக்குத் தள்ளாது, இருதரப்பு ஆதரவாளர்களையும் இவர்களைக் காட்டிக் கவனிக்குமாறு’ கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தாராம்.

உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களும் இனவாதிகளும் தமிழர்களை அழிப்பதிலே குறியாகவுள்ளனர். இதற்கு தேசவிரோதிகளைத் துணைக்குச் சேர்த்துக்கொள்கின்றனர். தம்மீது கண்டனங்கள் எழுந்தால் பழியைத் துணைக்குழுக்கள் மீது போட்டு
விட்டு தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே இவர்களது நோக்கம். இதனால் தமக்கெதிராக யாராவது வாய் திறந்தால் அவர்களைக் கண்டிப்பதையும் வழமைபோன்று கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறீலங்காவிற்கு ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அதிகாரிகள் வருகை தரவுள்ளனர். ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான விசேட அலுவலர் ‘மன்பிறட்றொவாக்’ ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை தங்கிநிற்கப்போகின்றார். ஒக்டோபர் 8ம் திகதியிலிருந்து 13ம் திகதி வரையிலும் மனித உரிமைகக்கான உயர் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் சிறீலங்காவில் தங்கிநிற்கப் போகின்றார்.

இதேவேளை டிசம்பர் 13ம் திகதியில் இருந்து 21ம் திகதி வரையும் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பன் கிமூனின் விசேட பிரதிநிதியும் உள்ளூரில் இடம்பெறும் மக்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அதிகாரியுமான ‘வால்ட்றர் கலன்’ ஆகியோரும் விஜயம் செய்ய உள்ளனர். இவர்களின் வருகையை சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களின் வருகையின் நிகழ்ச்சி நிரல் இதுவரை வெளியாகாத போதிலும் இவர்கள் தமிழர் தாயகப் பகுதிக்குச் செல்வதை சிறீலங்கா அரசு விரும்பாது எனறே கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்காவது வாருங்கள் எனவும் அங்கு வந்து தினமும் நடக்கின்ற அவலங்களை
யும், செம்மணியில் தொடங்கிய படுகொலை அரங்கேற்றம் தொடர்ச்சியாக தொடர்வதை
யும் மனித உரிமைகள் படையினரால் உச்சமாக மீறப்படுவதையும் பார்வையிட வேண்டும் எனவம் யாழ்மாவட்டப் பொது அமைப்புக்களின் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவிற்கு வருகின்ற பிரதிநிதிகள் தங்கள் வருகையை சந்திப்புக்களோடும் கைகுலுக்கல்களோடும் மகிழ்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், மாறாக மனித உரிமை மீறல்களில் அரசு ஈடுபடுவதாகக் கூறினாலோ அல்லது அரசு மீது அழுத்தம் கொடுக்க எத்தனித்தாலோ உடனடியாக அவர்கள் இலங்கையில் பயங்கரவாதிகள் ஆக்கப்படுவார்கள்.

பயங்கரவாதிகள் என்ற பட்டத்தை உலகின் தலைவர்களிற்கு குறிப்பாக உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவதில் முன்னணியில் தற்போது இருப்பவர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஆவார். எனவே வருபவர்கள் பயங்கரவாதிகள் என்ற முத்திரையைக் குத்தாமல் போகின்ற வழியையே பார்க்கவேண்டும்.
சிறீலங்காவைப் பொறுத்தவரையில் அமைச்சர்களில் பலர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

அதாவது அரச பயங்கரவாதம். இந்நிலையில் சிறீலங்காவின் அமைச்சர்கள் ஏனையோருக்கு பயங்கரவாத முத்திரை குத்துவது வேடிக்கையாகவுள்ளது. அண்மையில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டோரை சிறீலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் எனக்கூறி எச்சரித்துள்ளார். சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களின் வரைவிலக்கணத்தின் படி படு
கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள் உட்பட அனைத்துக் கொடூரங்களையும் நாங்கள் மேற்கொள்வோம்.

இதை எதிர்ப்பதும், எதிர்த்துக் கருத்துக் கூறுவதும், அரசிற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் பயங்கரவாதம் ஆகும். ஒட்டு மொத்தத்தில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது பயங்கரவாதம்தான் என சிறீலங்கா ஆட்சியாளர்கள் சொல்லாமல் சொல்லுகின்றனர். எனவே உலகத் தலைவர்களின் வருகையோ ஐ.நா பிரதிநதிகளின் வருகையோ சிறீலங்கா அரசின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தாது.

அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலும் உலகில் ஐ.நா உட்பட யாரிற்கும் கிடையாது என்றே சிறீலங்கா ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதனால் தான் மகிந்தரின் படைகள் தமது அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனவே சிறீலங்கா அரசை வழிக்கு கொண்டுவரும் ஆற்றல் உள்ள ஒரே சக்தியாக விடுதலைப் புலிகள் மட்டுமே தற்போது இருந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வே.தவச்செல்வன்

0 Comments: