Tuesday, October 30, 2007

பயங்கரவாதம் பற்றிய ஹிலாரியின் கருத்து

[30 - October - 2007]தினக்குரல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி செனட்டர் ஹிலாரி கிளின்டன் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு கடந்த வாரம் அளித்திருந்த பேட்டியொன்றில் பயங்கரவாதம் குறித்து தெரிவித்திருந்த கருத்துகள் கவனத்தை பெரிதும் தூண்டுபவையாக இருந்தன. 2008 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான பிரசார இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் ஹிலாரியின் அக்கருத்துகள் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் முக்கியத்துவத்தை பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
`குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக ஒரு கருவியாக பயங்கரவாதம் சரித்திரம் பூராவும் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. சில இலக்குகள் கோட்பாட்டு ரீதியானவையாகவும் வேறுசில இலக்குகள் நிலப்பரப்புடன் சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கின்றன. தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கான பயங்கரவாத இலக்குகளும் இருக்கின்றன. அடிப்படையில் அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சகல பயங்கரவாதிகளையும் ஒன்றாக நோக்கமுடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்துகின்ற போராட்டமும் ஸ்பெயினில் பாஸ்க் பிரிவினைவாதிகளின் போராட்டமும் ஈராக்கில் அல் அன்பார் கிளர்ச்சியாளர்களின் போராட்டமும் தந்திரோபாயத்தில் மாத்திரமே தொடர்புபட்டவையாக இருக்கின்றன. கோட்பாட்டு அடிப்படையில் அவர்களிடையே பொதுநோக்கு பெரும்பாலும் இல்லை. ஒரு பரந்த தூரிகையைப் பயன்படுத்தி சகல இயக்கங்கள் மீதும் பயங்கரவாத வர்ணம் பூசியமை நாம் இழைத்திருக்கும் தவறுகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். தங்களது இலக்குகளை அடைவதற்கு பயங்கரவாதத்தை நாடுபவர்களைப் பொறுத்தவரை, நாம் எதற்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கு இந்தப் பரந்த தூரிகை உதவி செய்வதாக இல்லை. பயங்கரவாதிகள் தோன்றியமைக்கான மூலகாரணங்கள் மற்றும் அவர்களின் செயல்நோக்கம் ஆகியவற்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது என்று நினைக்கிறேன்' என்று ஹிலாரி குறிப்பிட்டிக்கிறார்.

இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போருக்கு தலைமை தாங்குவதாக உரிமை கோரிக்கொள்ளும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவர வரவிரும்புகின்ற பெண்மணி பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறை குறித்து இத்தகைய ஒரு விளக்கத்தை எதற்காகத் தரவேண்டியிருந்தது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. வன்முறைப் போராட்டத்தையே அவர் பயங்கரவாதம் என்று கூறுகிறார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வன்முறைப் போராட்டம் தொடர்பில் அமெரிக்கர்கள் மத்தியில் இன்று இருக்கக்கூடிய சிந்தனையிலும் அணுகுமுறையிலும் அடிப்படையில் தவறு இருக்கிறது என்று செனட்டர் ஹிலாரி கருதியிருக்காவிட்டால் பேட்டியில் இத்தகைய விளக்கமொன்றை அவர் அளித்திருக்க வேண்டிய தேவையில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற வழிமுறைகள் பயன்தரத் தவறிவிட்டன என்று அவர் நினைத்திருக்காவிட்டால், வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுகின்ற இயக்கங்கள் சகலதையும் ஒரேநோக்கில் பார்ப்பதில் உள்ள தவறை அவர் விளங்கிக் கொண்டிருக்காவிட்டால் `பரந்த தூரிகை' என்ற பதத்தை ஹிலாரி பயன்படுத்தியிருக்கமாட்டார்.

2001 செப்டெம்பர் 11 இல் நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும் விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷும் அவரது மேற்குலக நேச அணிகளும் வகுத்திருக்கும் `புதிய உலக ஒழுங்கிலே' நீதியான இலட்சியத்துக்காக வன்முறைப் போராட்டத்தை நடத்துகின்ற எந்தவொரு கிளர்ச்சிக் குழுவுக்கும் அனுதாபத்தை அல்லது ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவிக்கக்கூடிய ஒரு நாட்டைக் காண்பது முடியாத காரியமாக இருக்கிறது. உலகின் பல நாடுகளில் உள்ள அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு புஷ்ஷின் `பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' மிகவும் வசதியான கேடயமாக மாறியிருக்கிறது. வன்முறைப் போராட்டங்கள் தோன்றியமைக்கான அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பி, இன்றுள்ள பிரச்சினையே அந்த வன்முறைப் போராட்டம் தான் என்று கூறி அடக்குமுறையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலையை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர். இந்தப் போர்தான் இன்று உலகளாவிய ரீதியல் இடம்பெறுகின்ற படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருக்கிறது. நியாயப்பூர்வமானவை என்று உலக சமுதாயத்தினால் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட விபரீதம் காரணமாக அவற்றின் நியாயத்தன்மையையோ அல்லது இலட்சியக் கூறுகளையோ இழந்துவிட்டதாகக் கருத முடியாது.

அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களையடுத்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரைப் பிரகடனம் செய்த புஷ் `அமெரிக்கா பக்கம் நிற்காதவர்கள் பயங்கரவாதிகளின் பக்கம் நிற்கிறார்கள்' என்று விநோதமான வரைவிலக்கணத்தை வகுத்திருந்தார். அப்போது அந்தப் போரில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கையாளத் தொடங்கிய அணுகுமுறை குறித்து கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த சரித்திர முக்கியத்துவமிக்க கருத்தொன்றை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும்- `அமெரிக்காவும் மேற்குலகமும் உலக வரைபடத்தில் இருந்து முக்கியமான ஒரு வேறுபாட்டை ஒழித்துவிடுவதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றன. அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான வேறுபாடே அதுவாகும்'.

0 Comments: