[15 - October - 2007] தினக்கரல்
* புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின பரிசளிப்பு விழாவில் சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமாகிய பெ. சந்திரசேகரன் ஆற்றிய உரை.
கல்வி என்பது ஒரு சமூகத்தின் அச்சாணியாகத் திகழ்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களுக்கே தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களே உலக வரலாறுகளில் இடம்பிடித்துள்ளன. இந்த உண்மையை கருத்திற் கொண்டு சமூக அபிவிருத்தி அமைச்சு மலையகத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகின்றது. இதன் ஒருகட்டமாக பாடசாலைகளுக்குத் தேவையான கற்பித்தல் உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதும் எமது குறிக்கோளாகும்.
எமது சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப ஒவ்வொரு வருடமும் 1053 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும். ஆனால், 100-150 இற்கு இடைப்பட்ட மாணவர்களே வருடாந்தம் மலையகத்திலிருந்து பல் கலைக்கழகத்திற்கு செல்கின்றார்கள். அதாவது 60 ஆயிரம் மாணவர்களை உள்வாங்கியுள்ள இலங்கையின் பல்கலைக்கழக முறைமைக்குள் ஏறக்குறைய 500 மாணவர்களே மலையக சமூகத்தை பிரதிபலிக்கின்றார்கள். இலங்கையிலே வட, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்கள மக்களின் சமூகத்திற்கென பல பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்த போதிலும் 15 இலட்சம் மக்களைக் கொண்டுள்ள மலையக சமூகத்திற்கு இதுகாலவரையில் ஒரு பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. இன்று நாட்டில் 2 கோடி மக்களுக்கு 14 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 14 இலட்சம் மக்களுக்கு ஒரு பல்கலைக்கழகம். ஆனால், எமக்கென்று எமது அடையாளத்துடன் ஒரு பல்கலைக்கழகம் இல்லை. மலையகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் (பேராதனை, சப்ரகமுவ, ஊவாவெல்லச) ஒன்றிலும் நமது அடையாளம் இல்லை. எமது அமைச்சு இவ்விடயத்தில் அதிகூடிய முயற்சியினை கொண்டுள்ளதோடு மலையக மக்களுக்கான தனியான பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
எல்லா இடத்திலும் இரண்டாம் பட்சமாகவே நடத்தப்படுகின்றோம். ஏதோ அவர்கள் ஒதுக்கிக் கொடுக்கின்ற ஒலைக்குடிசையிலே தஞ்சம் அடைகின்றவர்களைப் போல கல்வியிலே சிந்துகின்ற சிதறுகின்ற வாய்ப்புகளை நாம் பெற்றுக் கொள்கின்றோம். இதைத்தான் பெருமையாக பேச வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம்.
கல்வியினால் தான் சமூகம் மாறப்போகிறது, கல்வியினால் தான் மலையகம் முன்னேறப் போகின்றது என்றெல்லாம் செல்கின்றோம். ஆனால், அந்தக் கல்வியை எந்தளவுக்கு மாணவர்களால் பெறக் கூடியதாகவுள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த வசதி எதுவுமற்றவர்கள் தான் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருக்கின்றார்கள். இந்தப் பாடசாலைக்கு தோட்டப் பகுதியிலிருந்து வருவதற்கு எந்தளவுக்கு போக்குவரத்து வசதிகள் உண்டு என்பது எனக்குத் தெரியாது. வீட்டிலே போய் படிப்பதற்கு எத்தனை வீடுகளில் மின்சார வசதியோ அல்லது படிப்பதற்கான தளபாட வசதியோ இருக்கின்றது என எனக்குத் தெரியாது.
ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் படிக்கும் அதே பாடங்களைத் தான் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகளும் படிக்கின்றார்கள். அதே வினாக்களுக்குத் தன் பரீட்சையில் விடை எழுதுகின்றார்கள். அவர்களோடு போட்டி போட வேண்டிய நிலை எம் பிள்ளைகளுக்குண்டு. ஆனால், நமக்கிருக்கும் வசதிகள், வாய்ப்புகள் என்ன? மற்றவர்களுக்கு இருக்கும் வசதிகள், வாய்ப்புகள் என்ன என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
நகர்ப்புறத்தில் இருக்கும் பிள்ளைகள் பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக ரியூசன் வகுப்புக்கு செல்கின்றார்கள். ஏனைய வகுப்புகளுக்கும் செல்கின்றார்கள். அவர்களோடு போட்டி போட்டுத்தான் நமது பிள்ளைகள் பல்கலைக்கழகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
முதன் முதல் அமரர் தொண்டமான் நுவரெலியா தொகுதியிலிருந்து தேர்தலில் போட்டியிட்டு தட்டுத் தடுமாறி மூன்றாவது எம்.பி.யாக பாராளுமன்றம் சென்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கத்தில் அமைச்சராக அமர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. என்ன அமைச்சு எடுக்கலாம் என்று சிலருடன் ஆலோசிக்க, அவர்களோ பெருந்தோட்டத்துறை அமைச்சை எடுங்கள், அதுதான் எங்கள் சமூகத்திற்கு உகந்ததாக இருக்கும் என்றனர். உடனே அவர் திருப்பிக் கேட்டார். எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். தோட்ட மக்களுக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். தோட்டத் தொழில்துறை அமைச்சை எடுத்து தோட்ட நிர்வாகிகளை பாதுகாக்கச் சொல்கின்றீர்களா எனக் கேட்டார். அமைச்சை எடுத்து தோட்ட நிர்வாகிகளை பாதுகாக்கச் சொல்கின்றீர்களா எனக் கேட்டார்.
மலையக மக்களுக்கும் எனக்குமுள்ள தொடர்பில் இடைவெளியை ஏற்படுத்த நினைக்கின்றீர்களா? எனக் கேட்டார். நான் இந்த அமைச்சை பொறுப்பெடுத்தபோது அதைத்தான் யோசித்தேன். சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு, சமூக அநீதியை ஒழிக்க வேண்டுமெனில் எங்கே இருக்கின்றது சமூக அநீதி. காலிக்குப் போகின்றேன். களுத்துறைக்குப் போகின்றேன். தமிழ்ப் பெண்கள் சேலை கட்டிக்கொண்டு நடமாட முடியவில்லை. நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு எங்கள் பிள்ளைகள் செல்ல முடியவில்லை.
நமது தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகள் தமது தாய் மொழியில் ஆரம்பக் கல்வியை படிப்பதற்கு பாடசாலை வசதியில்லாத தோட்டங்கள் எத்தனையோ உண்டு. நுவரெலியாப் பிரதேசத்தில் கூட நம்தோட்டப் பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் பேசினால் தொடர்ச்சியாக தமிழில் பேச அவர்களால் முடியவில்லை. ஏன் இந்த நிலைமைகள்?
கல்வியிலேயே எமக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. மொழியை மறந்து கொண்டிருக்கின்றோம். தன்மானத்தை இழந்து கொண்டிருக்கின்றோம். அடுத்தவரின் தயவில்தான் எமது சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் அரசியல் உரிமையை இழந்து கொண்டிருக்கின்றோம்.
எங்கோ ஒரு மூலையில் இந்திய வம் சாவளி தமிழனுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து நான் நழுவ முடியாது. ஒட்டுமொத்தமாக இந்த சமூகத்தை பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவை நமக்கிருக்கின்றது.
பொலிஸ்காரனுக்கு சட்டப்படி அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். எங்காவது கொள்ளை, கொலை போன்ற அநீதிகள் நடந்தால் அவர்களை கைது செய்வதற்கு அதிகாரமிருக்கிறது. எனக்கும் அந்தப் பொலிஸ்காரன் வேலைதான். சமூக அநீதியை ஒழிக்கின்ற அமைச்சர். நான் ஒழிக்க ஆரம்பித்தால் முதலில் எமக்கு அநீதி இழைக்கின்ற அரசாங்கத்தை ஒழிக்க வேண்டும். அல்லது சமூக அநீதிக்கு துணைபோகின்ற அரசியல்வாதிகளை ஒழிக்க வேண்டும்.
எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்று எனக்கே தெரியவில்லை. இது ஏதோ பெருமைக்காக கொடுக்கப்பட்ட பெயர்ப்பலகைதான். கொஞ்சம் காரசாரமாகப் பேசினால் தீவிரவாதி, மலையகத்தைப் பற்றிப் பேசினால் மலைநாடு கேட்கின்றான், வட,கிழக்கு தமிழர்கள் பற்றிப் பேசினால் இவர் புலிகளுக்கு ஆதரவாளன் என்பதுதான் எனக்குத் கிடைக்கின்ற பெயர்கள்.
நமக்கு நடக்கின்ற சமூக அநீதிகளைப் பற்றி பேச அமைச்சருக்கே அதிகாரமில்லை. சமுதாயத்தை பாதுகாப்பதற்கு எனக்கு ஒரு அமைச்சர் பதவி, அதற்கு சில அதிகாரங்கள். இது எல்லாம் ஒரு கேலிக்கூத்து. உண்மையாகவே அரசியல்வாதிகள் யோசிக்க வேண்டும்.
இந்த நாட்டில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என அனைத்துச் சமூகத்தினரும் உரிமையோடு வாழவேண்டும் என்றால் சிறந்த மனமுள்ள அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்.
அத்தனை பேரும் இந்தநாட்டு மக்கள் என்ற கண்ணியத்தோடு அரவணைத்துச் செல்ல நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். ஏதோ வட, கிழக்கிற்கு உரிமை கொடுத்தோம் என்பதற்காக சமஷ்டி என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டது. அந்த சமஷ்டி என்ற சொற்பதத்தை அரசாங்கம் பிரேரிக்கக்கூடாது என்று அரசில் உள்ள கட்சி முடிவெடுத்தவுடன் பதில் உன்னைவிட நான் மோசமாக நடந்து கொள்வேன் என்பதை இந்த அரசியல்வாதிகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கிருக்கின்ற எல்லா அரசியல் கட்சிகளின் நிலைமையும் அதுதான். சிங்களவர்களிடம் வாக்குகேட்க வேண்டுமென்றால் இனவாதத்தை தூண்டக்கூடிய பேச்சுகள் வேண்டும். அப்போதுதான் அவனுக்கு நிறைய வாக்குகள் கிடைக்கும். இதுதான் இன்றைய நிலை.
கல்வி என்று சொன்னால் மிகப்பெரிய பொறுப்பு. கலைவிழா நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு பரிசு கொடுப்பது ஒரு அமைச்சருடைய கடமையல்ல. ஆயிரம் பேருக்கு ஆசிரிய நியமனம் கொடுப்பது பெரிய கடமை அல்ல. கல்வி என்பது முதலாம் வகுப்பில் படிக்கும் பிள்ளை பல்கலைக்கழகம் போய் பட்டதாரியாக வெளியில் வந்து சமூக அந்தஸ்தோடு தொழில் செய்யும் வரையிலும் அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் தேவை அரசிற்குண்டு. அப்படித்தான் அரசு திட்டம் போடுகிறது தொலைநோக்குப் பார்வையோடு.
மலையக மக்களை பொறுத்த வரையிலும் சகல அம்சங்களிலும் நாங்கள் அதல பாதாளத்திலிருக்கிறோம். இன்றைக்கு காலையில் பேசிக்கொண்டிருந்த விடயம். சம்பள உயர்வுப் பிரச்சினை. ஒருவருடத்திற்கு முன்பு இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள், உண்ணாவிரதமிருந்தார்கள். தமது நாட் சம்பளத்தை 300 ரூபாவாக அதிகரிக்கக் கோரினார்கள். ஆனால், யாருக்கும் தெரியாமல் ஒரு சில தலைவர்கள் போய் கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் வைத்துவிட்டு பின் இதுதான் உன் தலைவிதி வேலைக்குப் போ என்று சொன்னார்கள். மக்கள் கேட்டதோ 300 ரூபா. கிடைத்ததோ பிச்சைக்காசு. எனவே, தலைவர்களை மக்கள் துரோகிகள் என்றார்கள். இந்த ஒப்பந்தத்தை அடிமைச்சாசனம் என்றார்கள். அந்த வேகம் இன்னும் தணியவில்லை.
இந்த ஒரு வருட காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை என்றுமில்லாதளவிற்கு அதிகரித்துள்ளது. 300 ரூபா கேட்டவர்கள் இன்றைக்கு அதைவிட கூடக் கேட்கக்கூடியதாக நிலைமை மாறியுள்ளது. ஆனால், இன்றைக்கு 200 ரூபா சம்பளத்திற்கு ஒப்பம் வைத்திருக்கிறார்கள். கிடைத்த சம்பளம் அப்படியே கிடைக்கப்போகின்றது பத்து ரூபா அதிகமாக, அதைப் பெருமையாக சொல்லிக் கொள்கின்றார்கள்.
அடிப்படைச் சம்பளம் ஐந்தாயிரம் ரூபாயாம். யாருக்கு கணக்கு காட்டுகிறார்கள். 25 நாட்கள் வேலைக்குப் போனால் தான் அந்தச் சம்பளம் முழுமையாக கிடைக்கும். இதுவும் சமூக அநீதிதானே. இது நம் சமூகத்திற்கு எதிரானவர்கள் செய்த அநீதியா அல்லது நம் சமூகத்தவரே செய்த அநீதியா, யாரிடம் போய் முறையிடுவது. யாரிடம் போய் எடுத்துரைப்பது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
எல்லா அம்சங்களிலும் அநீதிகள் நிரம்பியிருக்கின்றன. நம் சமூகத்தைப் பொறுத்தவரை படிப்பிலே அநீதி, அரசியல் உரிமையில் அநீதி, நடத்தப்படும் விதத்தில் அநீதி, அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அநீதி இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைக்கும் சுமார் 200 வருடங்களுக்கு முன் கட்டிய அதே ஒழுகும் லயத்திலேயே தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் என்பது இணக்கத்தினால் ஏற்படுவது அல்ல. மாறாக உழைப்பை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.
எமது சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியான சந்தர்ப்பத்தில்தான் எமது சமூகத்தின்பால் ஒரு விழிப்புணர்வு வரும். வெறுமனே சான்றிதழ்களுக்காகக் கற்காமல் நாங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள், சரித்திரத்தை மாற்றப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் வேரூன்ற வேண்டும்.
எங்களது இளைஞர்களின் மனதில் என்றைக்கு இந்த எண்ணம் ஆழமாக பதிகின்றதோ அந்த சமூக எண்ணத்தோடு என்றைக்கு குரல் கொடுக்கின்றார்களோ அன்றைக்கு நம்மை அழுத்திப் பிடித்துள்ள அநீதிகள் எல்லாம் அழிந்துவிடும். நம்மை ஆளும் அதிகார வர்க்கத்தின் பிடிகள் எல்லாம் விலகிவிடும். அந்தப் புதிய சமுதாயத்தை நாங்கள் உருவாக்குவோம். அந்தப் புதிய சிந்தனையில் மலையகத்தை உருவாக்க முயற்சி செய்வோம்.
ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிக்கிளம்பும் விதைகள் எல்லாம் ஆலவிருட்சமாக வளர்ந்திட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் எதிர்காலத்தை பற்றிச் சிந்திக்கும் போதுதான் தன் இலக்கினை அடைய முடியும். நீங்களே விதைகள், உங்களை வளமாக்கும் உரமாக்கிகள் தான் இந்த ஆசிரியர்கள். நாளைய உலகம் நமதாகட்டும்.
Monday, October 15, 2007
`தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதில் மோசமாக நடந்துகொள்வது யாரென்பதில் இரு பிரதான சிங்களக் கட்சிகளிடையே போட்டி'
Posted by tamil at 7:08 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment