உதயன்
""போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியுங்கள். கண்காணிப்புக் குழுவினரை நாட்டிலிருந்து விரட்டுங்கள்; வெளியேற்றுங்கள்!''
இவ்வாறு சீறியிருக்கின்றது தேசிய பிக்குகள் முன்னணி.
நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதிக்கு அடுத்து அதிக அதிகாரம் மிக்கவராகத் திகழும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பிரமில தேரர், பொதுச் செயலாளர் வண. அத்தனயாலே சமிந்திர தேரர் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது; கோரப்பட்டிருக்கின்றது.
யுத்தத்தைத் துறந்து, விரோதத்தை மறந்து, சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும் மாற்றாரையும் மதித்து அமைதி, சமாதானத்துடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்பதே கௌதம புத்தர் உலகுக்குப் போதித்த பௌத்த சீலமாகும். அந்த பௌத்த சீலத்தையும், நற்கருணையையும், தர்மத்தையும் உலகுக்குப் போதிப்பதற்காக துறவு பூண்டு, காவியுடை தரித்த பிக்குகள் போர்முரசு அறையத் தூண்டுகின்றார்கள். கொடூர யுத்தத்தைக் கட்டவிழ்த்து, நாட்டில் இரத்த ஆறு ஓடவைத்து, பேரழிவுக்கும், போரழிவுக்கும் வழிசெய்யும் கோரச் சமருக்கு, அழைப்பு விடுக்கின்றார்கள்.
சீலம் போதித்த பௌத்தத்தின் பெயரால் நாசம் சாதிக்க முயலும் கேவலம் இத்தீவில்தான் அரங்கேறுகின்றது.
மாற்றானையும் சமத்துவமாக மதிக்கும் நற்கருணைப் போதனை, சகோதர இனத்தவனை அடிமைப்படுத்தி, அடக்கி, ஒடுக்கி மிதிக்கும் சாதனையாக மாற்றப்பட்டிருக்கும் அபத்தத்தையும் இங்குதான் காண்கின்றோம்.
மதத்தின் பெயரால் மதம் கொண்டலையும் துறவறத்தையும் இலங்கைத் தீவில்தான் பார்க்கின்றோம்.
அமைதியும், சமாதானமும் தன்னுடைய இரு கண்களாக வழிகாட்டும் ஒரு மதத்தை நெறியை தனது பிரதான மார்க்கமாகக் கொண்ட ஓர் அழகிய தேசம், அதே மதத்தின் பெயரால் மரணங்கள் மலிந்த பூமியாக மாற்றப்பட்டிருக்கும் விசித்திரத்தையும் இந்த நாட்டில்தான் நீங்கள் தரிசிக்க முடியும்.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உச்சம் பெற்று, கொளுந்து விட்டெரியும் பௌத்த சிங்களப் பேரினவாதம் நாட்டை இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது.
சிறுபான்மையினருக்கு எதிரான அந்தப் பேரினவாதத்தின் காழ்ப்புணர்வும், பகையுறவும், விரோதப் போக்கும் இன்று இலங்கைத் தீவை இத்துணை அவலத்திலும், அபத்தத்திலும் ஆழ்த்தி நிற்கின்றது என்பது கண்கூடு.
ஆனால், இக்கொடூரங்களில் இருந்து சரியான பட்டறிவைப் படித்து, திருந்தும் எண்ணம் பௌத்த சிங்கள மேலாண்மைத் திமிர்ப் போக்கில் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கைக்கோ, அல்லது அதனை இந்த அடக்குமுறை வெறியாட்டத்தில் வழிநடத்திச் செல்கின்ற பௌத்த மதத் தலைமைக்கோ இல்லை என்பதையே தேசிய பிக்குகள் முன்னணியின் தற்போதைய சீற்றம் வெளிப்படுத்துகின்றது.
வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, நீதி , நியாயம் பறிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஓரினத்தின் விடுதலை வேட்கைக்கான போராட்டமாகவே ஈழத் தமிழர்களின் சுதந்திர வேணவா மிக்க இந்த உரிமைப் போர் விரிகின்றமையை இந்தத் தீவின் நடப்புகளை கடந்த ஐந்து, ஆறு தசாப்த கால அவலங்களை தரிசிப்போர் உணர்ந்துகொள்வர்.
இந்தக் கொடூர யுத்தத்துக்கான மூலகாரணம் நதிமூலம் இன ஒடுக்குமுறை என்பது உலகறிந்த உண்மை. வெள்ளிடைமலையாகத் தோற்றும் விவகாரம்.
இன ஒடுக்குமுறையைப் பூரணமாகக் கைவிட்டு உரிமை வேண்டிப் போராடும் சிறுபான்மையினரின் நீதியான நியாயமான அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதன் மூலமே இந்தக் கொடூர யுத்தத்துக்குத் தீர்வு காணமுடியும். முடிவு எட்ட முடியும். அதுவே நிதர்சன நிலை.
அத்தகைய அமைதித் தீர்வை நாடு எட்டுவதற்கான வாய்ப்பை அரிய சந்தர்ப்பத்தை வரப்பிரசாதத்தை தந்து நிற்பது யுத்த நிறுத்தம் என்பது சமாதானம் விரும்பும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
மஹாவம்சம் போன்ற இதிகாசப் புராணங்கள் ஆழ ஊன்றி விதைத்த பேரினவாத மாயைக்குள்ளும் மேலாண்மைச் செருக்குக்குள்ளும் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கைக்கு, சிறுபான்மையினரைச் சமத்துவமாக வழிநடத்துவதற்கு வாய்ப்பைப் பெற்றுத்தரக்கூடிய இந்த யுத்த நிறுத்த வழிமுறை, வேம்பாய்க் கசக்கின்றது. சிங்களத்தின் மூளையத்தைப் பற்றிப்பிடித்து, சிறை வைத்திருக்கும் இந்தப் பேரினவாத மனவமைப்புக்குள் இத்தகைய சமரச ஏற்பாட்டுக்கு இடமேயில்லை.
அதனால்தான் சர்வதேச தலையீட்டுடன் மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் இன்று வெறும் காகிதத்தில் எழுதப்பட்டு, அக் காகிதம் உக்கி, உருக்குலைந்து போன நிலையை எட்டி நிற்கின்றது.
அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சாவுமணி அடித்து, அதன் சவப்பெட்டிக்கு இறுதி ஆணியைத் தறைவதற்கு அழைப்பு விட்டிருக்கின்றது. அந்தப் பேரினவாதச் சிந்தனைப் போக்கின் பல்வேறு முகாம்களில் ஒன்றான தேசிய பிக்குகள் முன்னணி.
சேடம் இழுக்கும் நிலையிலும் ஒருவாறு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும், அதன் பேறாய் உருவாக்கப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக்குழுவும், அந்தக் குழுவின் ஊடான சர்வதேசப் பிரசன்னமுமே முழு யுத்தத்தின் விளிம்பில் நிற்கும் இலங்கைத் தீவை, அந்த யுத்தத்துக்குள் முற்றாக மூழ்கிவிடாமல் இழுத்துப் பிடித்து, சமாளித்து வைத்திருக்கின்றது.
ஆகவே
அந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து, எறிந்து, அதன்கீழ் நிலைநிறுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுவினரை நாட்டிலிருந்து விரட்டுமாறு கோருவதும், முழு யுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதும் ஒன்றுதான்.
எனவே, யுத்த பேரிகை முழங்கி போர் முரசு கொட்டுவதற்கான ஒரு வலியுறுத்தலாகவே தேசிய பிக்குகள் முன்னணியின் இந்தக் கோரிக்கை அமைகின்றது என்பது தெளிவு.
சீலம் போதித்த பௌத்தத்தின் நாமத்தால் சீரழிவுக்கு வழி செய்யும் இந்தப் போக்குத் தொடரும் வரை இத்தீவில் அமைதியும், சமாதானமும், இன சௌஜன்யமும் சாத்தியப்படவே போவதில்லை. சாந்தி தேடியலையும் சமூகத்துக்கு அதை சாத்தியமற்றதாக்கும் இத்தகைய மத வெறித்தீவிரம் மதத்தின் பெயரால் கட்டவிழும் மதம் இலங்கையை அமைதி மீண்டும் திரும்ப முடியாத பேரழிவுப் போருக்குள் நிலையாக ஆழ்த்தப் போகின்றது என்பது நிச்சயமாகி வருகின்றது.
Wednesday, October 10, 2007
சீலம் போதித்த மதத்தின் பெயரால் நாசம் விளைவிக்கும் நடவடிக்கை
Posted by tamil at 8:44 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment