Wednesday, October 10, 2007

அரசியல் சத்துராதிகளை அடையாளம் கண்டு கொள்வதே முதலாவது தேவை

[10 - October - 2007] தினக்குரல்

* அரசியல் வங்குரோத்தே யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதன் பிரதான காரணி
வ.திருநாவுக்கரசு

`இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வல்ல. அது தொடர்ந்தும் யுத்தம் நடத்துவதற்குரிய நிலைமைகளையே தோற்றுவிக்கும். சமாதானத்தைப் புழுதியில் எறிவது பொறுப்புணர்ச்சியற்றது இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் தேசிய தின கொண்டாட்டத்தின் போது ஜேர்மன் தூதுவர், ஜோர்ஜன் வீர்த் கூறினார். சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் ஒரு தடவை தூதுவர் வீர்த் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்து வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. எனினும், இம்முறை வீர்த் தனது உள்ளக் கிடக்கையை சற்று விரிவாக விளக்கியுள்ளார். அதாவது, "சமாதானம் கொண்டு வருவதற்கு துணிச்சல் தேவை. 20 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் நிலவியதான அரசியல் வறுமையே முதலாவது உலக யுத்தத்துக்கு வழி சமைத்தது. அன்றைய அரசியல்வாதிகள் அப்போதைய நிகழ்வுகளால் உந்தப்பட்டார்களே தவிர, நிகழ்வுகளை கச்சிதமாக கையாள முடியாதவர்களாக விளங்கினர். மேலும், அவர்கள் ஆயுதப் படையினரால் வழிநடத்தப்பட்டனர். எந்தவொரு துணிச்சலான அரசியல்வாதியும் தனக்கு உள்ளது குறுகிய காலம் மட்டுமே, சமாதானம் என்பது நாளை வரை தள்ளிப் போடக் கூடியதல்ல என்பதை உணர்ந்து கொள்வார்.இன்றைய உலகமானது ஒரு கிராமமாகியுள்ள நிலையில் நாம் தொடர்ந்து உய்ய வேண்டுமாயின் நியாயம் நிலைபெற வேண்டும்.இன்று இலங்கையில் நியாயம் நிலைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டியுள்ளது. துணிச்சலும் புரிந்துணர்வும் கொண்டு பொறுப்புணர்ச்சியுடன் இலங்கை மக்கள் மீண்டும் சமாதானத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். வேறு ஒருவரும் இதனைச் செய்ய முடியாது" என்று தான் தூதுவர் வீர்த் கூறியுள்ளார்.

"யுத்தம் என்பது சங்கிலித் தொடர் போன்றது. முடிவே இல்லாமல் தொடரக்கூடியது. அதற்கு விடைகொடுத்தால், அதாவது நாம் அதிலிருந்து விடுபட்டால் அது பெரியதொரு சாதனை எனலாம். அல்லாவிட்டால், நாம் அழிந்து விடுவோம்." இவ்வாறு பல்வேறு நாகரிகங்களை ஆய்வு செய்தவராகிய ஆங்கில வரலாற்றறிஞர் ஆணல்ட் ரோன்பி 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூறி வைத்தவர். மற்றும் முதலாவது உலக யுத்தத்தை கடுமையாக எதிர்த்தவரும், யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் பிரதமராய் விளங்கியவருமாகிய ஜோர்ஜ் கிளெமென்சு, யுத்தம் என்பது மோசமான விடயமென்பதால், அதனை படைத்தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வாளாவிருப்பது கேடு என கூறிவைத்தது ஆட்சியாளரால் நினைவுகூரத்தக்கதாகும்.

"முறிந்த பனை" என்ன கூறுகிறது

இன்று இலங்கையில் குறிப்பாக தமிழரின் சமகால நிலைவரங்களை பொறுத்தவரை 1980 களில் வெளியிடப்பட்டதாகிய `முறிந்த பனை' (Broken Palmyrah) எனும் நூலின் முடிவுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதை சற்று மீட்டுப் பார்ப்பது பொருத்தமாயிருக்கும்.

`சட்டப்புத்தகங்கள் மூலம் பல சுதந்திரங்களைப் பெற்று விட முடியும் என்பது தமிழர் மனதில் ஆழப் பதிந்துள்ளதொரு எண்ணமாகும். சட்டங்கள் முக்கியமானவையே. நல்ல சட்டங்கள் காலப் போக்கில் சமூக ரீதியான கருத்தொருமிப்பினை வேரூன்றச் செய்வதற்கு உந்து சக்தியாயிருக்கும். ஆனால், கண்ணியமும் கட்டுப்பாடும் கொண்டதொரு சமூக கருத்தொருமிப்பு இல்லாதவிடத்து, நல்ல சட்டங்கள் கூட கேட்டுக் கேள்விக்கு இடமின்றி அரசாங்கங்களால் மீறப்படலாம்.

எனவே, தமிழர்கட்கும், நாட்டின் ஏனைய மக்கட் பிரிவினருக்கும் அதி முக்கியமானது எல்லா மக்களுக்கும் நீதி கிட்டுவதற்குரிய முறையில் போர்க் கொடி உயர்த்தக் கூடியதான மக்கள் மனப்பக்குவம் என்பதாகும். மக்களின் பணி வெறுமனே அரசாங்கமொன்றைத் தெரிவு செய்துவிட்டு, மீதியை அரசியல்வாதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஒப்படைத்துவிட்டு நித்திரை கொள்வதன்றி, ஜனநாயகத்தினை வலுப் பெறச் செய்வதற்கு கண்ணும் கருத்துமாக உழைக்க வேண்டியதாகும்' இது மக்களின் ஆழ்ந்த கவனத்திற்குரியதாகும்.

ஐ.தே.க.வின் கொள்கை மாற்றம் பற்றி

இது தொடர்பாக சென்ற வார கட்டுரையில் ஐ.தே.க. வின் அரசியல் வங்குரோத்து மற்றும் சந்தர்ப்பவாதம் எவ்வளவு ஆழமானதென்பதை எடுத்துக் கூறியிருந்தேன். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வென்று தமது கடந்த கால மாநாடொன்றிலும் கொள்கைப் பிரகடனம் விடுக்கப்படவில்லையென தற்போது ஐ.தே.க முன்னணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

2002/2003 இல் சர்வதேச சட்டத்தில் (ஒஸ்லோ/டோக்யோ அறிக்கைகள்) சமஷ்டித் தீர்வினை ஆராய இணக்கம் தெரிவித்தது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. சமஷ்டி எனும் சொற்பதம் ஐ.தே.க. வின் எந்தவொரு கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடக்கப்படவில்லையெனவும், இந்தோனேசியாவில் ஒற்றையாட்சியின் கீழ் ஆச்சே (Aceh) பிராந்தியத்திற்கு போதிய அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க கூறியுள்ளார். இப்போது என்னவென்றால், அதிக பட்ச அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்பதே ஐ.தே.க. வின் நிலைப்பாடு எனவும், அதே நேரத்தில் ஆகக் கூடுதலான அதிகாரம் பகிரப்பட்டால், அது தனிநாட்டுக்கு இட்டுச் சென்றுவிடும் என இரு விதமாக முரண்பாடான கருத்துக்களும் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளர்களில் ஒருவருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கூறப்பட்டுள்ளது.

மற்றும், பிரபல தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவர் ஐ.தே.க. வின் கொள்கை மாற்றத்தினை நியாயப்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளதைக் காண முடிகிறது.அதாவது, ஐ.தே.க. அண்மையில் விடுத்துள்ள அறிக்கையின்படி ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகப்படியான அதிகாரப் பரவலாக்கமென்பதை வலியுறுத்தியிருப்பதால், அது சமஷ்டியாகக் கூட இருக்கலாமென அவ்வாய்வாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐ.தே.க. சமஷ்டியைக் கைவிட்டுள்ளதென்பது சரியான அபிப்பிராயம் அல்ல என்றும், அதே நேரத்தில் அது சமஷ்டி நிலைப்பாட்டினைக் கைவிட்டுள்ளதென்பதில் சந்தேகமில்லை எனவும் குழப்பமான வியாக்கியானம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் விசித்திரமானதென்னவென்றால், இக் கொள்கை மாற்றத்தால் சிறுபான்மைக் குழுக்கள் ஐ.தே.க. வுக்கு வாக்களிப்பதை விலக்கிக் கொள்வார்கள் என்று எண்ணுவதற்கில்லை. காரணம் யாதெனில், ஒப்பீட்டளவில் இன்றும்கூட ஐ.தே.க. சிறுபான்மையினரைப் பாதுகாக்கக் கூடியது என்பதாகும் என மேற்படி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். 1977 ஏப்ரலில் தமிழரினது அமோக ஆதரவுடன் 5/6 பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தவராகிய ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சியின் கீழ் அதே வருட ஜூலையில் தமிழருக்கு எதிராக இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1983 (கறுப்பு) ஜூலையில் வரலாறு காணாதளவு இனக் கலவரமும், உயிர், உடைமை அழிப்புகளும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன. அதற்கு முன்னர் 1981 இல் தமிழரின் அரும்பெரும் பொக்கிசமான யாழ். நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்டது. இவையெல்லாம் நடந்தேறிய பின் ஓய்வு பெற்று வாழ்ந்த காலப் பகுதியில், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமைதான் சிறந்த தீர்வாயிருந்திருக்கும். ஆனால், பதவியிலிருந்த காலத்தில் அதனை முன்னெடுப்பதற்கு தனக்கு துணிச்சல் இருக்கவில்லையென கூறியவர் ஜயவர்தன.

ஐ.தே.க. பொருளாளர் கருத்து

ஐ.தே.க. வின் பொருளாளர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில், சமஷ்டி போன்ற சொற்பதங்களைக் காட்டிலும், நம்பகத்தன்மையான தீர்வுத் திட்டமே அவசியமெனவும், தலைவர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்ற கருத்துப்படவும் முன்னர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜயவர்தனவுக்கு வாய்ப்பு இருந்தது எனவும் கூறியுள்ளார். இவ்வாறு தான் மேட்டுக் குடித் தமிழ் தலைவர்கள் ஐ.தே.க. வுக்கு வக்காலத்து வாங்கி தமிழர்களை நட்டாற்றில் விட்டவர்கள். 1983 இனக்கலவரத்தில் ஐ.தே.க. வைச் சேர்ந்த சில இன வெறித் தலைவர்கள் நேரடியாகப் பங்குபற்றியிருந்தது பகிரங்க இரகசியமாகும். எனவே, தமிழரின் வாக்கு வங்கிக்கு இலக்கு வைத்தோ, என்னவோ, தமிழரை மேலும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்வது நிச்சயமாக துரோகமானதாகும். தமது அரசியல் சத்துராதிகள் யார் என்பதை தமிழர், முஸ்லிம்களும் கூட முதற் கண் சரியாக இனங் கண்டு கொள்ள வேண்டிய காலம் நிச்சயமாக வந்து விட்டது. இலங்கையின் ஆளும் வர்க்கத்தினருக்கு இனப்பிரச்சினைக்கு திருப்திகரமான அரசியல் தீர்வு காண்பதற்கு துணிச்சலோ, விருப்பமோ ஒரு போதும் இருக்கவில்லை என்பது தெளிவு.

அகில இலங்கை தமிழர் கூட்டணியின் கருத்து

அடுத்ததாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக,ஐ.தே.க. அண்மையில வெளியிட்ட முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவையென அகில இலங்கை தமிழர் கூட்டணி பொதுச் செயலாளர் கலாநிதி கா.விக்னேஸ்வரன்,அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். சமஷ்டி, ஒற்றையாட்சி, ஐக்கியம் போன்ற மனக்கிளர்ச்சிகளைத் தூண்டும் (motive) பதங்களைத் தவிர்த்து மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு நம்பகத்தன்மையாகவிருக்கும் வகையில் ஐ.தே.க. வின் முன்மொழிவுகள் அமைந்துள்ளதாக விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்விதமான வியாக்கியானங்கள் மூலம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதகமான பாதையில் பயணித்து தொடர்ந்தும் ஏமாந்து விடக் கூடாது. ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையில் 1977 இல் ஐ.தே.க. முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தள்ளப்பட்டதற்கான வரலாற்றுக் காரணிகளை இனங்கண்டு அவர்கள் கொண்டுள்ள சகல விதமான மனக் குறைகளுக்கும் (மொழி, கல்வி, வேலைவாய்ப்பு,காணி, குடியேற்றம் அடங்கலாக) தீர்வு காணப்படும் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது. பின்பு நடந்தது என்ன என்பது மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் `போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என ஜயவர்தன முழக்கம் செய்ததையும் 11 வருட காலமாக யுத்தம் நடத்தப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ஐ.தே.க.வும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இக் கட்சிகளால் காலங் காலமாக நசுக்கப்பட்டு வரும் தமிழ், முஸ்லிம் மக்கள் முதற் கண் ஐக்கியப்பட்டு, தமக்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அர்த்தமுள்ள, ஆதரவு நல்கக் கூடிய முற்போக்குச் சக்திகளை நாடி நகர்வது இன்றைய வரலாற்றுத் தேவையாகும்.

0 Comments: